Tuesday, 4 December 2012

எங்க வீட்டு போலீஸ்


கம்பியூர் காவல் நிலையத்தில் காவல் துறை ஆய்வாளாராக பொறுப்பு எடுத்ததிலிருந்தே இக்பாலிற்கு ஏன் இந்த வேலைக்கு வந்தோம் என்று வருத்தப்பட ஆரம்பித்துவிட்டான். ஏன் வந்தோம் என்ற எரிச்சலுக்கு காரணம், கம்பியூரில் பெரிதாகச் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற ஏக்கம் ஒரு பக்கம். அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றார் போல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற ஆதங்கம் மறு பக்கம்.   இன்னும் சொல்லப் போனால் இந்த பதவி உயர்வு இப்போது ஏன் வந்தது என்று வருத்தப்பட ஆரம்பித்துவிட்டான்.  கம்பியூர் பின்தங்கிய இடம் மட்டும் இல்லை,மிகவும் பின் தங்கிய இடம் என்றுதான் சொல்ல வேண்டும்.  எப்போவாவது ஒன்றிரண்டு பேருந்துகள் வந்து போகும் பெரிய கிராமம், தியேட்டர், முன்னூறு மாணவ மாணவிகள் படிக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி, இரண்டு கடைத்தெருக்கள் என்று ஓரளவு இருந்தாலும்,பொதுவாக ஆரவாரமற்ற இன்னும் சொல்லப் போனால் கிராமத்து வாசம் மாறாத அழகிய கிராமம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கம்பியூரை பொறுத்தவரை எப்போது பார்த்தாலும் குடித்துவிட்டு நடக்கும் கலாட்டாகள், அவ்வப் போது ஒன்றிரண்டு அரிவாள் வெட்டு, கத்தி குத்து என்று வீர விளையாட்டுகள் கம்பியூர் காவல் நிலையத்திற்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தது..  அரசும் கம்பியூர் காவல் நிலையத்திற்கு உயர்வுநிலை கொடுத்து,உதவி ஆய்வளாராக தஞ்சையில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்த இக்பாலை ஆய்வாளராக பதவி உயர்வு கொடுத்து இங்கே வேலை மாற்றம் செய்துவிட்டது. மனைவி பிள்ளைகளை தஞ்சையிலேயே விட்டுவிட்டு பொறுப்பேற்க வந்தவன் ஏண்டா இந்த ஊருக்கு வந்தோம் என்று வெறுப்பும் வேதனையும் பட ஆரம்பித்துவிட்டான்.  தங்குவதற்கு நல்ல வீடு கிடைக்காமல் கடைசியில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தயவில் பள்ளிக்கூடத்திலேயே பயன் படுத்தாத ஒரு வகுப்பறையில் தங்க வேண்டி நேர்ந்தது. ஏறக்குறைய ஒரு மாதம் கழித்து கான்ஸ்டபிள் கந்தசாமி அலையோ அலை என்று அலைந்து ஒரு ஓட்டு வீட்டை வாடகைக்கு பிடித்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும் கழிப்பிடம், குளியல் எல்லாவற்றையும் கிணற்றங்கரையில் திறந்தவெளியில் செய்ய வேண்டிய நிலை.  ஒரு வழியாக கொஞ்சம் கீற்று மட்டைகளை வைத்து தற்காலிக சீரமைப்பு செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று தயங்கியே கலை கடன்களை செய்து வ்நதான்.

உதவி ஆய்வாளர் பிச்சாண்டி இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால் கண்டதற்கெல்லம் விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு இருக்கிற விடுமுறைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு அவ்வப்போது ஆள் தலைமறைவு ஆகிவிடுவார்.

