Friday, 7 December 2012

எங்க வீட்டு போலீஸ் - 2


இரண்டு நடுத்தர வயது ஆண்கள், ஒரு பெண் மற்றும் மூன்று பிள்ளைகளுமாக திடுதிடுவென்று போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்தனர். தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு 'அய்யய்யோ... அய்யா... இன்ஸ்பெக்டர் சார்...' என்ற கூச்சலிட்ட கூட்டத்தை பார்த்த இக்பாலுவிற்கு, கபடி போட்டியில் ஏதேனும் தகராறோ என்று பயப்பட ஆரம்பித்தான்.

'ஏய் நிறுத்து... நிறுத்துடா... ஏன்டா பொண்டாட்டி செத்துபோன மாதிரி கத்துற' அதட்டினான் கந்தசாமி.  

'ஏன்யா... அப்படி சொல்றீங்க... கருகங்கல்லாட்டம் பக்கத்துல நிக்குறன்ல' அழுவதை நிறுத்திவிட்டு கந்தசாமியைப் பார்த்துக் கேட்டாள்.

'அது சரி... சாவுன்னவுடன சத்தமெல்லாம் நின்னு போச்சு' சற்று விலகியிருந்த முந்தானையில் அவளின் மார்பகத்தைப் தேடியபடி பதில் சொன்னான் கந்தசாமி. 

'அய்யா... நீங்கதான் காப்பத்தனும்' இக்பாலைப் பார்த்து வந்த கூட்டம் அத்தனையும் கையெடுத்து கும்பிட்டார்கள்.

ரைட்டர் ரத்தினம் வேகமாக வந்தார்.  வருமானம் வந்துவிட்டது என்று அவரின் மனம் லேசாக விசிலடிக்க ஆரம்பித்தது.  'என்னய்யா ... என்ன விஷயம்'  ரத்தினம் கேட்டார்.

'அய்யா... என் மாட்டை மொட்டையன் பிடிச்சுக்கிட்டு போயிட்டான்' இக்பால் ரைட்டரையும், கந்தசாமியையும் பார்த்தான்.  இதுக்கா நான் எம். எஸ். சி படித்துவிட்டு இன்ஸ்பெக்டர் ஆனேன் என்று அவனின் முகம் கேட்காமல் கேட்டது.

'இதுக்கா... இப்படி கொலை விழுந்தமாதிரி கூச்சல் போட்ட' ரைட்டர் கேட்டு வைத்தார்.

'ஏதோ மனுஷன பிடிச்சுக்கிட்டு போனமாதிரி இப்படி கத்துற' கந்தசாமி.

'அய்யா... மனுஷன் போன கவலைப் பட்டிருக்க மாட்டேன்...'

'அடப்பாவி...' ரத்தினம் ஆச்சர்யமானர்.

'ஆமாங்கய்யா... மனுஷன விக்க முடியாதுய்யா... மாட்ட வித்த காசு கிடைக்கும்.  மொட்டையன் என் மாட்ட விக்கறதுக்காக பிடிச்சுக்கிட்டு போறான்யா..' அழுது வைத்தான் வந்தவன். ரொம்ப விவரமாத்தான் இருக்கிறானுங்க என்று நினைத்தபடி நாற்காலியின் பின்னால் சாய்ந்தான் இக்பால்.

'அய்யா... இரண்டு போலீஸை அனுப்பி.. மொட்டையனுக்கிட்டெயிருந்து... என் மாட்டை காப்பத்துங்க..' மிகவும் குழைந்தபடி கேட்டான் அழுக்கு வேட்டியுடன் நின்ற கிரமத்துவாசி. நல்ல போலீஸ் வேலைட இது... மாட்டை பிடிக்கற்துக்கல்லாம் போலீஸ் வேணும்... இத தீர்த்து வைக்க ஒரு இன்ஸ்பெக்டர். இரு கைகளையும் பின்னி தாடையில் வைத்தபடி நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்ஸ்பெக்டரின் முகத்தில் தெரிந்த எரிச்சலை புரிந்து கொண்ட ரத்தினம்

'அய்யா... இத நான் பார்த்துக்கறேன்' என்று வந்த கூட்டத்தை தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.  இன்னைக்கு ஒரு இருநூறு ரூபாய் தேரிடுச்சி என்று நினைத்தபடி ரத்தினம் சற்று குஷியாக நகர, பங்கு போடாம விடமாட்டேன் என்று கந்தசாமியும் பின்னால் போனான்.

இக்பாலுக்கு மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. தவறான இடத்தில் வந்துவிட்டோம் என்ற எண்ணம் மனதின் சுவர்களில் முட்டி மோதி வெளியில் போக வழியில்லாமல் அதற்குள்ளேயெ மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.  மனைவி அருகில் இல்லாதது ஒரு பெரும் வெறுமையாகத் தெரிந்தது.  குழம்பியிருக்கும் தனது மனதை யாரிடம் பேசுவது என்று புரியாமல் மேலும் மேலும் குழம்பிக் கொண்டிருந்தான்.  கம்பியூரை பிடிக்கவில்லை என்பது சல்மாவிற்கு தெரிந்தாலும்,  அவளிடம் அதிகம் புலம்பினால் அவள் வராமல் போய்விடுவாளோ என்ற பயம் வேறு. இங்கிருக்கும் வசதிகள் போதாது என்பது ஒருபுறம் இருந்தாலும், வீட்டிலெயே அடைந்து கிடக்கும் வாழ்க்கை நிச்சயமாக அவளுக்கு பிடிக்காது.  மிஞ்சி மிஞ்சி போனால் தியெட்டரில் படம் பார்க்கலாம், வேறு ஒரு மண்ணங்கட்டியும் இல்லை.. எழுந்து ஸ்டேசஷன் வாசலில் வந்து நின்றான். வெற்றிலையை வாயில் குதப்பிக் கொண்டிருந்த சென்ட்ரி போலீஸ் கருப்புசாமி வாசலில் வந்து நிற்கும் இன்ஸ்பெக்டரை கவனிக்காமல் 'ஹகர்ர்ர்... புச்ச்ச்ச' என்று ஸ்டேஷன் சுவற்றில் துப்பிவைத்தான்.

'அறிவிருக்காய உனக்கு' எரிச்சலுடன் நின்றுகொண்டிருந்த இக்பால் போட்ட சத்தத்தில் கையில் இருந்த 15 கிலோ பழங்காலத் துப்பாக்கியை பொத்தென்று தரையில் போட்டுவிட்டு சல்யூட் அடித்தான் கான்ஸ்டபில் கருப்புசாமி. 'அய்யா... நான் கவனிக்கல'.

'கவனிச்சிருந்தா... என் தலையில துப்புவியா..' கம்பியூரின் மேல் இருந்த கோபத்தை கருப்புசாமியுடன் கத்தினான். 'போலீசுனா..பொது மக்களுக்கு உதாரணமா இருக்கனும், முதல்ல உங்கள திருத்தனும்...போய் பக்கட்டுல தண்ணி எடுத்துட்டு வந்து, சுவத்துல துப்பன கரைய கழுவு'

'இதோ செய்யறேன்யா' என்று கருப்புசாமி நகர...'இந்த துப்பாக்கிய யாரு உங்க தாத்தாவ எடுத்துட்டு போவாரு' இக்பால் போட்ட சத்தத்தில்... கையில் இரண்டு டீயுடன் அப்போதுதான் உள்ளே நுழைந்த அழுக்கு வேட்டி, தயங்கி நின்றான்.  'யாருக்குய்ய இது' அழுக்கு வேட்டியைப் பார்த்து அதட்டினான்.

