Monday 23 November 2015

எங்க வீட்டு போலீஸ் – 7

கம்பியூர் ஊர்க்கூட்டம் கார சாரமாக நடந்துக் கொண்டிருந்தது.

‘கொலயூர் காரணும் ஈட்டியூர் காரணும் ஒருத்தனை ஒருத்தன் குத்திகிட்டு சாவறதுக்கு கம்பியூர்தான் கிடைச்சுதா, இங்க இருக்கிறவனுங்க எல்லாம் என்ன பொட்டை பசங்களா

‘எல்லாத்துக்கும் காரணம் நம்ப ஊர் பெரிசுங்க சரியில்லஇளைஞன் ஒருவன்

‘எல குறுக்கால் பூந்து ரெண்டு கூட்டத்தையும் வெட்டி எரிஞ்சுருக்குனும், விட்டுபுட்டு இங்க உட்கார்ந்து பஞ்சாயத்து பேசிகிட்டு இருக்கீங்கமற்றொருவன்

‘எலெ, பெரியவங்க சிரியவங்க வித்தியாசமில்லாம பேசிகிட்டு இருக்கீங்க,பெரியவர்

‘யோவ் பெரிசு, பொத்திகிட்டு சும்மா இரு, நேத்து ராத்திரி தியேட்டர்ல நெருப்புல போயி பிள்ளைங்களயும், அடிபட்டவங்களையும் காப்பாத்துனது எங்கள மாதிரி வயசு பசங்கதான், பஞ்சாயத்துன்னா மட்டும் வாயை பொத்திகிட்டு நிக்கனுமாஇளைஞன்

‘செத்தவங்களுக்கு என்ன பதில் சொல்ல பொகுது இந்த பஞ்சாயத்துஇன்னொருவன் கேட்டான்

‘என்ன நாட்டாண்மை சும்மா இருந்தா எப்படிவயதானவர்

நல்லமுத்து சற்று பீதியுடன் அமரிந்திருந்தார்.  ‘சொல்லுங்கல, என்ன செய்யனும்னு சுரத்தில்லாமல் பேசினார்.

நேற்று இரவு போலீஸ் ஸ்டேஷனில் வாக்குமூலம் கொடுத்தது அவருக்கு பயமாகவே இருந்தது. இக்பால் நம்மளை குறி வச்சுட்டானோன்னு சந்தேகப்பட்டார்.  டிஎஸ்பியிடம் முறையிட்டு வாக்குமூலம் தராமல் தப்பிக்கலாம் என்று பார்த்தால், அவரை நெருங்கவே முடியவில்லை.  விநாயகத்திடம் பேசிப் பார்த்தும் பயனில்லை.  இக்பால் சஸ்பென்ஷன் ஆகிவிட்டால் கொஞ்சம் நிம்மதி. தியேட்டரில் வெடி குண்டு பதுக்கி வைத்ததாகவும் அதுதான் தீப்பிடிக்க காரணம் என்று தானும் நம்புவதாக டிவியில் சொல்ல போய் இப்போது தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டது போல் உணர்ந்தார். 

‘கவர்மெண்டுலருந்து என்ன குடுப்பாங்களாம்அவரின் சிந்தனையை சத்தம் கலைத்தது

‘தாசில்தார் இன்னைக்கு வர்ரார், வந்துதான் முடிவு பண்ணுவாங்க நல்லமுத்து

‘அவங்க முடிவு பண்ணட்டும், நம்ம முடிவு என்ன கோபமாகவே வந்தது சத்தம்

‘ஆளுக்கு ஒரு லட்சரூபா வாங்கணும்இன்னொருவர்

‘இன்ஸ்பெக்டர் என்ன சொல்றாருண்ணு பொருத்துதான் தாசில்தார் முடிவு பண்ணுவார் நல்லமுத்து. ‘இன்ஸ்பெக்டர சஸ்பென்ட பண்ணூவங்கண்ணு வேர பேசிக்கிறாங்க

‘ஏன், அவர ஏன் சஸ்பென்ட் பண்ணனும், அவராலதான் சாவு இத்தோட நின்னது

‘அவரு என்னல பண்ணினாரு நல்லமுத்து

‘அவரு என்னல பண்ணல, நீர் எங்கல போயிருந்தீங்க, அவர்தான் தீயணைப்பு படை வர்ரதுக்கு மின்னடி தியேட்டர்குள்ள போன முதல் மனுஷன், அவர் போன தைரியத்துலதான் நாங்களும் பின்னால போனோம். எத்தனை பேர காப்பத்தினோம்னு எங்களுக்குத்தான் தெரியும்

‘நீர் வெளியில நின்னிகிட்டு டிவிக்கு பேட்டி கொடுத்துகிட்டு இருந்தீரு

‘அவனவனுக்கு முடிஞ்சதான் செய்ய முடியும்பெரியபாண்டி நல்லமுத்துவிற்கு வக்காலத்து வாங்கினார்.

‘தெரியுதல, அடக்கி வாசிங்க ஒரு இளைஞன் ஆவேசமாக கத்தினான்.

‘செத்தவங்களுக்கு ஒரு லட்சம், அடி பட்ட எல்லாருக்கும் ஐம்பதாயிரம், முடிவு பண்ணுங்க
‘என்னய்யா சொல்றீங்க நல்லமுத்து கேட்டார்.

‘எங்களுக்கு சம்மதம்தான், இன்னும் கூட கொடுத்தாலும் சரிதான். பொண்டாட்டி செத்தவனெல்லாம் திரும்ப கண்ணாலம் பண்ணிக்க வேண்டாமா?

நல்லமுத்து செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தார்.  ஏன் இன்னும் செய்தி வரல, என்று பீதியுடன் இருந்தார்.

‘பொணத்தை எல்லாம் ஒன்னா ஒரே ஊர்வலமா கொண்டு போவனும்னு நான் வேண்டுகோள் வைக்கிறேன்பெரிய பாண்டியின் குரல் கேட்டு நிதானத்திற்கு வந்தார் நல்லமுத்து

‘என்ன நாட்டாண்மை எல்லோரும் கேட்க

‘பொணத்துக்கு சொந்தக்காரங்க ஒத்துகிட்ட எனக்கு சரிதான் நல்லமுத்து

‘இப்ப நடந்த பிரச்சனை போதாதுன்னு புதுசா வேற பிரச்சனை கிளம்பனுமா பெரியவர் ஒருவர் கேட்டார்.  எல்லோரும் அவரை திரும்பிப் பார்த்தனர்.

‘செத்து போனது பல சாதிக்காரங்க, ஒன்னா எப்படி கொண்டு போகமுடியும் அவரே பதில் சொல்ல, 
‘அதானஎன்று சலசலப்பு உருவானது.

‘என்ன பெரியபாண்டி எப்படி நீ வேண்டுகோள் வைக்கமுடியும், நாட்டண்மையும் சரின்னு தலையாட்டுராரு

‘இவனுக திருந்த மாட்டானுங்க என்றபடி ஒருசில இளைஞர்கள் அலுத்துக் கொண்டனர்.

நல்லமுத்துவின் செல்போன் அலற எடுத்தார். ‘சொல்லு காளி

‘அண்ணன், எஸ்பி ஆபிசுல, இன்ஸ்பெக்டரோட சஸ்பென்ஷன் ரெடியாயிடுச்சு, எஸ்பி கையெழுத்துக்காக வெயிட்டிங், டிஎஸ்பி கொஞ்ச நேரத்துல இங்கேருந்து ல்ட்டரோட புறப்படுவாருன்னு பேசிக்கிறாங்க

நல்லமுத்துவின் முகத்தில் உற்சாகம் பிறந்தது.  மாவட்ட எஸ்பி ஆபிசில் அங்கு என்ன நடக்கிறது என்று வேவு பார்க்க காலையிலெயே காளியை அனுப்பிவிட்டார்.