தெருவில் நடக்கும் கிட்டிப்புல்லு தகராறிலிருந்து, தேங்காய் திருட்டு, பலிங்கு விளையாட்டில் மண்டை உடைவது வரை மத்திசம் செய்தே இரண்டு மாதங்களை ஓட்டி முடித்தான் இக்பால். இந்த சூழ்நிலையில் மனைவியை அழைத்துவர முடியாமல் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தஞ்சைக்கு சென்று வந்தான். மொத்தத்தில் சோம்பேறித்தனம் முழுமையாகத் தொத்திக் குள்ள தினத்தந்தி நாளிதழை அடி முதல் நுனிவரை மேய்ந்துக் கொண்டிருந்தான்.

வேகமாக வந்த கந்தசாமி 'வணக்கம் அய்யா' என்று ஓங்கி பூட்ஸ் காலால் தரையை அடித்து சல்யூட் வைக்க இக்பால் ஒரு வினாடி அதிர்ந்துப் போய்விட்டான்.

'ஏன்யா... சும்மா வந்து வணக்கம் சொல்லக்கூடாதா'

'அய்யா பயந்துட்டிங்களா ?' கந்தசாமி

'என்ன சேதி...' முறைத்தான் இக்பால்.

'அய்யா உங்கள பாக்குறதுக்கு நாட்டாமை நல்ல முத்து வந்திருக்கார்.
சிறிது நேரம் யோசித்தவன் 'வரச் சொல்லு' என்று சொல்லிவிட்டு நாளிதழை மடக்கி வைக்கவும், வெள்ளை வேட்டி துண்டு சகிதமாக தளபுள என்ற தனது உடம்பை தூக்க முடியாமல் தூக்கி வந்தார் நல்லமுத்து.

நல்லமுத்து கம்பியூர் மற்றும் சுற்று வட்டாரம் எல்லா ஊர்களுக்கும் தெரிந்த ஒரு முக்கியமான உள்ளூர் அரசியல்வாதி.  எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ அந்த கட்சியில் முதலில் சேர்ந்துவிடுவார். ஒன்றியம், வட்டம், மாவட்டம் என்று எல்லோருக்கும் கிடா வெட்டி விருந்து போட்டு நாட்டமை பதவியை விடாமல் பிடித்துக் கொண்டு பிழைப்பு நடத்தும் திறமைசாலி.  மச்சான், மச்சினன், மாமன், சித்தப்பா என்று எல்லோரிடமும் உறவு முறை கொண்டாடி யாரையும் பகைத்துக் கொள்ளமல் சுத்துப்பட்டு பதினெட்டு கிராமத்திற்கும் நியாயம் சொல்லியே பிழைப்பு நடத்தி நல்ல செல்வாக்கு.  ஓரளவு மேடைப் பேச்சிலும் திறமைசாலி.

'என்ன நாட்டமை... என்ன விஷயம்'

'ஒரு முக்கியமான விஷயமா சாரை பாத்துட்டு போகலாம்னு வந்தேன்'

இக்பாலுக்கும் பொழுது போக வேண்டும், எவ்வளவு நேரம்தான் தினத்தந்தியையும், குமுதத்தையும் படித்து பொழுது போக்குவது என்று எதையாவது பேசிக் கொண்டிருக்கலாம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.

'சாருக்கு சொந்த ஊரு தஞ்சாவூர்தான..'

'இல்ல பக்கம்.. நீங்க தஞ்சாவூருக்கல்லாம் வந்திருக்கீங்களா'

'அது என்ன சார் அப்படி கேட்டுட்டீங்க... பெரிய கோயிலுக்கு போகாதா ஒரு தமிழனுண்டா, சார் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்.. ராஜ ராஜ சோழன் காலத்துலேயே அங்க முஸ்லீம்கள்... வந்துட்டத படிச்சிருக்கேன்' படிச்சவன் என்று மீசையை தடவிக் கொண்டே சொல்லாமல் சொன்னார்.