ரைட்டருக்கும் கந்தசாமிக்கும் வாங்கி வந்த டீயை கையில் பிடித்தபடி உள்ளே போவதா வேண்டாமா.. என்று யோசித்துக் கொண்டிருந்த அழுக்கு வேட்டியை முறைத்துப் பார்த்த இக்பால்...'ஏன் நிக்குற...' என்று கத்தவும், திடுதிடுவென வேகமாக உள்ளே ஓடினான் அழுக்கு வேட்டி. 

வானம் இரவை வரவேற்க தயாரானது. சாலையில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.  ஜீப்பை எடுத்துக் கொண்டு சும்மாவது ஊரை சுத்தலாம் என்றால் இருப்பதே இரண்டு கடைத்தெரு, அதைவிட ஊரே நம்மை கவனிக்கும்.  நகரமாக இருந்தால் ஒரு போலீஸ் அதிகாரியின் மேல் இவ்வளவு கவனம் வராது.  அவரவர்க்கு அவரவர் வேலை, ஆனால் கம்பியூர் மற்று சுற்றுவட்டார மக்களுக்கு இன்ஸ்பெக்டர் ஒரு முக்கியஸ்தன்.  எங்கு போனாலும், என்ன செய்தாலும் பரபரப்பான செய்தி. அதற்காகவே பெரும்பாலும் ஸ்டேஷன் விட்டால் வீடு என்று தேவையில்லாமல் எங்கும் வெளியில் செல்வதில்லை.  நல்ல நண்பர்கள் என்பது போலீஸ் அதிகாரிகளுக்கு எப்போதும் ஒரு எட்டாத விஷயம்.  எங்கு சென்றாலும் அதிக பட்சம் மூன்று வருட வாழ்க்கை. அதிலும் போலீஸ் உத்தியோகத்தில் நண்பர்களை தேர்ந்தெடுப்பதென்பது அத்தனை சுலபமல்ல.  பேசாமல் திரும்பி தன் அறைக்குச் சென்றான் இக்பால்.  

                                   *********************

'கந்தசாமி இன்ஸ்பெக்டர கவனிச்சியா' ரத்தினம்

'வந்ததுலேருந்து அவர நான்தான் கவனிச்சுக்கிறேன்.  காலையில டிபன் வாங்குறதிலேருந்து ராத்திரிக்கு சாப்பாடு கொடுக்குறவரை... எல்லாத்தையும் நான் செய்யுறேன்'. கந்தசாமி பதிலளித்தான்.

ரத்தினம் எழுதுவதை நிறுத்திவிட்டு கந்தசாமியின் முகத்தைப் பார்த்தார்.  பார்வையின் அர்த்தம் புரிந்த கந்தசாமி தொடர்ந்தான். 

'பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன் ரைட்டர் சார், ஆளு அட்டகாசமாத்தான் இருக்கார்'

'அத கேட்கலயா..ஏன்யா எப்பப் பார்த்தாலும் கோபமாவே இருக்கார்' ரத்தினம்

'சின்ன வயசு, பொண்டாட்டி வேற ஊருல.. ரெண்டு வாரத்துக்கு ஒருமுறைதான் சொந்த ஊருக்கு போயிட்டு வர்ரார். முன்னூறு கிலோமீட்டர் பிராயணம்...அனுபவிக்க வேண்டிய வயசுல இப்படி கிராமத்துல தூக்கி போட்டனுங்க' கந்தசாமி

'பனிஷ்மெண்ட் ட்ரேன்ஸ்பர்னு நினைக்கிறேன்' மாட்டுடைய கலரை எழுதிக் கொண்டே பேசினார் ரத்தினம்.

'எனக்கென்னமோ அப்படி தெரியல் ரைட்டர் சார்..புரமோஷன்றதுனால ஒத்துக்கிட்டார் போலத் தெரியுது...தெரியாத்தனமா இங்க வந்து மாட்டிக்கிட்டார்னு நினைக்கிறேன்'

'இருக்கும்.. இருக்கும்...' ரைட்டர் நிமிர்ந்துப் பார்க்க, அழுக்கு வேட்டி இருவரின் பேச்சையும் சுவாரசியமாக ரசித்துக் கொண்டிருந்தான்.

'ஏய்... என்ன பாக்குற, எவ்வளவு வச்சுருக்க'... அறை வாசலைப் பார்த்தபடி கேட்டார் ரத்தினம். எழவு, கந்தசாமி வேற பக்கத்துல...

'அய்யா... மாடு...' இழுத்தான் அழுக்கு வேட்டி

'ஆமா.. மாடு என்ன விலைக்கு போவும்' கந்தசாமி

'மூவாயிரம் வரைக்கும் போவும்' அழுக்கு வேட்டி ஆர்வமாக சொன்னான். 

'சரி முன்னூறு ரெடி பண்ணு' ரத்தினம் சற்று சத்தத்தைக் குறைத்தே பேசினார்.

திருதிருவென விழித்தான் அழுக்கு வேட்டி.  'ஏன்யா.. மாட்டையே முழுங்குனதுமாறி முழிக்கிற' ரத்தினம்.

'இப்போ அவ்வளவு இல்லை... மாடு கிடைச்சவுடன...'

ஏற இறங்கப் பார்க்கும் ரைட்டரையும் கந்தசாமியையும் பார்த்த அழுக்கு வேட்டி...'ஏய்... பொன்னாத்தா...' என்று அழைக்க, அவன் மனைவி உள்ளே வந்தாள்.  அவளின் காதில் ரகசியமாக 'அந்தப் பணத்தை எடு'... என்று சொல்ல, அவள் ஜாக்கெட்டினுள் கைவிட்டு பணத்தை எடுத்தாள். கந்தசாமியின் கண்கள் அவளின் முந்தானையில் முட்டி நின்றது.

'செருப்பு பிஞ்சு போயிடும்'... திடீரென வநத சத்தம் கந்தசாமியின் கண்களை வேகமாக அகற்ற வைத்தது. சத்தத்திற்கு சொந்தக்காரர் ஏட்டு ஏகாம்பரம். யாரோ ஒருவனை துண்டால் பின்னங்கைகளில் கட்டி இழுத்துக் கொண்டு உள்ளே வந்தார்.

வேக வேகமாக பொன்னாத்தாவும் அழுக்கு வேட்டியும் பணத்தை கை மாற்றிக் கொள்ள 'போய் வெளிய நில்லு... நான் வர்ரேன்' என்று அவர்களை வெளியெற்றினார் ரத்தினம். கையூட்டு வாங்குவது யாருக்கும் தெரியக் கூடாது என்றல்ல, எத்தனை பேருக்குத்தான் பங்கு வைப்பது என்ற சுயநலத்தில்தான்.

பின்னங்கைகளை கட்டி இழுத்து வந்த இளைஞனின் முதுகில் ஓங்கி அறைந்தார் ஏட்டு... 'அய்யோ அடிக்காதிங்கய்யா...' என்று கத்தியபடி திடுதிடுவென உள்ளே ஓடினான்.  ஏட்டு ஏகாம்பரம் நேராக இன்ஸ்பெக்டரின் அறைக்குள் நுழைந்து விபரத்தைச் சொல்ல, இக்பால் எழுந்து வெளியே வந்தான்.

'எந்த ஊர்ட நீ' இன்ஸ்பெக்டர் என்ற சுரத்தில்லாமல் கேட்டான் இக்பால்

'அய்யா... நான் கொலையூர்’ என்றான் இளைஞன்

'உங்க ஊர்ல எத்தனை கொலை நடக்கும்' இக்பால்

ஒன்றும் புரியாமல் பார்த்தான் இளைஞன். ஓங்கி ஒரு அறைவிட்டார் ஏட்டு..'அய்யா கேட்கறாங்கல்ல'.  சத்தம் போடுவதற்கு பயந்தவனாய் கன்னத்தை பிடித்துக் கொண்டு நின்றான்.