‘பெரியபாண்டி, உன் வேண்டுகோள வாபஸ் வாங்கனும், இப்ப இன்னொரு பிரச்சனை வேணாம் கூட்டம் கலையட்டும் என்று சொல்லியபடி, ‘ஏய் பெரியபாண்டி, இங்கால வா என்று அழைத்துக் கொண்டு தனியாக நடந்தார்.

‘இக்பால் சஸ்பென்ட் ஆனாதான் நமக்கு நல்லது.  இது வரைக்கும் போலீஸ் யார் மேலயும் ஆக்‌ஷன் எடுக்குல காரணம் அவனுககுள்ளயெ பிரச்சனை.  இக்பாலுக்கு சஸ்பென்ஷன் வரலைன்னா, அவன் சும்மா இருக்க மாட்டான். நல்லமுத்து சொல்லியபடி நடந்தார்.

‘அதுல உனக்கு என்னல பிரச்சனை

‘என்னல கிறுக்குத்தனமா பேசுற, ஏற்கனவே ஊருல யார்யார அரெஸ்ட் செய்யனும்னு லிஸ்ட் எழுதி வச்சுருக்கிறானுங்கல, யார் உள்ள போனாலும் பிரச்சனை நமக்குதான், மேல நம்பள சும்மா விடமாட்டானுங்க, டிஎஸ்பி வந்ததுனால இன்னும் ஒன்னும் நடக்கல, பெரிய ஆபிசர் இருக்கும்போது இக்பால் ஒன்னும் பண்ணக் கூடதுன்னு இருக்கிறான் நல்லமுத்து

‘அண்ணேன் எப்படியாவது இக்பால இன்னைக்கு ஊரைவிட்டு அனுப்பிடனும், டிஎஸ்பியும் நம்ப பக்கம்தான், அப்படி நடக்குலனா?

‘அவன தூக்கிட வேண்டியதுதான்

************

‘வருஷா வருஷம் இதே எழவா போய்ச்சு, ராத்திரி புல்லா தூக்கமெ இல்ல ஏகாம்பரம் புலம்பியபடி நாற்காலியில் அமர்ந்தார்.  ‘ஏய் கந்தசாமி, ஊர்க்காரனுங்க என்ன பண்ணப் போறானுங்க, எப்ப பொணத்தை எடுப்பானுங்களாம்

‘தாசில்தாருக்காக வெயிட் பண்ணிகிட்டு இருக்கானுங்க ஏட்டய்யா, நிவாரணம் வாங்கமா எரிக்க மாட்டானுங்க

‘ரத்தினம், யோவ் சத்தமிட்டார் ஏட்டு

‘என்ன ஏட்டய்யா அங்கிருந்தபடியே பதில் சொன்னார்.

‘ஸ்பெஷல் போர்சு எல்லாருக்கும் காலையில சாப்படு அனுப்பிட்டியாய்ய, விநாயகம் சார் வந்திடுவார்

‘அனுப்பிட்டேன் ஏட்டய்யா, ஆமாம் இந்த அரெஸ்ட் லிஸ்ட் ரெடி பண்ண சொன்னாரே இன்ஸ்பெக்டர், வாரெண்ட் வாங்கறதுக்கு பார்ம் ரெடி பண்ணட்டுமா

‘ரத்தினம் சும்மா இருக்க மாட்டியா, அவரே போகப்போறாரம், இதுல அரெஸ்ட் வேற, எல்லா பயலும் ஒரு வாரத்துல வெளிய வந்துடுவானுங்க, அவனுங்க மூஞ்சியில முழிக்கிறது யாரு

‘ஏட்டய்யா, ஏதாவது புதுசா தகவல் வந்திருக்கா கந்தசாமி மெதுவாகக் கேட்டான்

‘ஆயிடும்னு நினைக்கிறேன், இன்னும் எஸ்பி சார் கையெழுத்து போடல, விநாயகம் சார்கிட்டதான் பொறுப்பு கொடுப்பாங்க அடுத்த இன்ஸ்பெக்டர் வர வரைக்கும்

‘இந்த மனுஷன் வந்ததிலிருந்து மூணு மாசமா ஒரே டென்ஷன், வருமானமும் குறைஞ்சு போச்சு, நிம்மதியா ரெண்டு நாளு வீட்டுல இருக்க முடியல, சரி ஆகலன்னா?கந்தசாமி இழுத்தான்

‘கஷ்டம்தான் இந்த ஆளூ சும்மா இருக்க மாட்டார், லிஸ்ட வச்சுகிட்டு ஒவ்வொருத்தனா பிடிக்க ஆரம்பிச்சுடுவாரு ஏகாம்பரம்

‘அத நினைச்சாத்தான் பயமாயிருக்கு,  ரோட்டுல நடக்க உடமாட்டாணுங்க, மேலேருந்து வர்ர வருமானத்துக்கு பிரச்சனை இல்லாம காப்பாத்துடா ஆண்டவா கையெடுத்து கூரையை நோக்கி கும்பிட்டான் கந்தசாமி

‘வீட்டுக்காரம்ம வந்திருக்காங்கன்னு கேள்விபட்டேன் ஏகாம்பரம்.

கந்தசாமியின் கண்கள் பளபளத்தது, ‘ஆமா, ராத்திரி மூணு மணிக்கு கார்ல வந்தாங்க, பார்த்தேன், சந்தானம் தான் அட்ரஸ் சொல்லி அழைச்சுகிட்டு போனான். கந்தசாமி