'இருக்கலாம்..' ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டான் இக்பால்

'என்ன தம்பி இப்படி இருக்கலாம்னு சாதரணமா சொல்லீட்டிங்க'. சார் போய் தம்பி வர இக்பால் நல்லமுத்துவை ஏற இறங்க பார்த்தான். கொஞ்சம் விட்டா சொந்தம் கொண்டாடிவானுங்களே என்று நினைத்தவன் தொலையட்டும் அப்பா வயது என்று சும்மா இருக்க நல்லமுத்து தொடர்ந்தார்.

'ராஜ ராஜ சோழனோட தமக்கை ஒருத்தி ரொம்ப உடம்பு முடியாம இருந்தப்ப... ஒரு முஸ்லீம் மருத்துவர்தான் அவங்களுக்கு மருத்துவம் பார்த்து சுகப்படுத்தினதால... அந்த காலத்திலெயே முஸ்லீம் மக்களுக்கு நிலமெல்லாம் தாநியமா கொடுத்ததா வரலாறு'

என்ன கொடுமைடா இதல்லாம்... கம்பியூர் வந்தது வரலாறு படிக்கவா... என்று மனதுக்குள் நொந்துகொண்டு... இந்த பேச்சுபடிச்சவனை எப்படியாவது நாசூக்கா பேசி வெளிய அனுப்பனும்.  நல்லமுத்துவின் சுபாவமும் பேச்சும் இக்பாலுவிற்கு அவரை கொஞ்சம் தள்ளியே வைக்கவேண்டும் என்று சிந்திக்க வைத்தது.

'தம்பி என்ன கள்ளனா... இல்ல வெள்ளாளனா' நல்லமுத்து குரலை தாழ்த்திக் கேட்டார்.

இக்பாலுவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

'அதான் தம்பி... உங்க பூர்வீகம் ஒன்று கள்ளனா இருக்கனும்... இல்லன்னா.

'நாட்டாமை... இது என்ன ஆராய்ச்சி...'

'ஒன்னுமில்ல... தஞ்சாவூர் மாவட்டத்துல வெள்ளாளர்களும் கள்ளர்களும் அதிகம். என்னோடா.. சித்தப்பாவோட கொலுந்தியா... கள்ளர் சாதி.  மாமவோட சம்பந்தரோட சம்பந்தர் வெள்ளாளர்.... அதான்... கேட்டேன்'

இக்பால் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக அவரைப் பார்த்தான். 'நாம ரெண்டு பேரும் மனித சாதி... அது போதும் இப்போதைக்கு'

'சரிதான்... சரிதான்...' சுரத்து குறைந்த போனது நல்லமுத்துவிற்கு.  சாதி பத்தி பேசுனவுடன இன்ஸ்பெக்டருக்கு மூடு சரியில்லை போல இருக்கு என்று நினைத்தவராய் 'சரி... வந்த சேதியை சொல்லிடரேன்...' குரலை கனைத்துக் கொண்டார்.

'அடுத்த வாரம்... நம்பவூர்ல... கபடி போட்டி நடக்க போவுது, சுத்துப் பட்டு பதினெட்டு கிராமமும் கலந்துக்கிட்டு ஒரு வாரத்துக்கு திருவிழாதான்... ஸ்கூல் வேர பத்து நாளைக்கு லீவு... அதான் கபடி போட்டி நடத்துறோம்...இன்ஸ்பெக்டர் தம்பிதான் தலைமை ஏத்தி நடத்தி தரனும்' இக்பால் ஆவலாகக் கேட்டான். தலைமை ஏக்குறது ஒரு பக்கம் இருந்தாலும்... சாய்ந்திரத்துல கபடி விளையாட்டு பார்க்கலாம் என்று மனதிற்குள் நினைத்தவனாய் ஒத்துக் கொண்டான்.
                                                   
                                                            ***************

மொபைலில் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த இக்பால். இடை இடையே காவல் நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்த சலசலப்பில் கொஞ்ச நேரம் பேசிவிட்டு போனை வைத்தான். ஏட்டு ஏகாம்பரம் எல்லா கான்ஸ்டபிள்களுக்கும் கபடி போட்டி திருவிழாவின் பாதுகாப்பு பணிக்கான உத்தரவுகளை கொடுத்துக் கொண்டிருந்தார்.  இக்பால் எதையும் கண்டு கொள்வதாக இல்லை.  என்ன ஊர் என்ன போலீஸ் ஸ்டேஷன் என்று கிட்டதட்ட வேலை பார்க்கும் ஆர்வமே இல்லாமல் அமர்ந்திருந்தான்.