'பேரைப்பாரு... கொலையூர்..வீரப் பரம்பரைங்க...'ஜட்டியோட லாக்கப்புல தூக்கிப்போடு' என்று சொல்லிவிட்டு 'எங்கய்யா ரைட்டர்' என்று சத்தமிட்டான்.

'போடா...உள்ள'  என்று முதுகில் ஒன்று வைத்து உள்ளே இழுத்துச் சென்றான் கான்ஸ்டபிள் கருப்புசாமி.

ரத்தினம் வந்து நின்றார்.  'ரத்தினம், இன்னும் அரை மணிக்குள்ள கடந்த மூணு வருஷத்து ஏசிஆர் ஃபைலு, டயரி, எஃப்.ஐ.ஆர் காப்பி எல்லாம் என் டேபிளுக்கு வரணும். ஏகாம்பரம்... உள்ள வாய்ய..' என்று அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான் இக்பால்.

சல்யூட் வைத்த ரத்தினம், ஒன்றும் புரியாமல் ரெக்கார்டு அறையை நோக்கி நடந்தார்.

                                   ************************

வீட்டு முற்றத்தில் பாயையும், தலகானினையும் போட்டு வானத்தைப் பார்த்தபடி படுத்துக் கொண்டிருந்தான் இக்பால். ஓட்டு வீட்டின் முற்றமும், குளிர்ச்சியாய் காட்சி தரும் நிலாவும் இக்பாலுவிற்கு சுவைக்கவில்லை.  வெறுமனே வானத்தைப் பார்த்தபடி மல்லாக்க கிடந்தான். கூடத்தில் எரியும் மஞ்சள் மின்விளக்குக்கூட சுரத்தில்லாமல் எரிந்துக் கொண்டிருந்தது.  வீட்டில் அங்கங்கே இரவுப் பூச்சிகள் கண்ட கண்ட சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தன.  வயல் வெளிகளில் தவளைகள் கோரசாக சேர்ந்து அவைகளுக்கே உரிய பாடல்களை அலுப்பில்லாமல் பாடிக் கொண்டிருந்தன.  

வானத்தின் இருளைவிட மனதின் இருள் மூட்டம் சற்று பாரமாகவே இருந்தது. கண்களுக்கு எல்லாமே மங்கலாகவே தெரிந்தது.  மனதை இருள் ஆட்கொள்ளும்போது சுற்றுப்புறமும் இருளாகவே மாறிவிடுகிறது.  என்னதான் வெளிச்சம் தெரிந்தாலும், தன்னைச்சுற்றி கண்களுக்குத் தெரியாத ஒரு திரை முற்றுகையிட்டது போல் மனம் உடல் இரண்டும் செயலிழந்து முற்றுகையிடப்பட்ட திரைக்குள் இல்லாத ஓர் புகலிடத்தை தேடியது.     

சில நேரங்களில் சில விஷயங்கள் புரிவதே இல்லை.  புரிய முயற்சித்தாலும் தெளிவு கிடைப்பதில்லை.  தெளிவைத் தேடி ஓடும்போதெல்லாம் கூடவே குழப்பமும் விடமாட்டேன் என்று ஓடிவருகின்றது.  சில நேரங்களில் குழப்பம் தெளிவைவிட வேகமாகவே நம்மை ஓட்டிக் கொள்கின்றது. தான் ஏன் இங்கே மாற்றம் செய்யப்பட்டோம் என்பது முற்றிலுமாகவே புரியவில்லை.  இதுவரை சர்வீசில் சர்ச்சைக்கிடமாக எந்த அரசியல்வாதியையும் அடித்து லாக்கப்பில் வைத்ததில்லை.  சட்டம் ஒழுங்கு சம்பந்தபட்ட இலாக்காவில் பணியாற்றியதால் அவ்வப்போது ரவுடிகளுக்கு பரிந்துரை செய்து அரசியல் மட்டும் அதிகாரிகளின் தொல்லை வந்ததுண்டு, ஆனால் அதற்காக சினிமாவில் வரும் போலீஸ் போல் வசனமெல்லாம் பேசி நியாயத்தைப் பாதுகாக்கும் உத்தமனாக நடந்துக் கொண்டதில்லை. முடிந்தவரை சாதுரியமாகப் பேசி தனக்கு ஏதும் தொந்தரவு வராமல் பணியாற்றி வந்தவன்  இதை ஒரு பனிஷ்மெண்ட் மாற்றமாக அவனால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

ஓரளவு வசதியாக வாழ்ந்தவன், தாய்மாமன் அப்துல் காதரின் மகளை மனைவியாக மணந்து கொண்டான். அப்துல் காதர் தற்போது திருவண்ணமலையில் உதவி கலெக்டராக பணியாற்றி வருகிறார்.  சிறுவயதிலிருந்தே போலீசாக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தவன், லஞ்சம் கிஞ்சம் எதுவும் கொடுக்காமல் சப் இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்று ஆறு வருடம் முடிந்துவிட்டது. தனது பணியில் இதுநாள்வரை யாரிடமும் எதற்காகவும் லஞ்சம், பரிசுகள் என்று எதுவும் பெற்றுக் கொண்டதில்லை.  தனது பணியின் தகுதிக்கு மீறி யாருக்கும் எதற்காகவும் அநாவசியமாக உதவி செய்கிறேன் என்று எந்த இழுக்கையும் ஏற்படுத்திக் கொண்டதில்லை.  பிறர் பயப்படும் அளவிற்கு அடாவடி செய்யயும் போலீசும் இல்லை அதே நேரத்தில் தன்னை தாழ்த்திக் கொண்டதும் இல்லை.  

குடும்பத்தில் பெரும்பாலும் எல்லோரும் அரசு வேலையில் அதிலும் ஓரளவு உயர்ந்த பதவியில் இருந்ததால், அரசாங்கத்தின் நெளிவு சுளிவுகளெல்லாம் தெரிந்து வைத்திருந்தான்.  இங்கு மாற்றலாகி வரும்போது வழக்கம்போல் தனது மேலதிகாரியை சந்தித்து அவர்களிடமிருந்து அறிவுரைகளையும் அல்லது சில ரகசிய விஷயங்களையும் புரிந்துக் கொண்டு பணியேற்க வருவது வழக்கமானதுதான் என்றாலும், இப்படி ஒரு காட்டுமிராண்டி இடத்திற்கு வருவோம் என்று கனவிலும் நினைத்ததில்லை.  பதவி உயர்வு கிடைத்த மனக் கிளர்ச்சியில் பதவியேற்க வரும் ஊரைப் பற்றி சரியாக விசாரிக்காமலும் தன்னை தயார் செய்து கொள்ளாமலும் வந்த முட்டாள்தனத்தை நினைத்து தனக்குள்ளே அவமானப்பட்டுக் கொண்டான்.  இந்த முட்டாள்தனத்தை சல்மாவிடமும் சொல்ல முடியாது.  திருமணம் முடிந்து நான்கு வருடம்தான் ஆகிறது, மூன்று வயதில் ஒரு மகன்.  மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டிய வயதில் இப்படி முன்னூறு கிலோ மீட்டர் தொலைவில் குத்தூருக்கும், கத்தியூருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டதை நினைத்து மனம் புலம்ப்பத் தொடங்கிவிட்டது.   

மொபைல் சத்தம் சிந்தனையை கலைக்க அருகில் கிடந்த நோக்கியாவை நோக்கினான். சல்மாதான் அடிக்கிறாள்.  இரவு தூங்குவதற்கு முன்னால் ஒரு அரை மணி நேரம் அவளுடன் பேசினால்தான் ஓரளவாவது நிம்மதியாக தூங்க முடிகிறது.