‘ஆளு எப்படி பார்த்தியா ஏகாம்பரம் எச்சில் வழிய கேட்டார்.
‘சூப்பரு ஏட்டய்யா அய்யோ, இப்படி ஒருத்தி பொண்டாட்டியா இருந்தா, டூட்டியாவது மண்ணங்கட்டியாவது
‘விவரத்த சொல்லுடா ஏகாம்பரத்தின் மீசை துடித்தது. 
‘சும்மா தக்காளி பழம் மாதிரி, என்ன அழகு, டவுன் பொம்பளைனா, டவுன் பொம்பளதான், என்ன நடை, என்ன அழகு, முண்ணூறு கிலோ மீட்டர் கார்ல வந்தமாதிரியே தெரியல் அவ்வளவு பிரஷ்
‘அப்புறம்
‘அப்புறம் என்ன, கொஞ்சம் முகமெல்லாம் அழுதமாதிரி இருந்துச்சு, ஆனா, ஏட்டய்யா, பார்ததுலேருந்து என்னால் அடக்க முடியல
‘ஹும், இருக்காத பின்ன பெருமூச்சு விட்டார்.  ‘நான் பார்க்காம போயிட்டனே ஏகாம்பரம் ‘வாடகைக் கார்லய இவ்வளவு தூரம் ஒத்தைக்கு வந்தது, தைரியமான பொண்ணுதான்.
‘சொந்த கார் மாதிரி தெரியுது ஏட்டய்யா
‘மனுஷன் ஒத்தையில இருந்தார், இப்ப பொண்டாட்டியும் வந்து சேர்ந்திடுச்சு, நல்லதுதான் எதுக்கும் மேல சொல்லி ஒரு வலைய போட்டு வைப்போம், ரொம்ப அடம் பிடிச்சா, கிளிய மேல அனுப்பி வேலய காட்டிப்புடுவோம்ல.
***************
‘ஏன் இதுவரைக்கும் போலீஸ் எந்த ஆக்‌ஷனும் எடுக்கல, யாரையும் அரெஸ்ட் பண்ணல செய்தியாளரின் கேள்விக்கு விநாயகத்திடம் உடனடியாக எந்த பதிலும் இல்லை.
யோசித்தார் ‘டிஎஸ்பி வந்தபிறகுதான் என்ன ஆக்‌ஷன் எடுக்கப் போறோம்னு தெரியும் நிறைய பேர் இறந்து போனதுனாலயும், தியேட்டர்ல வெடிகுண்டு பதுக்கி வச்சுருந்ததுனாலயும், இப்போதைக்கு தியேட்டர் ஓனரைதான் நாங்க கஸ்டடியில எடுத்திருக்கிறோம்
டிவி கேமராக்காள் முழுவதும் விநாயகத்தை சுட்டுக் கொண்டிருந்தன.
‘அப்போ தியேட்டர்ல வெடிகுண்டு பதுக்கி வச்சுருந்தது உண்மையா?
‘தடய விசாரணை முடிஞ்சபிறகுதான் சொல்லமுடியும்
‘இன்ஸ்பெக்டர் இக்பால்தான் மிகவும் போராட நிறைய பேர காப்பத்துனதா மக்கள் பேசிக்கிறாங்களே
‘அது எனக்குத் தெரியாது, நாங்க வந்தப்ப அவர் அங்க இல்ல, எங்க இருந்தாருனு எங்களுக்குத் தெரியாது, நீங்கதான் சொல்றீங்க அவர் தியேட்டர்ல எல்லாரையும் காப்பத்திக்கிட்டு இருந்ததா
‘அவர சஸ்பென்ட் செஞ்சாச்சுன்னு சொல்றாங்க
கேள்வி முடிவதற்குள் இக்பாலின் ஜீப் வேகமாக வந்து நின்றது. விநாயகத்தைவிட்டு செய்தியாளர்களும், டிவி கேமராக்களும் ஜீப்பை விட்டு இறங்கும் இக்பாலை சுற்றிக் கொண்டணர்.
கம்பீரமான தோற்றம், உயரம், கூட்டத்தை நின்று பார்த்த விதம், அசத்தலான பார்வை, மடிப்பு கலையாத சீருடை, எல்லாம் சேர்ந்து செய்தியாளர்களையும் அங்கு கூடியிருந்தவர்களையும் அவனை நோக்கி கவர்ந்தது.  இப்போதுதான் அவனை அவர்கள் முழுதாகப் பார்த்தார்கள். வேகமாக அவனை நெருங்கினார்கள்.
‘சார் உங்கள சஸ்பென்ட் செஞ்சிட்டுதா பேசிக்கிறாங்க
கையைத்தூக்கியதும் கேள்வி பாதியிலேயெ நின்றது.  ‘உங்க கேள்விக்கெல்லம் இன்னும் இரண்டு மணி நேரத்துல பதில் கிடைக்கும் சொல்லியபடி ஸ்டேஷனை நோக்கி நடந்தான்.
‘ஏகாம்பரம்சத்தமிட, வேகமாக வந்தார்.
‘இன்னும் பத்து நிமிஷத்துல உங்க எல்லோரட ஏசிஆர் பைல் எல்லாம் எடுத்து கார்ல வய்யுங்க
‘அய்யா... என்று இழுத்தவரை, ‘என்னய்யா இழுக்குற, சொல்றத உடனே செய் ஏகாம்பரம் கலகலத்துப் போய் நகர விநாயகம் எதிரில் வந்து அமர்ந்தார்.
‘இக்பால், நீங்க சஸ்பென்ட் ஆகப் போறீங்க
அவரை முறைத்துப் பார்த்தான் ‘ஆர்டர நீங்க பாத்திங்களா விநாயகம்
‘இல்ல... டிஎஸ்பி
‘சொன்னாரா?
எச்சிலை விழுங்கினார் விநாயகம்.  ‘டிஎஸ்பி வந்தபிறகு நீங்க என்ன ஆக்‌ஷன் வேணுமுனாலும் எடுக்கலாமே
‘இது என் ஸ்டேஷன், நான் தான் இன்சார்ஜ், என்ன செய்யனும், எப்ப செய்யனும்னு எனக்குத் தெரியும், நீங்க எனக்கு உதவி செய்யத்தான் வந்திருக்கீங்க, உத்தரவு போட வரல, முடிஞ்சா உதவி செய்ங்க, இல்லண்ணா வெளிய போங்க
‘இக்பால் நானும் ஒரு இன்ஸ்பெக்டர், மரியாதயா பேசுங்க
‘என்னய்யா இன்ஸ்பெக்டர் நீ, நேத்துலேருந்து என்ன கிழிச்ச இங்க, உனக்கு டூட்டி சம்பவம் நடந்த இடத்துலயா இல்ல இங்கயா விநாயகம் வாயடைத்துப் போனார். 
இக்பாலின் மொபைல் சத்தமிட்டது.  எடுத்தவன் விநாயகத்தைப் பார்த்தான் ‘கொஞ்சம் வெளிய இருக்கீங்களா, this is confidential call’ என்றதும் மெதுவாக அவர் எழுந்து வெளியில் செல்லும் வரை அவரையே பார்த்தவன் ‘சாரி கதவ சாத்திட்டு போங்க என்றான்.
*******************
ஸ்டேஷன் மிகவும் அமைதியாக இருந்தது.  இக்பாலின் சஸ்பென்டை ஆவலாக எதிர்பார்த்த அனைவரும் சோர்ந்துபோய் சோகத்துடன் என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் ஒருவருக்கொருவர் சத்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தனர்.  விநாயகம் வெளிரிப் போய் வெளியில் வந்ததைப் பார்த்த ஏகாம்பரமும் கந்தசாமியும் சத்தமில்லாமல் எழுந்து தரையில் குனிந்தபடி நின்றனர்.  விநாயகம் வேகமாக ஸ்டேஷனை விட்டு வெளியேறினார்.
‘ஏட்டய்யா, சஸ்பென்ஷன் அவருக்கா, இல்ல நமக்கா, எதுக்கும் மேல செய்தி அனுப்பி வச்சுடுங்க, அப்புறம் நம்ப தலை நசுங்கிடும்’  கந்தசாமி காதை கடித்தான்.
ஏகாம்பரம் கொண்டு வந்த பைல்கள் அனைத்தையும் சந்தானத்தை அழைத்து ஜீப்பில் வைக்க சொன்னான்.  என்ன நடக்கிறது அல்லது என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் வெலவலத்து போய் நின்றிருந்தார் ஏகாம்பரம்.
‘ஸ்பெஷல் போர்ஸ் இன்சார்ஜை ஸ்டேஷனுக்கு வரச்சொல்லுங்க என்ற கட்டளையை கேட்ட ரத்தினம் வயர்லெஸ் மூலமாக செய்தி அனுப்பினார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்பெஷல் போர்ஸ் ராம் வந்து விரைப்பாக சல்யூட் அடித்தார்.
‘ராம், கூடுதலா இருபது மென் வர்ராங்க, அவங்கள வச்சுகிட்டு கிரிமேஷன் முடியற வரைக்கும் பாதுகாப்பு கொடுங்க, கிரிமேஷனுக்கு முன்னால இறந்த எல்லோருக்கும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்ங்க.  எந்த அசம்பாவிதம் வராம பார்த்துக்கணும், ஏதேனும் unusual இருந்தா எனக்கு செல் போன்ல தொடர்பு கொள்ளுங்க, ஸ்டேஷனலுருந்து எந்த கான்ஸ்டபிலும் உங்களுக்கு உதவிக்கு எடுத்துக்கக் கூடாது. you need to use your own force only.’
‘யெஸ் சார்
‘நீங்க போகலாம்....... ரத்தினம் சத்தமிட்டான்.
‘நான் எஸ்பி ஆபிசு வரைக்கும் போறேன், ஸ்டேஷன் இன்சார்ஜ் நீங்கதான், வர்ரவன் போரவன் எதுவா இருந்தாலும் எல்லாத்தையும் உடனெ டைரியில எழுதி ரெக்கார்ட் பண்ணி வைக்கனும்.
‘ஏகாம்பரம் சத்தமிட்டான்.
‘சார் வந்து நின்றார்.
‘கலவரம் நடந்த இடம், தியேட்டர் ரெண்டுக்கும் நீங்கதான் இன்சார்ஜ். விநாயகம் சாரும் அங்கதான் இருப்பார்.  தீயணைப்பு படையோட இன்ஸ்பெக்‌ஷன் முடியற வரைக்கும் அதுக்குள்ள போறதுக்கு யாருக்கும் அனுமதி கிடையாது. அவர் சொன்னாரு இவரு சொன்னாருன்னு யாரும் உள்ள போகக்கூடாது. அத்துமீறி யாரும் முயற்சி பண்ணினா, ஸ்பெஷல் போர்ஸ் ராம் கிட்ட இன்பார்ம் பண்ணுங்க, அவர் பார்த்துப்பார், கூட தெவைக்கு எத்தனை கான்ஸ்டபிள் வேணுமோ அத்தனை பேர வச்சுகங்க, டூட்டி ரெக்கார்டுல எல்லோர பெயரையும் பதிவு பண்ணிடனும்
‘சரிங்க சார் சொல்லிவிட்டு வெளியெறினார்.
ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தவனை மீண்டும் பத்திரிக்கையாளர்கள் சுற்றிக் கொள்ள
‘எஸ்பி என்னை கூப்பிட்டுருக்கார், வந்த பிறகுதான் எந்த சேதியாக இருந்தாலும் உங்களுக்கு கிடைக்கும், தயவு செய்து நீங்க போகலாம் என்று சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறினான்.
விநாயகம் சற்று தூரத்தில் தனது ஜீப்பில் அமர்ந்தபடி இக்பால் செல்வதையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.
‘என்ன சார், இவன் என்ன இவ்வளவு பெரிய ஆளா, இவன சஸ்பென்ட் பண்றதுக்கு இவ்வளவு பார்மலிட்டியா, ஏன் இவ்வளவு தயங்கறீங்க, எதுவா இருந்தாலும் முளையிலேயெ கிள்ளி வைக்கனும், இல்லன்னா ஆபத்து நமக்குத்தான் விநாயகம் விருத்தச்சலத்திடம் பொருமி கொட்டினார். ‘என்னயே வெளிய போவ சொல்லிட்டான் சார், என் சர்வீஸ் வயசு இருக்குமா இவனுக்கு அழாத குறையாக பேசினார்.
‘லட்டர் டைப் பண்ணி ரெடியா எஸ்பி டேபில இருக்கு, அவன் இங்கதான வர்ரான், எஸ்பியே அவர் கையில கொடுத்துடுவார், நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க, அவன் புறப்பட்டாச்சா
‘ஆன், இப்பத்தான் புறப்பட்டான், பிரச்சனை மேல போயிடமா பாத்துகங்க, அப்புறம் யாருக்கும் நல்லதுல்ல, அப்புறம் இன்னொரு விஷயம், அவன் பொண்டாட்டி வந்திருக்கா, சேதியெ மெல சொல்லிட்டேன்போனை வைத்தார் விநாயகம்.