கந்தசாமி வழக்கம் போல் வந்து சல்யூட் அடித்து நின்றான்.

'என்னய்யா..'

'அய்யாவ கூட்டிட்டு போக வந்திருங்காங்க'

'கூட்டிட்டு போகவா... எங்க..'

'அதான் கபடி திருவிழாவுக்கு'

'கொஞ்ச நேரத்துல... நான் வர்ரேன்னு சொல்லு'

கந்தசாமி சிரித்தான்...'அய்யாவுக்கு ஊரு புதுசு.. அய்யா.. நீங்க வெளிய வந்து பாருங்க...'

இக்பாலுவிற்கு விநோதமாக இருந்தது.

'அய்யா... கான்ஸ்டபிள்ளாம் ரெடி... நீங்க அனுமதி கொடுத்தா.. அனுப்பிடுவேன்' ஏட்டு மரியாதையுடன் சொல்லி முடித்தார்.

இக்பால் எழுந்து தொப்பியை தலையில் அணிந்துவிட்டு... பெல்டையும், கால்சட்டையும் சரி செய்தவனாய்... விறைப்புடன் அணி வகுத்து நின்ற பன்னிரெண்டு கான்ஸ்டபிள்களின் முன்னால் வந்து நின்றான். ஒன்றிரண்டு பேரைத் தவிர்த்து மற்ற கான்ஸ்டபிள்கள் எவரும் போலீஸ் வேலைக்கே லாயக்கில்லை என்பது போல் உடலமைப்பு.  அவர்கள் அணிந்திருக்கும் யூனிபார்மை பார்த்தவன் இன்னும் இரண்டு வருடம் கம்பியூரில் குப்பைக் கொட்டினால் நாமும் இப்படித்தான் ஆகிப்போவோம் என்று நொந்து கொண்டவனாய் இந்த சோத்துமண்டிகளுக்கு என்ன சொல்வது என்று சிறிது நேரம் அவர்கள் எல்லோர் முகத்தையும் ஒவ்வொன்றாய் பார்த்தான்.  சரி எதையாவது சொல்லி வைப்போம் என்று பேச ஆரம்பித்தான்.

'மாமான்... மச்சான்னு ஊருல இருக்கிற எல்லோரையும் சொந்தம் கொண்டாடிக்கிட்டு... டூட்டியை விட்டுடாதீங்க... எந்த அசம்பாவிதமும் நடக்காமா பார்த்துக்கங்க ...என்ன புரியுதா?'

'புரியுதுங்கய்யா....' என்று எல்லோரும் ஒரு சேர சொல்ல, ஏட்டு 'டிஸ்மிஸ்' என்று சத்தமிட... போலீசுக்கே உரிய நடையில் நடக்க முயற்சித்து கண்ணா பின்னாவென்று ஒருவர் வலது காலை முன்னே வைப்பதும், இன்னொருவர் இடது காலை முன்வைப்பதுமாய் கடார் மடார் என்ற பூட்ஸ் சத்தத்துடன் வெளியே சென்றார்கள்.  அவர்கள் நடந்து போவதையே பார்த்து நின்றவன் பெருமூச்சுடன் தலையை இங்குமங்கும் அசைத்துக் கொண்டு தனது நாற்கலிக்கு சென்று அமர்ந்தான்.