எதை எதையோ பேசினான்.  கம்பியூரின் நடுவில் ஓடும் ஆற்று நீர் முதல், சாலையின் இரு மருங்கிலும் இருக்கும் கடலைக்காடு, கரும்புத் தோட்டம், இந்த காலத்திலும் ஜாக்கெட் போடாமல் சுற்றிவரும் கிராமத்துப் பெண்கள். புடவை முந்தானையில் உடலை மறைத்து வாழும் கிராமத்து பேரிளம் பெண்கள் தனது பேரிளம் கணவர்களுக்கு பழைய சோறு சுமந்து செல்லும் பாசம், அது இது என்று தனது வேலையத் தவிர்த்து எல்லாவற்றையும் பேசி வைத்தான்.  அவளும் எப்போது அழைத்து போகக் போகிறீர்கள் என்று வார்த்தைக்கு வார்த்தை கேட்டு வைத்தாலும், இன்னும் ஒரு மாதம் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான்.  கணவனின் உற்சாகம் குறைந்திருப்பதை நன்றாக உணர்ந்தாலும், கம்பியூரின் நிலைமை சரியாகப் புரியாததால் அவளும் அவன் சொல்வதை ஏற்றுக் கொண்டு காத்திருந்தாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்க, கைபேசியை அடக்கிவிட்டு கதவை நெருங்கினான்.  யார் என்று கேட்பதற்குள், 'அய்யா.. நான் கான்ஸ்டபிள் செல்வம்' என்ற குரல் வந்தது. கதவைத் திறந்து உள்ளே வரச் சொன்னான்.

கான்ஸ்டபிள் செல்வம் உளவுத்துறை சம்பந்தப்பட்ட வேலைகளை கவனிப்பதால் அவனுக்கு ஊர் முழுவதும் உலாவுவதுதான் வேலை.. இளநிலை பட்டதாரி.  பெரும்பாலும் சீருடை அணிவதில்லை.  ஊரைச்சுற்றி செய்திகளை சேகரித்து இன்ஸ்பெக்டரிடம் அறிக்கை அளிப்பதுதான் வேலை.  சில நேரங்களில் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை வாய் மொழியாக தெரிவிப்பது வழக்கம். அதை பெரும்பாலும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்துக் கொள்வதை இக்பால் விரும்புவதில்லை.

அவன் இப்போது கொண்டுவந்த அதிகாரப்பூர்வமற்ற செய்தி இக்பாலை மேலும் குழப்பியது. அதிகாரப்பூர்வமற்ற செய்திகளின் முக்கியத்துவம் போலீஸ்காரர்களுக்கு மட்டுமே புரியும்.

'அய்யா.. இப்போதைக்கு ஒன்னும் பெரிசா எந்த நடவடிக்கையும் தேவையில்லை'  என்றான் செல்வம்.

அவன் சொல்வதை காதில் வாங்கிய இக்பால் கொல்லைப் புறத்தில் காற்றில் உரசிக் கொண்டிருக்கும் தென்னங்கீற்றின் சத்ததை கேட்டும் பார்த்தும் கொண்டிருந்தான்.  வெளிச்சத்திற்கு இரண்டே கண்கள், ஆனால் இருளுக்கு ஆயிரம் கண்கள்.  இருளில் இயற்கை வேண்டுமானால் இளைப்பாரலாம். இருளில் மனிதர்கள் உறங்கலாம்.  ஆனால், மனிதர்களை ஈர்க்கும் தீங்குகள் இருளில்தான் பிரகாசிக்கின்றன. 

'சரி செல்வம்... நீ போகலாம்' என்று அவனை அனுப்பிவிட்டு, கபடிப் போட்டி முடிவுற்றவுடன் ஒரு வாரத்திற்கு ஊருக்கு சென்றுவந்தால்தான் சரியான முடிவெடுக்க முடியும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.  கம்பியூரின்  நலத்தைப் பற்றியெல்லாம் இக்பாலுவிற்கு பெரிதாக எந்த அக்கறையும் இல்லை. அவனது சிந்தனை முழுவதும் தன்னைப் பற்றி மட்டுமே சுற்றி வந்தது.  தூரத்தில் நாய்களின் ஊலைக்குரல் மனிதர்களுக்குத் தெரியாத பல நடமாட்டங்களை தனக்குத் தெரிந்த மொழியில் கத்தி அறிவித்துக் கொண்டிருந்தன.    

(தொடரும்)


Tuesday, 4 December 2012

எங்க வீட்டு போலீஸ்


கம்பியூர் காவல் நிலையத்தில் காவல் துறை ஆய்வாளாராக பொறுப்பு எடுத்ததிலிருந்தே இக்பாலிற்கு ஏன் இந்த வேலைக்கு வந்தோம் என்று வருத்தப்பட ஆரம்பித்துவிட்டான். ஏன் வந்தோம் என்ற எரிச்சலுக்கு காரணம், கம்பியூரில் பெரிதாகச் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற ஏக்கம் ஒரு பக்கம். அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றார் போல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற ஆதங்கம் மறு பக்கம்.   இன்னும் சொல்லப் போனால் இந்த பதவி உயர்வு இப்போது ஏன் வந்தது என்று வருத்தப்பட ஆரம்பித்துவிட்டான்.  கம்பியூர் பின்தங்கிய இடம் மட்டும் இல்லை,மிகவும் பின் தங்கிய இடம் என்றுதான் சொல்ல வேண்டும்.  எப்போவாவது ஒன்றிரண்டு பேருந்துகள் வந்து போகும் பெரிய கிராமம், தியேட்டர், முன்னூறு மாணவ மாணவிகள் படிக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி, இரண்டு கடைத்தெருக்கள் என்று ஓரளவு இருந்தாலும்,பொதுவாக ஆரவாரமற்ற இன்னும் சொல்லப் போனால் கிராமத்து வாசம் மாறாத அழகிய கிராமம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கம்பியூரை பொறுத்தவரை எப்போது பார்த்தாலும் குடித்துவிட்டு நடக்கும் கலாட்டாகள், அவ்வப் போது ஒன்றிரண்டு அரிவாள் வெட்டு, கத்தி குத்து என்று வீர விளையாட்டுகள் கம்பியூர் காவல் நிலையத்திற்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தது..  அரசும் கம்பியூர் காவல் நிலையத்திற்கு உயர்வுநிலை கொடுத்து,உதவி ஆய்வளாராக தஞ்சையில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்த இக்பாலை ஆய்வாளராக பதவி உயர்வு கொடுத்து இங்கே வேலை மாற்றம் செய்துவிட்டது. மனைவி பிள்ளைகளை தஞ்சையிலேயே விட்டுவிட்டு பொறுப்பேற்க வந்தவன் ஏண்டா இந்த ஊருக்கு வந்தோம் என்று வெறுப்பும் வேதனையும் பட ஆரம்பித்துவிட்டான்.  தங்குவதற்கு நல்ல வீடு கிடைக்காமல் கடைசியில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தயவில் பள்ளிக்கூடத்திலேயே பயன் படுத்தாத ஒரு வகுப்பறையில் தங்க வேண்டி நேர்ந்தது. ஏறக்குறைய ஒரு மாதம் கழித்து கான்ஸ்டபிள் கந்தசாமி அலையோ அலை என்று அலைந்து ஒரு ஓட்டு வீட்டை வாடகைக்கு பிடித்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும் கழிப்பிடம், குளியல் எல்லாவற்றையும் கிணற்றங்கரையில் திறந்தவெளியில் செய்ய வேண்டிய நிலை.  ஒரு வழியாக கொஞ்சம் கீற்று மட்டைகளை வைத்து தற்காலிக சீரமைப்பு செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று தயங்கியே கலை கடன்களை செய்து வ்நதான்.

உதவி ஆய்வாளர் பிச்சாண்டி இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால் கண்டதற்கெல்லம் விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு இருக்கிற விடுமுறைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு அவ்வப்போது ஆள் தலைமறைவு ஆகிவிடுவார்.