(தொடரும்) 

Wednesday 11 November 2015

எங்க வீட்டு போலீஸ் – 6

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து நின்ற இக்பாலின் கண்களுக்கு வெளியில் காத்திருக்கும் செய்தியாளர்கள், இங்கும் அங்கும் போய்க் கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ்கள், கோபத்துடன் கூடி இருக்கும் பொது மக்கள் கூட்டம் எதுவும் அவனது கவனத்தை ஈர்க்கவில்லை.  எங்காவது போய் மறைந்து நின்று அழவேண்டும் பொல் தோன்றியது. நெருங்கி வந்த பத்திரிக்கையாளர்களையும் தொலைக் காட்சி நிரூபர்களையும் கையெடுத்துக் கும்பிட்டு, பேசுவதற்கு எதுவுமில்லை என்றபடி கையசைத்துவிட்டு ஜீப்பை நோக்கி நடந்தான்.

சந்தானம் வேகமாக வந்து ஜீப்பை ஸ்டார்ட் செய்தான். ‘எங்க சார் போகனும் கேட்டவனின் முகத்தையே சற்று நேரம் பார்த்தவன் ‘வீட்டுக்கு போ என்றான்.

‘சார் என் சம்சாரத்துக்கிட்ட சொல்லி வீட்டுல உங்களுக்காக சமைக்க சொல்லியிருக்கேன், போகும்போது வாங்கிட்டு போயிடலாமா என்று கேட்டவனின் முகத்தைப் பார்த்த இக்பால் ஒரு நல்ல வார்த்தையை கேட்ட ஆசுவாசத்தில் ‘போகலாம் என்று புன்னகைத்தபடி சொன்னான்.

ஜீப் நிதானமாக சென்று கொண்டிருந்தது.  ஒன்பது மணிக்கே அடங்கிவிடும் கம்பியூர் இப்போது கலகலத்துப் போய் எங்கு பார்த்தாலும் ஒப்பாரிகளும், கூக்குரல்களுமாக சின்ன பின்னாமாகி கிடந்தது.  பொகும் வழி முழுவதும் அங்கங்கே கான்ஸ்டபில்கள் நின்று சல்யூட் அடிப்பதை பொருட்படுத்தாமல் இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருக்கும் மக்களை பார்த்தபடி பயணித்துக் கொண்டிருந்தான். ஒருவனையும் விடக்கூடாது என்று மனம் பொறுமிக் கொண்டிருந்தது.

‘அய்யா, தீயணைப்பு படையும் ஆம்புலன்சும் வர்ரதுக்கு முன்னாடி எல்லா டிவி சேனல்லருந்தும் ஆளுங்க வந்திட்டாங்க, நீங்க தியேட்டர்ல தீயோட போராடிட்டு இருக்கும்போது, என்னமோ இங்க தீவிரவாதிங்க தாக்குதல் நடத்தினது மாறி எல்லா டிவியிலயும் செய்தி போட ஆரம்பிச்சுட்டாங்க.  எஸ்பி ஆபிசுலருந்து அரை மணிக்கு ஒரு டெலிபோன்.  ஆளுங்கட்சி, எதிர்கட்சின்னு எல்லா கூட்டமும் மாத்தி மாத்தி டிவியில பேட்டி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.  இக்பாலுவிற்கு இதயத்தை யாரோ கம்பியைவிட்டு கடைவதுபோல் வலிக்க ஆரம்பித்தது.