                                                              *****************

கண்ணாடி முன் நின்று தன்னை ஒருமுறை சரி பார்த்துக் கொண்ட இக்பால் போலீஸ் மிடுக்குடன் வெளியே வந்தான்.  வந்தவன் ஒரு நிமிடம் திகைத்துப் போய்விட்டான்.  போலீஸ் ஸ்டேஷன் வெளியில் பல வண்ணக் காகிதக் கொடிகளும், தெருவெல்லாம் மாவிலை தோரணங்களும் உண்மையில் திருவிழா போல்தான் தோற்றமளித்தது.  ஸ்டேஷன் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு அமர்க்களப் படுத்திவிட்டார்கள்.  நல்லமுத்து வேகமாக முன்னால் வந்து கும்பிட்டு வரவேற்க நாதஸ்வரம் மேளங்கள் முழங்க இக்பாலை ஊர்வலமாக அழைத்துப் போனார்கள். பல வண்ணங்களில் பனியன் ட்ரவுசர்கள் அணிந்த கபடி வீரர்கள் ஐ.பி.ல் அணிகள் போல் முன்னால் அணிவகுத்து போக இக்பால் அவர்கள் மத்தியில் சினிமா ஹீரோவைப் போல் நடந்து போனான்.  இக்பாலுக்கு மனதிற்குள் திடீரென உற்சாகம் படை எடுத்தது.  இந்த அணிவகுப்பை யாரவது வீடியோ எடுத்தால் சல்மாவிடம் போட்டுக் காட்டலாம்.  கந்தசாமியை அழைத்து தனது மொபைலைக் கொடுத்து போட்டோ எடுக்கச் சொன்னான். ஊரே கூடி நின்று வேடிக்கைப் பார்த்தது. யார் யாரொ அவன் அருகில் நடக்க ஆசைப்பட்டு முட்டி மோதி வந்து கொண்டிருந்தார்ர்கள்.  பதினெட்டு வயது குமரி முதல் பல் போன கிழவி வரை அவனை ஏதோ சினிமா நடிகனைப் போல் ஆர்வமாய் வேடிக்கைப் பார்க்க்க கந்தசாமிக்கு இக்பால் கொஞ்சம் அதிகமாகவே ஸ்டைல் காட்டுவதாக உணர்ந்தான்.

தியேட்டருக்கருகில் இருந்த விளையாட்டு மைதானம் தடபுடலாகத்தான் இருந்தது. காவடி எதுவும் எடுக்காதுதான் பாக்கி, மற்றபடி மைதானத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது.  இன்னும் பத்து நாளைக்கு தியேட்டரில் பிசினஸ் எதுவும் பிரமாதமாக இருக்காது என்று தெரிந்த தியேட்டர் ஓனர், அவள் ஒரு தொடர்கதை படத்தை ஓட விட்டிருந்தார்.  அங்கங்கே விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  பல இளவட்ட பெண்கள் அவர்களை அங்கங்கே நோட்டம் விட, வீரர்களும், தனது உடலமைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் விளையாட்டிற்கு தேவையில்லாத உடற்பயிற்சிகளையெல்லாம் செயது பார்வையாளர்களை கவர்ந்துக் கொண்டிருந்தார்கள்.  மேள தாளத்டதுடன் இன்ஸ்பெக்டர் இக்பால், நல்லமுத்து கூட்டம் அமர்க்களமாய் வந்து சேர எல்லா மக்களும் புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் இக்பாலை ஆவலாகப் பார்த்தார்கள். இதுநாள் வரை பிச்சாண்டியைப் போல் தொப்பையும் சொல்லையுமாக இருந்த போலீஸ்களையே பார்த்து பழகிப்போன கம்பியூர் மக்களுக்கு இளவயது இக்பால் கவர்ச்சியாகத் தெரிந்தான். இக்பால் மேடையில் அசத்தலாக வந்து அமர்ந்தான்.  நல்லமுத்துவும் தலைமையாசிரியர் சுவாமிநாதனும் அருகில் அமர, யாரோ இன்னுமொரு வெள்ளை வேட்டி துண்டு வரவேற்புரை நிகழ்த்த கூட்டத்தில் சலசலப்பு உருவானது.