தெருவில் நடக்கும் கிட்டிப்புல்லு தகராறிலிருந்து, தேங்காய் திருட்டு, பலிங்கு விளையாட்டில் மண்டை உடைவது வரை மத்திசம் செய்தே இரண்டு மாதங்களை ஓட்டி முடித்தான் இக்பால். இந்த சூழ்நிலையில் மனைவியை அழைத்துவர முடியாமல் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தஞ்சைக்கு சென்று வந்தான். மொத்தத்தில் சோம்பேறித்தனம் முழுமையாகத் தொத்திக் குள்ள தினத்தந்தி நாளிதழை அடி முதல் நுனிவரை மேய்ந்துக் கொண்டிருந்தான்.

வேகமாக வந்த கந்தசாமி 'வணக்கம் அய்யா' என்று ஓங்கி பூட்ஸ் காலால் தரையை அடித்து சல்யூட் வைக்க இக்பால் ஒரு வினாடி அதிர்ந்துப் போய்விட்டான்.

'ஏன்யா... சும்மா வந்து வணக்கம் சொல்லக்கூடாதா'

'அய்யா பயந்துட்டிங்களா ?' கந்தசாமி

'என்ன சேதி...' முறைத்தான் இக்பால்.

'அய்யா உங்கள பாக்குறதுக்கு நாட்டாமை நல்ல முத்து வந்திருக்கார்.
சிறிது நேரம் யோசித்தவன் 'வரச் சொல்லு' என்று சொல்லிவிட்டு நாளிதழை மடக்கி வைக்கவும், வெள்ளை வேட்டி துண்டு சகிதமாக தளபுள என்ற தனது உடம்பை தூக்க முடியாமல் தூக்கி வந்தார் நல்லமுத்து.

நல்லமுத்து கம்பியூர் மற்றும் சுற்று வட்டாரம் எல்லா ஊர்களுக்கும் தெரிந்த ஒரு முக்கியமான உள்ளூர் அரசியல்வாதி.  எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ அந்த கட்சியில் முதலில் சேர்ந்துவிடுவார். ஒன்றியம், வட்டம், மாவட்டம் என்று எல்லோருக்கும் கிடா வெட்டி விருந்து போட்டு நாட்டமை பதவியை விடாமல் பிடித்துக் கொண்டு பிழைப்பு நடத்தும் திறமைசாலி.  மச்சான், மச்சினன், மாமன், சித்தப்பா என்று எல்லோரிடமும் உறவு முறை கொண்டாடி யாரையும் பகைத்துக் கொள்ளமல் சுத்துப்பட்டு பதினெட்டு கிராமத்திற்கும் நியாயம் சொல்லியே பிழைப்பு நடத்தி நல்ல செல்வாக்கு.  ஓரளவு மேடைப் பேச்சிலும் திறமைசாலி.

'என்ன நாட்டமை... என்ன விஷயம்'

'ஒரு முக்கியமான விஷயமா சாரை பாத்துட்டு போகலாம்னு வந்தேன்'

இக்பாலுக்கும் பொழுது போக வேண்டும், எவ்வளவு நேரம்தான் தினத்தந்தியையும், குமுதத்தையும் படித்து பொழுது போக்குவது என்று எதையாவது பேசிக் கொண்டிருக்கலாம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.

'சாருக்கு சொந்த ஊரு தஞ்சாவூர்தான..'

'இல்ல பக்கம்.. நீங்க தஞ்சாவூருக்கல்லாம் வந்திருக்கீங்களா'

'அது என்ன சார் அப்படி கேட்டுட்டீங்க... பெரிய கோயிலுக்கு போகாதா ஒரு தமிழனுண்டா, சார் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்.. ராஜ ராஜ சோழன் காலத்துலேயே அங்க முஸ்லீம்கள்... வந்துட்டத படிச்சிருக்கேன்' படிச்சவன் என்று மீசையை தடவிக் கொண்டே சொல்லாமல் சொன்னார்.

'இருக்கலாம்..' ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டான் இக்பால்

'என்ன தம்பி இப்படி இருக்கலாம்னு சாதரணமா சொல்லீட்டிங்க'. சார் போய் தம்பி வர இக்பால் நல்லமுத்துவை ஏற இறங்க பார்த்தான். கொஞ்சம் விட்டா சொந்தம் கொண்டாடிவானுங்களே என்று நினைத்தவன் தொலையட்டும் அப்பா வயது என்று சும்மா இருக்க நல்லமுத்து தொடர்ந்தார்.

'ராஜ ராஜ சோழனோட தமக்கை ஒருத்தி ரொம்ப உடம்பு முடியாம இருந்தப்ப... ஒரு முஸ்லீம் மருத்துவர்தான் அவங்களுக்கு மருத்துவம் பார்த்து சுகப்படுத்தினதால... அந்த காலத்திலெயே முஸ்லீம் மக்களுக்கு நிலமெல்லாம் தாநியமா கொடுத்ததா வரலாறு'

என்ன கொடுமைடா இதல்லாம்... கம்பியூர் வந்தது வரலாறு படிக்கவா... என்று மனதுக்குள் நொந்துகொண்டு... இந்த பேச்சுபடிச்சவனை எப்படியாவது நாசூக்கா பேசி வெளிய அனுப்பனும்.  நல்லமுத்துவின் சுபாவமும் பேச்சும் இக்பாலுவிற்கு அவரை கொஞ்சம் தள்ளியே வைக்கவேண்டும் என்று சிந்திக்க வைத்தது.

'தம்பி என்ன கள்ளனா... இல்ல வெள்ளாளனா' நல்லமுத்து குரலை தாழ்த்திக் கேட்டார்.

இக்பாலுவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

'அதான் தம்பி... உங்க பூர்வீகம் ஒன்று கள்ளனா இருக்கனும்... இல்லன்னா.

'நாட்டாமை... இது என்ன ஆராய்ச்சி...'

'ஒன்னுமில்ல... தஞ்சாவூர் மாவட்டத்துல வெள்ளாளர்களும் கள்ளர்களும் அதிகம். என்னோடா.. சித்தப்பாவோட கொலுந்தியா... கள்ளர் சாதி.  மாமவோட சம்பந்தரோட சம்பந்தர் வெள்ளாளர்.... அதான்... கேட்டேன்'

இக்பால் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக அவரைப் பார்த்தான். 'நாம ரெண்டு பேரும் மனித சாதி... அது போதும் இப்போதைக்கு'

'சரிதான்... சரிதான்...' சுரத்து குறைந்த போனது நல்லமுத்துவிற்கு.  சாதி பத்தி பேசுனவுடன இன்ஸ்பெக்டருக்கு மூடு சரியில்லை போல இருக்கு என்று நினைத்தவராய் 'சரி... வந்த சேதியை சொல்லிடரேன்...' குரலை கனைத்துக் கொண்டார்.

'அடுத்த வாரம்... நம்பவூர்ல... கபடி போட்டி நடக்க போவுது, சுத்துப் பட்டு பதினெட்டு கிராமமும் கலந்துக்கிட்டு ஒரு வாரத்துக்கு திருவிழாதான்... ஸ்கூல் வேர பத்து நாளைக்கு லீவு... அதான் கபடி போட்டி நடத்துறோம்...இன்ஸ்பெக்டர் தம்பிதான் தலைமை ஏத்தி நடத்தி தரனும்' இக்பால் ஆவலாகக் கேட்டான். தலைமை ஏக்குறது ஒரு பக்கம் இருந்தாலும்... சாய்ந்திரத்துல கபடி விளையாட்டு பார்க்கலாம் என்று மனதிற்குள் நினைத்தவனாய் ஒத்துக் கொண்டான்.
                                                   
                                                            ***************

மொபைலில் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த இக்பால். இடை இடையே காவல் நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்த சலசலப்பில் கொஞ்ச நேரம் பேசிவிட்டு போனை வைத்தான். ஏட்டு ஏகாம்பரம் எல்லா கான்ஸ்டபிள்களுக்கும் கபடி போட்டி திருவிழாவின் பாதுகாப்பு பணிக்கான உத்தரவுகளை கொடுத்துக் கொண்டிருந்தார்.  இக்பால் எதையும் கண்டு கொள்வதாக இல்லை.  என்ன ஊர் என்ன போலீஸ் ஸ்டேஷன் என்று கிட்டதட்ட வேலை பார்க்கும் ஆர்வமே இல்லாமல் அமர்ந்திருந்தான்.