‘டிஎஸ்பி வந்ததுலருந்து இன்னும் பிரச்சனை பெரிசாயிடுச்சு, அவரும் என்னென்னமோ சொல்லி சமாளிச்சாரு, ஆனா, டிவிக்காரங்க மாத்தி மாத்தி சுவராசியமா என்ன சொன்னா மக்கள்கிட்ட அவங்க சேனலோட வியாபாரம் கூடும்னு தேவையில்லாததையெல்லாம் பேசி பெரிசு படுத்திட்டாங்க.  நீங்க இருந்தா இப்படி நிச்சயமா நடக்க விட்டிருக்க மாட்டீங்க. சொல்லிக் கொண்டே போனான் சந்தானம்.

‘தியேட்டருல வெடிகுண்டு பதுக்கி வச்சிருந்ததுனாலதான் இவ்வளவு பெரிய விபத்து நடந்ததாவும், அதுக்கு காரணம் போலீஸ் சரியா கண்காணிக்கலனு டிவியில விவாதம் பண்றாங்கன்னு என் சம்சாரம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன்ல சொன்னா

இக்பாலுவிற்கு உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது.  இது என்னடா புது கலாட்டா என்று மனம் உதற ஆரம்பித்தது. பேசாம சஸ்பென்ஷன வாங்கிட்டு போயிடலாமா என்று நினைத்தான்.  என்ன நடக்குது இங்க, நிலை கொள்ளாமல் தவித்தான்.  இது என்ன ஊர், ஏன் இப்படி எல்லாம் கொடூரமா அடிச்சுகிட்டு சாவறானுங்க, கையாலாகத போலீஸ் ஸ்டேஷன், கண்டுக்காத மேலதிகாரிங்க, குளிர் காயிர அரசியல்வாதிங்க, பொய்களை கூசாமல் பேசும் டிவி சேனலுங்க, மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாங்கம், பாவப்பட்ட சாதாரண குடி மக்கள்.  சாகறதெல்லாம் சாதாரண மக்கள். தப்பு எங்க?  நான்தான் தப்பா சிந்திக்கிறேனா? எதார்த்ததோடு ஒத்து போக மறுக்கிறேனா? நல்லவைகள் தானாக நடக்கும்னு எதிர்பார்க்கிறேனா? கடமை, சாதிக்கனும் அப்படி இப்படின்னு மனைவி குடும்பம் என்று ஒருத்தரை பத்தியும் கவலைப் படாம, உதாசீனப்படுத்திவிட்டு இப்படியெல்லாம் கஷ்டப்படர நான் உண்மையிலேயே கிறுக்கணா?  சரியான அணுகுமுறை என்னிடத்தில் இல்லையா?  ஆறுதலா ரெண்டு வார்த்தை சல்மாகிட்ட பேசமுடியல, பிள்ளை நல்லா இருக்கானான்னு கேட்க முடியல, நான் யார்?

வீட்டு வாசலில் கார் வந்து நின்றது.  தெரு முழுக்க கூட்டம் கூடியிருந்தது.  போலீஸ் ஜீப் வந்து நிற்கும் சத்தம் கேட்டு மக்கள் ஒதுங்க, பக்கத்து வீட்டிலிருந்து அழுகுரல் வருவதைக் கேட்ட இக்பால் மேலும் கலங்க ஆரம்பித்தான்.  அந்த இரண்டு பிள்ளைங்களுக்கு எதுவும் ஆயிடுச்சோ? இதயத்தை யாரோ ஓங்கி சம்மட்டியால் அடித்தது போன்று ஒரு நிமிடம் வெலவெலத்து நின்றான்.  கூடாது, அந்த பிள்ளைங்கள, காலையிலதான் பார்த்துட்டு போனேன். வெறும் காயம் மட்டும்தான் பட்டிருக்கனும் என்ற மனதுக்குள் சொல்லிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

‘அய்யய்யோ இன்ஸ்பெக்டர் அய்யா... இந்த கொடுமைய பாக்க வந்திட்டீங்களா?என்று அலறியவாறு பிள்ளைகளின் தாய் கோமதி ஓடி வந்து இக்பாலின் மேல் விழுந்தாள்.  இக்பாலின் கண்களில் பொலபொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.  காலையிலதான் இரண்டு பிஞ்சு முகங்களைப் பார்த்துவிட்டு என்றைக்கும் இல்லாமல் இன்று கொஞ்சம் பேசிவிட்டுப் போனான்.
‘நல்ல படிங்கடான்னு சொன்னீங்களே இப்படி தூக்கிகிட்டு போயிட்டானே ஆண்டவன் என் ரெண்டு பிள்ளைங்களையும், அய்யய்யோ சுரேஷ், ரமேஷ் எழுந்திருங்கடா, பக்கத்து இன்ஸ்பெக்டர் மாமா வந்துருக்காரு பாருங்கடா, இன்ஸ்பெக்டர் மாதிரி நாங்களும் போலீசுக்கு படிக்கப் போறோம்னு காலையிலதான சொல்லிகிட்டு விளையாடினீங்க அந்த தாயின் புலம்பலை அவனால் கேட்க முடியவில்லை. அழுதபடி அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.

‘பாவிங்களா... அடப் பாவிங்களா, கொன்னுட்டிங்களடா, பிஞ்சு பிள்ளைங்கள வாய்விட்டு அழுதான் இக்பால்.  ‘என்னடா தப்பு பண்ணாங்க இந்த பிள்ளைங்க, யார் யாரையெல்லாம் காப்பாத்தினேன், உங்கள என்னால காப்பாத்த முடியாம போயிடுச்சே என்று வாய்விட்டு புலம்பினான்.
இறந்த இரண்டு பிள்ளைகளையும் வாழை இலையில் படுக்க வைத்திருந்தனர்.

‘மூணு மாசமா பக்கத்து வீட்டுலதான் இருந்தீங்களே! ஒரு நாளு கூட உள்ள வந்து ஒரு தண்ணீ குடிச்சதில்லயே! ரெண்டு பிள்ளையும் திருடன் போலீஸ் விளையாடுனா, நான் தான் போலீஸ்னு சண்டை பொட்டுப்பானுங்களே! பக்கத்து வீட்டுல போலீஸ் குடியிருக்கு, திருட்டு பயமே இல்லன்னு சொல்லுவியே பாவி! இந்த பிள்ளைங்க உயிர திருட்டிட்டு போனாங்களே அந்த கொலைகார பாவிங்க! கண்டுபிடிச்சு கொடுப்பீங்களா அய்யா! என்று ஏதோ ஒரு கிழவி ஒப்பாரி பாடிக்கொண்டிருந்தாள்.

‘அய்யா, சும்மா விடாதிங்கய்யா, அந்த பாவிங்கள சும்மா விடக்கூடாது, நீங்கதான்யா நீதி வழங்கனும்.  அய்யா நீங்கதான் எங்க ஊர் அய்யனார் சாமி, உங்களதான்யா இந்த ஊர் நம்பிகிட்டு இருக்குதகப்பன் ஆத்திரத்துடன் அழுதான். அருகில் இருந்தவர்களின் புலம்பல்களை கேட்க முடியாமல் வெளியில் வந்து நின்றான்.  பாதி இருளும், மீதி வெளிச்சமுமாக இருக்க, யாருக்கும் தெரியாமல் தன் கண்ணீரை துடைத்தவன் எங்கு போவது என்று தெரியாமல் பிரமை பிடித்தவன் போல் சிறிது நேரம் அப்படியே நின்று விட்டான். 