யாரோ ஒரு பிரமுகர் நல்லமுத்துவின் காதில் எதையோ கடித்து வைக்க, நல்லமுத்துவின் முகம் சற்று இருக்கமானதை இக்பால் கவனிக்க தவறவில்லை.  அருகில் பின்னால் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் கந்தசாமிக்கு விபரம் புரிந்தது.  இன்ஸ்பெக்டரிடம் சொல்லலாமா அல்லது வேண்டாமா என்று நெளிந்து கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் மத்திய வயதுள்ள ஒரு வெள்ளை வேட்டி ஜிப்பா மேடையேறி, இன்ஸ்பெக்டருக்கு ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு ஒலிவாங்கியைப் பிடித்தது.

'கம்பியூர் மற்றும் சுத்துப்பட்டு கிராமங்களின் தாய்க்குலமே! ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே!' பேச்சு கம்பீரமாக இருக்க இக்பால் சற்று ஆர்வமானான்.  நல்லமுத்துவிற்கு முகம் கடுகடுப்பானது.  கம்பியூரில் நல்லமுத்துவிற்கு சமமாக ஒரு பிரதிநிதி உண்டு என்றால் இப்போது ஒலி பெருக்கியில் கம்பீரமாக உரையாற்றும் பெரிய பாண்டிதான்.

பெரிய பாண்டி தொடர்ந்தார். 'கம்பியூரின் வேண்டுதலுக்கிணங்க நமதூர் காவல் நிலையத்திற்கு முதல்முறையாக காவல் துறை ஆய்வக அந்தஸ்தளித்து, கம்பியூரின் காவல் துறை ஆய்வாளகராக வந்திருக்கக்கூடிய இளய தலைமுறையின் இரும்புக் கோட்டை, காவல்துறையின் கண்ணியம், நியாயம் தழைக்க வந்த நீதிமான், வீரத்தின் விளை நிலம்.' இக்பாலுவிற்கு ஒன்றும் புரியவில்லை, இந்த மனிதன் எதற்காக இத்தனை பட்டபெயர் வைக்கிறார்? 'சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வந்த சமத்துவவாதி' என்றும் இன்னும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையோ பேசிக்கொண்டிருந்தார்.  இக்பாலுவிற்கு இவர்கள் நம்மை வைத்து லோக்கல் அரசியல் நடத்துகிறார்கள் என்பது புரிய ஆரம்பித்தது.  தமிழனின் தலை எழுத்து அப்படி.  உள்ளூர்க்காரர்கள் எவரும் அவரவர்களை மதிப்பதில்லை.  வெளியூரிலிருந்து யாரவது வந்தால் போட்டி போட்டு கவனிப்பார்கள். அவர்களுக்கு முன்னால் தனது திறமைகளைக்காட்ட தனது சொந்தங்களைக் கூட முட்டாளாக சித்தரிப்பார்கள்.  பெரிய பாண்டி என்ன பேசினார் என்பதை கவனிக்காமல் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த இக்பால் கைதட்டல் சத்தம் கேட்டு சிந்தனையை கலைத்தான்.

'இப்போது நமது கபடி விழாத் தலைவர், நாட்டண்மை நல்லமுத்து அவர்கள் இன்ஸ்பெக்டர் இக்பால் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவிப்பார்'.  பொன்னாடையும் மாலையையும் ஏற்றுக் கொண்டு மீண்டும் அமர்ந்தான்.  'இப்போது சுத்துப்பட்டு பதினெட்டு கிராமங்களின் சார்பாக இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு மாலை அணிவித்து கவுரவிக்கப்படும். ஒவ்வொரு ஊரர்க அழைக்கப்படும், அவ்வூர் தலைவர் வந்து மாலை அணிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றென்'.  இக்பால் நெளிய ஆரம்பித்தான்.  கபடி போட்டியை ஆரம்பிக்காமல், இவர்கள் ஏன் எனக்கு சால்ரா அடிக்கின்றார்கள் என்ற கேள்வியுடன் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பின்னால் நின்ற கந்தசாமியை அழைக்க அவன் இக்பாலின் காதருகில் குனிந்தான்.