கந்தசாமி வழக்கம் போல் வந்து சல்யூட் அடித்து நின்றான்.

'என்னய்யா..'

'அய்யாவ கூட்டிட்டு போக வந்திருங்காங்க'

'கூட்டிட்டு போகவா... எங்க..'

'அதான் கபடி திருவிழாவுக்கு'

'கொஞ்ச நேரத்துல... நான் வர்ரேன்னு சொல்லு'

கந்தசாமி சிரித்தான்...'அய்யாவுக்கு ஊரு புதுசு.. அய்யா.. நீங்க வெளிய வந்து பாருங்க...'

இக்பாலுவிற்கு விநோதமாக இருந்தது.

'அய்யா... கான்ஸ்டபிள்ளாம் ரெடி... நீங்க அனுமதி கொடுத்தா.. அனுப்பிடுவேன்' ஏட்டு மரியாதையுடன் சொல்லி முடித்தார்.

இக்பால் எழுந்து தொப்பியை தலையில் அணிந்துவிட்டு... பெல்டையும், கால்சட்டையும் சரி செய்தவனாய்... விறைப்புடன் அணி வகுத்து நின்ற பன்னிரெண்டு கான்ஸ்டபிள்களின் முன்னால் வந்து நின்றான். ஒன்றிரண்டு பேரைத் தவிர்த்து மற்ற கான்ஸ்டபிள்கள் எவரும் போலீஸ் வேலைக்கே லாயக்கில்லை என்பது போல் உடலமைப்பு.  அவர்கள் அணிந்திருக்கும் யூனிபார்மை பார்த்தவன் இன்னும் இரண்டு வருடம் கம்பியூரில் குப்பைக் கொட்டினால் நாமும் இப்படித்தான் ஆகிப்போவோம் என்று நொந்து கொண்டவனாய் இந்த சோத்துமண்டிகளுக்கு என்ன சொல்வது என்று சிறிது நேரம் அவர்கள் எல்லோர் முகத்தையும் ஒவ்வொன்றாய் பார்த்தான்.  சரி எதையாவது சொல்லி வைப்போம் என்று பேச ஆரம்பித்தான்.

'மாமான்... மச்சான்னு ஊருல இருக்கிற எல்லோரையும் சொந்தம் கொண்டாடிக்கிட்டு... டூட்டியை விட்டுடாதீங்க... எந்த அசம்பாவிதமும் நடக்காமா பார்த்துக்கங்க ...என்ன புரியுதா?'

'புரியுதுங்கய்யா....' என்று எல்லோரும் ஒரு சேர சொல்ல, ஏட்டு 'டிஸ்மிஸ்' என்று சத்தமிட... போலீசுக்கே உரிய நடையில் நடக்க முயற்சித்து கண்ணா பின்னாவென்று ஒருவர் வலது காலை முன்னே வைப்பதும், இன்னொருவர் இடது காலை முன்வைப்பதுமாய் கடார் மடார் என்ற பூட்ஸ் சத்தத்துடன் வெளியே சென்றார்கள்.  அவர்கள் நடந்து போவதையே பார்த்து நின்றவன் பெருமூச்சுடன் தலையை இங்குமங்கும் அசைத்துக் கொண்டு தனது நாற்கலிக்கு சென்று அமர்ந்தான்.

                                                              *****************

கண்ணாடி முன் நின்று தன்னை ஒருமுறை சரி பார்த்துக் கொண்ட இக்பால் போலீஸ் மிடுக்குடன் வெளியே வந்தான்.  வந்தவன் ஒரு நிமிடம் திகைத்துப் போய்விட்டான்.  போலீஸ் ஸ்டேஷன் வெளியில் பல வண்ணக் காகிதக் கொடிகளும், தெருவெல்லாம் மாவிலை தோரணங்களும் உண்மையில் திருவிழா போல்தான் தோற்றமளித்தது.  ஸ்டேஷன் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு அமர்க்களப் படுத்திவிட்டார்கள்.  நல்லமுத்து வேகமாக முன்னால் வந்து கும்பிட்டு வரவேற்க நாதஸ்வரம் மேளங்கள் முழங்க இக்பாலை ஊர்வலமாக அழைத்துப் போனார்கள். பல வண்ணங்களில் பனியன் ட்ரவுசர்கள் அணிந்த கபடி வீரர்கள் ஐ.பி.ல் அணிகள் போல் முன்னால் அணிவகுத்து போக இக்பால் அவர்கள் மத்தியில் சினிமா ஹீரோவைப் போல் நடந்து போனான்.  இக்பாலுக்கு மனதிற்குள் திடீரென உற்சாகம் படை எடுத்தது.  இந்த அணிவகுப்பை யாரவது வீடியோ எடுத்தால் சல்மாவிடம் போட்டுக் காட்டலாம்.  கந்தசாமியை அழைத்து தனது மொபைலைக் கொடுத்து போட்டோ எடுக்கச் சொன்னான். ஊரே கூடி நின்று வேடிக்கைப் பார்த்தது. யார் யாரொ அவன் அருகில் நடக்க ஆசைப்பட்டு முட்டி மோதி வந்து கொண்டிருந்தார்ர்கள்.  பதினெட்டு வயது குமரி முதல் பல் போன கிழவி வரை அவனை ஏதோ சினிமா நடிகனைப் போல் ஆர்வமாய் வேடிக்கைப் பார்க்க்க கந்தசாமிக்கு இக்பால் கொஞ்சம் அதிகமாகவே ஸ்டைல் காட்டுவதாக உணர்ந்தான்.

தியேட்டருக்கருகில் இருந்த விளையாட்டு மைதானம் தடபுடலாகத்தான் இருந்தது. காவடி எதுவும் எடுக்காதுதான் பாக்கி, மற்றபடி மைதானத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது.  இன்னும் பத்து நாளைக்கு தியேட்டரில் பிசினஸ் எதுவும் பிரமாதமாக இருக்காது என்று தெரிந்த தியேட்டர் ஓனர், அவள் ஒரு தொடர்கதை படத்தை ஓட விட்டிருந்தார்.  அங்கங்கே விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  பல இளவட்ட பெண்கள் அவர்களை அங்கங்கே நோட்டம் விட, வீரர்களும், தனது உடலமைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் விளையாட்டிற்கு தேவையில்லாத உடற்பயிற்சிகளையெல்லாம் செயது பார்வையாளர்களை கவர்ந்துக் கொண்டிருந்தார்கள்.  மேள தாளத்டதுடன் இன்ஸ்பெக்டர் இக்பால், நல்லமுத்து கூட்டம் அமர்க்களமாய் வந்து சேர எல்லா மக்களும் புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் இக்பாலை ஆவலாகப் பார்த்தார்கள். இதுநாள் வரை பிச்சாண்டியைப் போல் தொப்பையும் சொல்லையுமாக இருந்த போலீஸ்களையே பார்த்து பழகிப்போன கம்பியூர் மக்களுக்கு இளவயது இக்பால் கவர்ச்சியாகத் தெரிந்தான். இக்பால் மேடையில் அசத்தலாக வந்து அமர்ந்தான்.  நல்லமுத்துவும் தலைமையாசிரியர் சுவாமிநாதனும் அருகில் அமர, யாரோ இன்னுமொரு வெள்ளை வேட்டி துண்டு வரவேற்புரை நிகழ்த்த கூட்டத்தில் சலசலப்பு உருவானது.