‘இன்ஸ்பெக்டர் அய்யாவுக்கு நாற்காலி எடுத்து போடு என்று யாரோ கொடுத்த சத்தத்தில் நிகழ்காலத்திற்கு வந்தவன், வேண்டாம் என்று கை காட்டிவிட்டு தன் வீட்டிற்குள் நுழைந்தான்.

‘அய்யா, சாப்பாடு வைக்கட்டுங்களா என்று சொன்ன சந்தானத்திடம் ‘சந்தானம், என்னய்யா போலீஸ் நாமெல்லாம், பிரச்சனை நடந்த ரிப்போர்ட் எழுதறதும், இன்வஸ்டிகேஷன்ற பேர்ல மூடி மறைக்கறதுக்குமா நாம இருக்கிறோம். சந்தானம் ஒன்றும் புரியாமல் பார்த்தான். ‘நீ போ, நான் பாத்துக்கிறேன் என்று அவனை அனுப்பிவிட்டு அறைக்குள் நுழைந்தான். 

முடியும் வரை அழுதான், முடிவில்லாமல் அழுதான்.  இந்த வேலைக்கு தான் லாயக்கில்லை என்று நினைத்து நினைத்து அழுதான்.  கடவுள் தன்னிடம் இரக்கம் காட்டவில்லை என்று அழுதான். ஏன் இப்படி ஒற்றையாளாக வந்து வேதனைப்பட வேண்டும் என்று அழுதான். கனவுகள் ஒரு போதும் வாழ்க்கையாவது இல்லை என்று நினைத்து அழுதான். எதை சாதிக்க இப்படி போராடுகிறொம் என்று அழுதான்.  கடமையை சரியாக செய்யவில்லை என்று தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டு அழுதான்.  தனது நேரத்தை சரியாக பயன்படுத்தவில்லை என்று புலம்பி அழுதான். எவ்வளவு நேரம் அழுதான் என்று அவனுக்கே தெரியவில்லை.

உடைகளை மாற்றிக் கொண்டு, முற்றத்தில் வந்து அமர்ந்தான்.  நேரம் 12ஐ தாண்டிக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டின் அழுகுரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய, முற்றத்தில் வெறும் தரையில் வானத்தைப் பார்த்தபடி மல்லாந்து படுத்தான்.  மனம் முழுக்க பாரமாக இருந்தது. உடம்பின் எல்லா பாகங்களும் இப்போதுதான் வலிக்கத் தொடங்கிடன. பசி தெரியவில்லை.   
வானம் வெறுமையாகத் தெரிந்தது.  நிலவு அவனைப் பார்த்து கேலியாக சிரித்தது.  நட்சத்திரங்கள் எல்லாம் கிண்டலடித்தன.  இரவுப் பூச்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எள்ளி நகையாடுவது போல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.  அருகில் யார் யாரோ அமர்ந்து அவனைப் பாவமாக பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்ற திடுக்கிட்டு எழுந்தான்.

காலையில பார்த்தவிட்டு போன பிள்ளைகளின் சிரிப்பும், அவர்கள் பயந்து ஓடிய அழகும் அவனது மனதை விட்டு நீங்காமல் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. மகன் இம்ரானின் முகம் முன்னால் வந்தது நின்றது. சல்மாவை பார்க்க வேண்டும் போல் தவித்தான். அவளின் மடியில் சற்று நேரம் தலை சாய்த்து படுக்க வேண்டும் போல் தோன்றியது.  அவளின் அரவணைப்பு இப்போது முழுதாக தேவைப்பட்டது. அவளிடம் அவ்வபோது காட்டிய கோபத்தை நினைத்து கண்ணீர் விட்டான். அவளை சரியாக நேசிக்கவில்லை, அவள் மீது முழுதாக அன்பு காட்டவில்லை என்பதை நினைத்து கண்ணீர் சிந்தினான். இப்போது பேசும்போது கூட முரட்டுத் தனமாகத்தானே பேசினோம் என்று கண்ணீர் விட்டான்.  செல் போனை எடுத்து அழைத்தான்.  எதிர் முனையில் பதில் இல்லை.  ஒரு வேளை தூங்கிவிட்டாளோ! மீண்டும் அடித்தான், இந்த முறை நெட்வொர்க் கிடைக்கவில்லை என்ற பதில் வந்தது.  வைத்துவிட்டு மல்லாந்து படுத்தான்.

இவ்வுலகில் பெண்தான் ஆண்களின் சரணாலயம் என்பதை ஆண்கள் வெகுவாக புரிந்துக் கொள்வதில்லை.  இக்பாலின் கண்ணீர் அதை ஒப்புதல் வாக்குமூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.  சல்மாவிடத்தில் ஒருபோதும் அந்த ஆன்மீக சுகத்தை தேடியதில்லை.  உடலும் மனமும் தாண்டி ஒரு சமர்ப்பணம் இருக்கிறது என்பதை ஒரு போதும் அனுபவித்தது இல்லை.  மனம் குமுறி அழுதான்.  அவள் அருகில் இருக்கும்போது உதாசீனப்படுத்தியதை நினைத்து கண்ணீர் விட்டான்.  நான் அவளுக்கு என்ன கொடுத்தேன்.  சற்று நேரத்திற்குமுன் போனை எடுத்ததும் நிறுத்தாமல் அவள் அழுத அழுகையின் அர்த்தம் இப்போதுதான் முழுதாக புரிந்தது.  அவள் என்னை விரும்பும் அளவில் பாதிகூட நான் அவளை நேசித்ததில்லை.  யாருக்கோ மகளாக பிறந்து, திருமணம் என்ற பந்தத்தின் மூலம் வந்த உறவிற்காக எல்லாவற்றையும் தூக்கி எரிந்துவிட்டு தன்னலமில்லாமல் நேசிக்கும் பெண்ணின் தியாகத்திற்கு ஈடுகொடுக்க எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இந்த ஆண்களுக்கு முடியாது.  தீர்க்க முடியாத கடன் என்றால் அது மனனைவியின் கடன்தான்.  ஆண் எனும் அகம்பாவம் அவளை ஒரு போகப்பொருளாகவும், பசிக்கு உணவளிக்கும் வேலைக்காரியாகவும், பெற்ற பிள்ளையை பராமரிக்கும் ஆயாவாகவும், சம்பாதித்த சொத்துக்களை பாதுகாக்கும் காவலாளியாகவும் மட்டும் நினைத்து பார்த்ததை நினைத்து அழுதான். 

‘சல்மா, என்னை மன்னித்துவிடு, நான் சுயநலக்காரன்.  எனக்கு வேண்டும்போது உன்னிடம் சிரிக்கிறேன், என் உடல் பசிக்காக உன்னை நெருங்குகிறேன், எனக்கு தேவைப்படும்போது பேசுகிறேன், என்னை நீ நாடி வரும்போது ஊருக்கு நல்லது செய்கிறேன், கடமையை செய்யப் போகிறேன் என்று உன்னை உதாசீனப்படுத்துகிறேன். நீ மனம் விட்டு பேசிய நேரங்களிலெல்லாம், புரிந்துக் கொள்ளாமல் வெறும் காதுகளை மட்டும் உனக்கு கொடுத்து விட்டு மனதை வேறெங்கோ அலையவிட்டு  உன்னை அலட்சியப்படுத்திவிட்டேன் சல்மா, என்னை மன்னித்துவிடு.  இக்பாலின் வாய் அவளின் பெயரை உச்சரித்தப்படியே தூங்கிப் போனான்.  உடல் அசதிக்கு முற்றத்தின் சிமென்ட் தரை நன்றாக இருக்க தன்னை மறந்து தூங்கினான். 