யாரோ ஒரு பிரமுகர் நல்லமுத்துவின் காதில் எதையோ கடித்து வைக்க, நல்லமுத்துவின் முகம் சற்று இருக்கமானதை இக்பால் கவனிக்க தவறவில்லை.  அருகில் பின்னால் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் கந்தசாமிக்கு விபரம் புரிந்தது.  இன்ஸ்பெக்டரிடம் சொல்லலாமா அல்லது வேண்டாமா என்று நெளிந்து கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் மத்திய வயதுள்ள ஒரு வெள்ளை வேட்டி ஜிப்பா மேடையேறி, இன்ஸ்பெக்டருக்கு ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு ஒலிவாங்கியைப் பிடித்தது.

'கம்பியூர் மற்றும் சுத்துப்பட்டு கிராமங்களின் தாய்க்குலமே! ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே!' பேச்சு கம்பீரமாக இருக்க இக்பால் சற்று ஆர்வமானான்.  நல்லமுத்துவிற்கு முகம் கடுகடுப்பானது.  கம்பியூரில் நல்லமுத்துவிற்கு சமமாக ஒரு பிரதிநிதி உண்டு என்றால் இப்போது ஒலி பெருக்கியில் கம்பீரமாக உரையாற்றும் பெரிய பாண்டிதான்.

பெரிய பாண்டி தொடர்ந்தார். 'கம்பியூரின் வேண்டுதலுக்கிணங்க நமதூர் காவல் நிலையத்திற்கு முதல்முறையாக காவல் துறை ஆய்வக அந்தஸ்தளித்து, கம்பியூரின் காவல் துறை ஆய்வாளகராக வந்திருக்கக்கூடிய இளய தலைமுறையின் இரும்புக் கோட்டை, காவல்துறையின் கண்ணியம், நியாயம் தழைக்க வந்த நீதிமான், வீரத்தின் விளை நிலம்.' இக்பாலுவிற்கு ஒன்றும் புரியவில்லை, இந்த மனிதன் எதற்காக இத்தனை பட்டபெயர் வைக்கிறார்? 'சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வந்த சமத்துவவாதி' என்றும் இன்னும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையோ பேசிக்கொண்டிருந்தார்.  இக்பாலுவிற்கு இவர்கள் நம்மை வைத்து லோக்கல் அரசியல் நடத்துகிறார்கள் என்பது புரிய ஆரம்பித்தது.  தமிழனின் தலை எழுத்து அப்படி.  உள்ளூர்க்காரர்கள் எவரும் அவரவர்களை மதிப்பதில்லை.  வெளியூரிலிருந்து யாரவது வந்தால் போட்டி போட்டு கவனிப்பார்கள். அவர்களுக்கு முன்னால் தனது திறமைகளைக்காட்ட தனது சொந்தங்களைக் கூட முட்டாளாக சித்தரிப்பார்கள்.  பெரிய பாண்டி என்ன பேசினார் என்பதை கவனிக்காமல் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த இக்பால் கைதட்டல் சத்தம் கேட்டு சிந்தனையை கலைத்தான்.

'இப்போது நமது கபடி விழாத் தலைவர், நாட்டண்மை நல்லமுத்து அவர்கள் இன்ஸ்பெக்டர் இக்பால் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவிப்பார்'.  பொன்னாடையும் மாலையையும் ஏற்றுக் கொண்டு மீண்டும் அமர்ந்தான்.  'இப்போது சுத்துப்பட்டு பதினெட்டு கிராமங்களின் சார்பாக இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு மாலை அணிவித்து கவுரவிக்கப்படும். ஒவ்வொரு ஊரர்க அழைக்கப்படும், அவ்வூர் தலைவர் வந்து மாலை அணிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றென்'.  இக்பால் நெளிய ஆரம்பித்தான்.  கபடி போட்டியை ஆரம்பிக்காமல், இவர்கள் ஏன் எனக்கு சால்ரா அடிக்கின்றார்கள் என்ற கேள்வியுடன் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பின்னால் நின்ற கந்தசாமியை அழைக்க அவன் இக்பாலின் காதருகில் குனிந்தான்.

'யோவ்... என்னய்யா நடக்குது இங்க... நம்பளை வச்சு அரசியல் நடத்துறாங்களா'  மெல்லிய குரலில் கேட்டான்.

'அய்யா கண்டுகாதிங்க எல்லாத்தையும் பின்னால சொல்றேன்' என்று சொல்லிவிட்டு பின்னால் ஒதுங்கிக் கொண்டான்.

'இப்போது... குத்தூர் குள்ளமணி மாலை அணிவிப்பார்' என்ற அறிவிப்பை தொடர்ந்து.. ஒரு முரட்டுத் தோற்றம் கொண்ட ஆறடி மனிதர் மாலையுடன் வந்து மாலை அணிவித்து வணங்கினார்.  குள்ள மணின்னு பேர்தானே ஒழிய ஆள் ஆறடிக்கு குறைவில்லாமல் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு நின்றான் இக்பால்.

'அடுத்து... வெட்டூர் வேலு அவர்கள் மாலை அணிவிப்பார்' அணிவகுப்பு தொடர்ந்தது.

'அடுத்து..அறுவாளூர் அரங்கநாயகம் அவர்கள்'... இக்பாலுவிற்கு இருப்பு கொள்ளவில்லை.. இது என்னடா ஊர் பெயர்.. என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த அறிவிப்பு இன்னும் அதைவிட திகிலாக இருந்தது.

'அடுத்து... கொலையூர் கோடாரி செல்லப்பன் அவர்கள் மாலை அணிவிப்பார்கள்'... இக்பாலுவிற்கு உண்மையிலேயே சிந்தனை தாறுமாறாக ஓட ஆரம்பித்தது

'அடுத்து.. ஈட்டியூர் இளங்கோ அவர்கள் மாலை அணிவிப்பார்கள்'... தெரியாத்தனமாக வந்து மாட்டிகிட்டமா... இக்பாலுவிற்கு மாலைகளின் இறுக்கத்தைவிட ஊரின் பெயர்களை கேட்க கேட்க வெலவெலக்க வைத்தது.

'அடுத்தபடியாக..கத்தியூர் காளிதாசன் அவர்கள் மாலை அணிவிப்பார்கள்'... இக்பாலுவிற்கு இப்போதுதான் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.  மாவட்ட போலீஸ் கண்காளிப்பாளர் வேண்டுமென்றேதான் இந்த காவல் நிலையத்திற்கு ஆய்வாளர் அந்தஸ்தளித்து நம்மை மாற்றல் செய்திருக்கிறார், என்னவோ சதி நடக்குது என்று யோசித்துக் கொண்டே முகத்தில் புன்முறுவலுடன் வருகின்ற மாலையெல்லாம் ஏற்றுக் கொண்டு நின்றான்.

'இறுதியாக... வள்ளியூர் வடிவுக்கரசி அவர்கள் மாலை அணிவிப்பார்கள்'... அப்பாட... ஒருவழியாக முடிந்தது என்று நினைத்தவன்... வடிவுக்கரசி, உண்மையிலெயே வடிவாகத்தான் மாலையுடன் வந்தாள்.  இப்போதுதான் நாற்பதை தொட்டவள் போல் இருந்தவளிடம்... மரியாதையாக மாலையை கையில் வாங்கிக் கொள்ள... அவள் 'ஏன் கழுத்துல போடவுட மாட்டிங்களோ' என்று கேட்டது அருகில் இருந்த எல்லோர் காதிலும் விழ கந்தசாமி சிரித்தே விட்டான். இக்பாலும் லேசாக அசடு வழிந்து சிரித்து அனுப்பி வைத்தான்.

'அடுத்து.. நாம் ஆவலுடன் எதிர் பார்த்த கபடிப் போட்டியை தொடங்கி வைக்க இன்ஸ்பெக்டர் இக்பால் அவர்களை அழைக்கிறோம்'... விசில் சத்தம் வானைப் பிளந்தது.. இக்பால் மேடையைவிட்டு இறங்கி வந்தான்.  இரண்டு அணிகள் தயாராக இருக்க, இக்பால் இரு அணிகளிடமும் கைகுலுக்கிவிட்டு ஒத்தை ரூபாய் நாணயத்தை 'டாஸ்' செய்து போட்டியை துவக்கி வைத்தான்.

                                                              ****************

காவல் நிலையத்தில் வந்து அமர்ந்த இக்பாலுவிற்கு மனம் சற்று குறுகுறுவென்றே இருந்தது... இன்ஸ்பெக்டருக்கு விழுந்த மாலைகளை ஒவ்வொன்றாக சுவற்றின் எல்லா பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருக்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தேசியத் தலைவர்கள் படங்களில் அணிவித்துக் கொண்டிருந்தான் கான்ஸ்டபிள் கந்தசாமி.

'கான்ஸ்டபிள்.. என்னய்யா...ஊர் பேரெல்லாம் இப்படி குத்தும் கொலையுமாவே இருக்கு'

'பேர் மட்டும் இல்ல அய்யா... ஆளுங்களும் அப்படித்தான்' இக்பால் நெற்றி சுருங்கியது. 'அடிச்சிக்க ஆரம்பிச்சுட்டா... இவனுங்கள அடக்க முடியாது... மாமன் மச்சான் சொந்த பந்தம் எதுவும் பாக்காம அடிச்சுக்கிட்டு சாவானுங்க' இக்பால் முகத்தை அழுத்தமாக தேய்த்தான். திடீரென மனம் படபடக்க ஆரம்பித்தது... கபடி போட்டியை வச்சு ஏதாவது கசமுசா பண்ணூவனுங்களொ..

'குத்தூர் குள்ளமணி போனவருஷம்தான் மூணு வருஷம் முடிஞ்சு வெளியெ வந்தான்'. கந்தசாமி தொடர்ந்தான்.  'வெட்டூர் வேலுவோட தம்பிய வெட்டிபுட்டு உள்ள போனான்.  என்னைக்கு வெட்டூர் வேலு குள்ளமணிய வெட்டப் போறானோ தெரியல. கொலையூர் கோடாரிக்கும் வள்ளியூர் வடிவுக்கும் கொஞ்சம் அப்படி இப்படின்னு பேச்சு.  இது ஈட்டியூர் இளங்கோவுக்கு பிடிக்கலன்னு கேள்வி, என்னைக்கு இவனுங்க குத்திக்கப் போறாங்கன்னு தெரியல...' கந்தசாமியையே பார்த்துக் கொண்டிருந்த இக்பால் மனதில் ஒரு நீண்ட கால் விடுப்பு எப்படி போடுவது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

'ரைட்டர கூப்பிடுயா' இக்பால் சொல்ல கந்தசாமி அடுத்த அறையை நோக்கி நடந்தான். 'கரமுரா' என்று கத்திக் கொண்டிருந்த வொயர்ல்ஸ் ரேடியோ அருகில் குரட்டை விட்டுக் கொண்டிருந்தார் ரைட்டர் ரத்தினம். 'இந்த கிழட்டு பயலுக்கு எப்படித்தான் இந்த சத்தத்திலயும் தூங்க முடியுதோ' என்று முனகிக் கொண்டே 'அண்ணே... அண்ணே.. அய்யா கூப்பிடரார்' என்றான்.  அவர் எழுவதாக இல்லை... 'எங்கய்யா ரத்தினம்.. தலையில தண்ணிய மொண்டு ஊத்துயா..' என்ற இக்பாலின் அலறலைக் கேட்டு வெடுக்கென எழுந்து ஓடி வந்தார் ரத்தினம்.

'ஊரே ஜே ஜேன்னு இருக்கு உனக்கு எப்படியா தூக்கம் வருது... வீட்டுல தூங்காம என்னய்ய பண்ணுவீங்க, நீங்கலாம் டூட்டிக்கு வர்ரது என்ன தூங்கறதுக்கா...' எரிச்சலுடன் கத்தினான் இக்பால்

'மன்னிச்சிடுங்கய்யா...' ஒருமுறை ரத்தினத்தை மேலும் கீழும் பார்த்தவன்' கடந்த மூணு வருஷத்து ஃபைல் எல்லாத்தையும் எடுத்துகிட்டு வாய்யா...'

'ஏட்டு எங்கய்யா...'

'கபடி போட்டி பார்த்துக்கிட்டு இருப்பார்யா..' கந்தசாமி பதிலளித்தான்.

'கான்ஸ்டபிள் முருகனை அனுப்பி கூப்பிட்டு வரச்சொல்லுயா' என்று கத்திவிட்டு மனதிற்குள் தாறுமாறாக ஓடும் எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்தான்.  சற்று அமைதியாக இருந்த இக்பால் தனது மொபைலை எடுத்து கந்தசாமி எடுத்த புகைப்படத்தை தேட ஆரம்பித்தான்.

'கான்ஸ்டபிள்.... எங்கய்யா.. ஒரு போட்டோவையும் காணோம், எடுத்தியா...இல்லியா' என்றவாறு மொபைலில் தேடித் தேடிப் பார்த்தான். கந்தசாமியும் இக்பால் பின்னால் நின்று குனிந்தவனாய் பார்த்தான்.  இக்பால் பின்னால் நிமிர்ந்துப் பார்க்க கந்தசாமியின் முகத்தில் மோதிக் கொண்டான்.  இக்பாலின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது... 'ஏன்யா.. உனக்கிட்ட மொபைலை கொடுத்தனே என்ன பண்ணின'

'அய்யா... ' தலையை சொரிந்தான்... 'நான் என்னென்னமோ பட்டனல்லம் அமுக்கிப் பார்த்தேன்... ஒன்னும் சரியா வரல'  தலையை சொரிந்துக் கொண்டான் கந்தசாமி.

'அய்யோ... அய்யோ' தலையில் அடித்துக் கொண்டான். 'என்ன கருமம்டா இது... ஏன்யா... எப்படியா... அங்கங்க கிராமங்களெல்லாம் சிட்டிய தூக்கி சாப்பிடற அளவுக்கு முன்னேறிக்கிட்டு இருக்கு.. ஏன்யா நீங்கள்ளாம் ஏதாவது சத்தியம் பண்ணிட்டு வந்திருக்கீங்களா, அநியாயத்துக்கு இப்படி கிராமத்தனத்தோட இருக்கீங்களே..' கந்தசாமி நெளிந்து வளைந்து நகர்ந்தான்.

இக்பால் யோசிக்க ஆரம்பித்தான். கம்பியூர் பார்க்கறதுக்குதான் அமைதியா தெரியுது... இதுல என்னமோ ஆழமான விஷயங்கள் இருக்கு.  வேலைப் பாக்குற போலீஸ் காரர்களெல்லாம் நடிக்கிறானுங்க, இவனுங்க எவனும் கிறுக்கணுங்க கிடையாது. ஒன்று என்னன்னு கண்டுபிடிச்சு எதையாவது செய்யனும், இல்லன்னா.. மாமனாரோட செல்வாக்க வச்சு வேற எங்காவது மாற்றல் வாங்கிட்டு போயிடனும். முதல்ல ஃபைல பார்ப்போம், எதாவது கிடைக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கவும்... திபுதிபுவென்று நான்கைந்து பேர் போலீஸ் ஸ்டேஷன் வாயிலில் 'அய்யய்யோ... அய்யா... இன்ஸ்பெக்டர் சார்..என்று கத்திக் கொண்டு வரவும் சரியாக இருந்தது.

(தொடரும்)