மரணத்தை தொட்டுவிட்டது போல் உறங்கினான்.  உறக்கத்தின் முதல் மூன்று கட்டங்களை தாண்டி நேரடியாக நான்காவது கட்டத்தை அடைந்தது அவனது உடல். உறக்கத்தில் யாரோ அவனை தூக்கிக் தாலாட்டு பாடினார்கள், அம்மாவைப் போன்று தெரிந்தது. சோர்ந்த உடம்பிற்கு வெண்ணீர் கொண்டு குளிக்க வைத்தார்கள், வரண்ட நாவிற்கு அமுதம் கொடுத்தார்கள், புத்தாடைகள் உடுத்தி அழகு பார்த்தார்கள், எங்கோ அலைந்தான், எதையோ தேடி தொலைந்துக் கொண்டிருந்தான். நீரோடைகளும்  பூஞ்சோலைகளுமாக அந்த இடமே ஒரு சொர்க்கம் போல் காட்சி அளித்தது.  அவைகளுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு இயற்கையிடம் எதையோ பேசி மகிழ்ந்து கொண்டிருந்தான், யாரிடமோ சிரித்துக் கொண்டிருந்தான். அதோ, அதோ சல்மா கூட தெரிகிறாள், தேவதைப் போல் பிரகாசமாக இருக்கிறாள். ஆஹா எத்தனை அழகாக இருக்கிறாள், வெள்ளைச் சேலையில், தலைநிறைய மல்லிகைப் பூவுடன் எத்தனை கவர்ச்சியாக சிரிக்கிறாள். இத்தனை நாள் அந்த அழகை கவனிக்காமல் விட்டுவிட்டேனே.  அவளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. ஆனால் என்னைப் பார்க்கவில்லையே! ஏன்? வெறு எங்கெல்லாமோ பார்க்கிறாள், ஆனால் என்னை மட்டும் பார்க்கவில்லையே!  யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்? ஏய் சல்மா! சல்மா! நான்... நான் இக்பால், இங்க வா, அழைத்தான். அவள் வருவதாக இல்லை, அவளை நோக்கி ஓடினான், கால்கள் ஓட மறுத்தது, ஆனால் அவள் நடந்து போகிறாளே! அவளால் மட்டும் எப்படி வேகமாக நடக்க முடிகிறது, மனம் பதைத்தது.  சல்மா, வாய் சத்தம் போட விரும்பியது, ஆனால் வார்த்தைகள் வருவதாக இல்லை.  வெறும் உளரல்கள்தான் வந்தது. காணாமல் போய்விட்டாளே! சிறு பிள்ளையை போல் தேம்பி தேம்பி அழுதான். இனி வரமாட்டாளா? யாரோ அவனை தன் மடியில் தூக்கி வைத்தார்கள், அழும் அவனது கன்னத்தை வருடிவிட்டார்கள். அழுகை கொஞ்சம் கொஞ்சமாக நின்றது.  மல்லிகை நறுமனம் எங்கு பார்த்தாலும் பரவியது. சல்மாதான் மல்லிகை சூடியிருந்தாள்.  அவள் வந்துவிட்டாளா? அருகில் வந்துவிட்டாளா? எழுந்து பார்த்தான். ஆமாம்! கைக்கெட்டும் தூரத்தில், இல்லை இல்லை இன்னும் அருகில். மனமும் உடலும் சிலிர்க்க அந்த அழகுச்சிலையைப் பார்த்துக் கொண்டே இமைகள் அசையாமல் சிரித்தான்.  சல்மா இன்னும் அருகில் வந்தாள், இரு கைகளையும் நீட்டி வா என்று கண்சாடை செய்தாள்.  அவளை நோக்கி ஓட நினைத்தான், முடியவில்லை.  ஆனால் அவள் இன்னும் முன்னால் வந்தாள், அவன் தலையை அப்படியே தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டாள், கொஞ்சினாள், முத்தங்கள் கொடுத்தாள், தலைமுடியை கோதிவிட்டாள்.  சுகமாக இருந்தது. அவனது கைகளை எடுத்து தன் மார்பில் வைத்துக் கொண்டு கண்களை மூடியவாறு என்னென்னவோ பேசினாள், இனிமையாக இருந்தது.  எத்தனை அழகான உலகம் இது.  எல்லாம் அழகு, நீரும் அழகு, நிலமும் அழுகு, இயற்கை அழகு, எல்லாம் அழகாக இருந்தது. இது என்னுடைய உலகம். இந்த உலகில் வேறு யாருக்கும் இடம் இல்லை. நானும் சல்மாவும் மட்டுமே! எங்கு பார்த்தாலும் முத்தும் பவளமும் தெரித்து ஓடிக்க்கொண்டிருந்தன. சல்மா! எனக்கு உனனைத் தவைர எதுவும் வேண்டாம். நீ மட்டுமே வேண்டும். எனக்கு வாழ்வு வேண்டாம், மரணம் வேண்டாம், நீ மட்டுமே வேண்டும்.  சல்மா அவனின் தலைமுடியை கோதியபடி அமர்ந்திருந்தாள்.

கண்களை திறந்தான், விடியல் இன்னும் முழுதாக தோன்றவில்லை, இலேசான வெளிச்சத்தில் கண்கள் பிரமித்து நின்றது.  சல்மா அமர்ந்திருந்தாள், சல்மா? சல்மாவின் முகம் தலைக்கு மேல் தெரிய. ‘சல்மா அழைத்தான். சல்மா சிரித்தபடி அவனது கன்னத்தை வருடினாள். வேகமாக எழுந்தான்.

‘சல்மா எப்ப வந்த எழுந்தவன் வேகமாக தாவி அவளை அணைத்துக் கொண்டான். அவனும் அவளை முழுதாக தழுவிக் கொண்டாள்.  ‘எப்ப வந்த சல்மா சிறு பிள்ளையைப் போல் தன்னை முழுவதுமாக அவளது அணைப்பிற்குள் ஒப்படைத்தான்..

‘இப்பதான் வந்தேன்அவனை இறுக்கிக் கொண்டாள்.

நல்லா தூங்கிட்டு இருந்தீங்க, வெளிக்கதவு திறந்தே இருந்துஞ்சு, எழுப்ப வேணாம்னு உங்க தலையை மட்டும் தூக்கி என் மடி மேல வச்சுகிட்டு அப்படியே நீங்க தூங்குற அழக பார்த்துகிட்டே இருந்தேன்.

இக்பாலின் விழிகளில் சுகமான கண்ணீர்த் துளிகள் தெரித்தன.

‘அசதியில நல்லா தூங்கிட்டு இருந்தீங்க, எழுப்ப மனமே வரலை.  உங்கள பார்த்த பிறகுதான் எனக்கு உயிரே வந்துச்சு விசும்பியவளை அழுத்தி அணைத்தான். ‘ராத்திரியெல்லாம் அழுதுகிட்டுதான் வந்தேன்.  உங்களோட மிஸ் கால் இருந்துச்சு, உங்களுக்கு போன் அடிச்சேன் எடுக்கல, போலீஸ் ஸ்டேஷன் போய் அட்ரஸ் விசாரிச்சுகிட்டு வந்தேன்

I am sorry Salma, நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். அவளை இறுக்கி அணைத்தான். என்னைவிட்டு எங்கயும் போகாத சல்மா

இக்பாலிற்கு சல்மாவும், சல்மாவிற்கு இக்பாலும் தேவைப்பட்டது.  அன்பிற்கும் காதலுக்கும் அசதி என்பதே கிடையாது.  காதலும் காதலும் சேர்ந்தால் அது காமம்.  காதலும் அன்பும் சேர்ந்தால் அது தெய்வீகம்.
*****************

அதிகாலையின் குளிர் இதமாக இருந்தது.  நேற்று எதுவுமே நடக்காதது போல் இருந்தது அந்த சூழ்நிலை. முற்றத்தின் தூணில் சாய்ந்திருந்த இக்பாலின் மார்பில் தானும் சாய்ந்தாள் சல்மா.  அவளின் முதுகை முழுதாக தன் மார்மீது சாய்த்தவன், அணைத்தபடி அவளது கன்னத்தில் மெலிதாக முத்தமிட்டான்.

‘இந்த சூழல் நல்லா இருக்கு, இப்படி முற்றத்துல, அமைதியா உங்க கைக்குள்ள இருக்குறது சல்மா

‘உனக்கு கிராமம் பிடிக்காது நினைச்சுதான் அழைச்சுகிட்டு வரல

‘நான் உங்க மனைவிங்கறத அடிக்கடி மறந்து போயிடுறீங்க

‘தப்புதான், நீ சிட்டியில வளர்ந்த பொண்ணுங்கறதுனால

‘இருந்தா என்ன, உங்களுக்கு மனைவியான பிறகு, நீங்க எங்க இருக்கீங்களோ அங்க இருந்தாதான் எனக்கு சந்தோஷம்

‘உன்னை கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு நினைச்சேன்.

‘நீங்க இல்லாம இருக்கிறதுதான் கஷ்டம், சமீபத்துலதான் ஸ்கின் தெரபி பத்தி ஒரு செய்தி படிச்சேன் சல்மா

‘ஊஹூம்... அவளை தாலாட்டியபடி கேட்டான்.

‘கணவன் மனைவி, ஒருவரை ஒருவர் அடிக்கடி தொட்டுப் பழகுனா நேசம் அதிகமாகுமாம்

‘அதனாலதான் உன்னை கட்டிப் பிடிச்சுக்கிட்டு இருக்கேன்இக்பால். ‘சல்மா, இந்த எமோஷனல் கம்பர்ட்ட இப்பத்தான் அனுபவிக்கிறேன்

கழுத்தைத் திருப்பி அவனது முகத்தைப் பார்த்தவள், சற்று நிதானித்துவிட்டு அவனது கழுத்தில் ஒரு முத்தமிட்டாள்.

‘ஆமாம் சல்மா, அதை நேத்துதான் புரிஞ்சுக்கிட்டேன் அவனது கைகளில் முத்தமிட்டாள்.  ‘நீ எனக்கு நிறைய வேணும்னு நேத்துதான் முழுசா உணர்ந்தேன். நீ இப்ப வருவேன்னு நான் நினைக்கல, எல்லாமே கனவு மாதிரி இருக்கு, எவ்வளவு சுகாம இருக்கு தெரியுமா

‘எனக்குத் உங்கள நல்லா தெரியும், சின்ன வயசுலேர்ந்து பார்த்துகிட்டு இருக்கேன்சல்மா

I love this moment, thanks Salma, அவளின் கழுத்தருகில் குனிந்து கண்களை மூடிக் கிடந்தான்.

‘நம்ப ரெண்டுபேரும் இப்படியே இருக்கனும், நம்பளை நாமே மறந்து போயிடனும். அப்படியே காணாம போயிடனும். ஒரு நல்ல மனைவியும் கணவனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுக்குற பரிசு இதுதான்.

‘நீ நல்ல மனைவி, ஆனா நான் நல்ல புருஷனா? விழிகளை மூடியபடி கேட்டான்.

‘ஏன்....அப்படி கேட்கறீங்க, உங்கள கணவனா அடைஞ்சதுக்கு நான் அல்லாவிற்கு நன்றி சொல்லனும்

‘இப்படியே இருந்திடலாம்... நேரம் போரது தெரியாம இக்பால் கண்களை திறப்பதாக இல்லை.

‘இருப்போம். அதைவிட நமக்கு என்ன வேணும், இந்த உலகத்துல மட்டு இல்ல, சொர்க்கத்துலயும் நாம சேர்ந்து இருக்கனும், அதுவும் இப்படியே

‘நீ சொர்க்கம் போயிடுவ, நல்லவ, நிறைய நல்லது செய்யற, ஆனா நான்

‘நீங்க இல்லாம நான் போகமாட்டேன்

உன் கூட வரனும்னா நான் நிறைய நல்லது செய்யனும்

‘செய்வோம், என்ன செய்யனும் சொல்லுங்க சல்மா

‘இந்த ஊருக்கு நல்லது செய்யனும்

கைககளை விலக்கிவிட்டு எழுந்து நின்றாள்.  ‘உங்கள இன்னும் சஸ்பெண்ட் செய்யலயா ஆச்சர்யமாக கேட்டாள்.

‘நீயே எஸ்பிக்கிட்ட சொல்லி வாங்கி கொடுத்துடுவ போல இருக்குஎழுந்து அவளின் இடுப்பை கைகளால் சுற்றினான்.

‘நேத்து டிவி சேனல்ல அப்படித்தான மாத்தி மாத்தி சொல்லிகிட்டு இருந்தாங்க, என்னமோ எல்லா பிரச்சனைக்கும் நீங்கதான் காரணம்ற மாதிரி

‘நேத்து இருந்த நிலைமையில சஸ்பென்ஷனை கொடுத்தா வாங்கிட்டுத்தான் போயிருப்பேன், இப்பதான் நீ வந்திட்டியே அவளின் இடுப்பை இழுத்து மார்போடு நெருங்கினான்.

‘நாம உடனே திரும்பிவிடுவோம்னு, மாத்தறதுக்கு நிறய டிரஸ்கூட எடுத்துகிட்டு வரல புன்முருவலுடன் அவளின் கண்களையே பார்த்தான்.

‘இந்த ஊரு கிராமத்து பெண்கள் மாதிரி ரவிக்கை போடமாதான் நான் இருக்கனும் சிரித்தபடி அவனது மார்பில் கோலமிட்டாள்.

‘நீ இன்னும் அழகா இருப்ப இக்பால் ‘அப்படியே ஒரு ரெண்டு ஏக்கர் நிலத்த வாங்கி இங்க விவசாயம் பண்ணலாமா?

‘நீங்க ஏர் புடிங்க, நான் தலையில சாப்பாடு சுமந்துகிட்டு வர்ரேன்.

‘ரெண்டு பேரும் கம்மா கரையில ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி விட்டுகிட்டு சாப்பிடுவோம்.

‘நல்லாத்தான் இருக்கும், ஏன் இப்படியெல்லாம் கஷ்டப்படனும்

‘கஷ்டப்படாம சொர்க்கம் போகமுடியாதுன்னு நீதானே அடிக்கடி சொல்லுவஉன் கூட நான் சொர்க்கத்துக்கு வரனும், நீ எனக்கு நிரந்தரமா வேணும். அதுக்கு நான் எந்த மாதிரியும் கஷ்டப்பட தயார். நான் குளிச்சுட்டு புறப்படறேன். நீ நல்லா தூங்கு அவளின் இதழ்களில் ஒரு முத்தை காணிக்கையாக்கிவிட்டு நகர்ந்தான்.


(தொடரும்)