'யோவ்... என்னய்யா நடக்குது இங்க... நம்பளை வச்சு அரசியல் நடத்துறாங்களா'  மெல்லிய குரலில் கேட்டான்.

'அய்யா கண்டுகாதிங்க எல்லாத்தையும் பின்னால சொல்றேன்' என்று சொல்லிவிட்டு பின்னால் ஒதுங்கிக் கொண்டான்.

'இப்போது... குத்தூர் குள்ளமணி மாலை அணிவிப்பார்' என்ற அறிவிப்பை தொடர்ந்து.. ஒரு முரட்டுத் தோற்றம் கொண்ட ஆறடி மனிதர் மாலையுடன் வந்து மாலை அணிவித்து வணங்கினார்.  குள்ள மணின்னு பேர்தானே ஒழிய ஆள் ஆறடிக்கு குறைவில்லாமல் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு நின்றான் இக்பால்.

'அடுத்து... வெட்டூர் வேலு அவர்கள் மாலை அணிவிப்பார்' அணிவகுப்பு தொடர்ந்தது.

'அடுத்து..அறுவாளூர் அரங்கநாயகம் அவர்கள்'... இக்பாலுவிற்கு இருப்பு கொள்ளவில்லை.. இது என்னடா ஊர் பெயர்.. என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த அறிவிப்பு இன்னும் அதைவிட திகிலாக இருந்தது.

'அடுத்து... கொலையூர் கோடாரி செல்லப்பன் அவர்கள் மாலை அணிவிப்பார்கள்'... இக்பாலுவிற்கு உண்மையிலேயே சிந்தனை தாறுமாறாக ஓட ஆரம்பித்தது

'அடுத்து.. ஈட்டியூர் இளங்கோ அவர்கள் மாலை அணிவிப்பார்கள்'... தெரியாத்தனமாக வந்து மாட்டிகிட்டமா... இக்பாலுவிற்கு மாலைகளின் இறுக்கத்தைவிட ஊரின் பெயர்களை கேட்க கேட்க வெலவெலக்க வைத்தது.

'அடுத்தபடியாக..கத்தியூர் காளிதாசன் அவர்கள் மாலை அணிவிப்பார்கள்'... இக்பாலுவிற்கு இப்போதுதான் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.  மாவட்ட போலீஸ் கண்காளிப்பாளர் வேண்டுமென்றேதான் இந்த காவல் நிலையத்திற்கு ஆய்வாளர் அந்தஸ்தளித்து நம்மை மாற்றல் செய்திருக்கிறார், என்னவோ சதி நடக்குது என்று யோசித்துக் கொண்டே முகத்தில் புன்முறுவலுடன் வருகின்ற மாலையெல்லாம் ஏற்றுக் கொண்டு நின்றான்.

'இறுதியாக... வள்ளியூர் வடிவுக்கரசி அவர்கள் மாலை அணிவிப்பார்கள்'... அப்பாட... ஒருவழியாக முடிந்தது என்று நினைத்தவன்... வடிவுக்கரசி, உண்மையிலெயே வடிவாகத்தான் மாலையுடன் வந்தாள்.  இப்போதுதான் நாற்பதை தொட்டவள் போல் இருந்தவளிடம்... மரியாதையாக மாலையை கையில் வாங்கிக் கொள்ள... அவள் 'ஏன் கழுத்துல போடவுட மாட்டிங்களோ' என்று கேட்டது அருகில் இருந்த எல்லோர் காதிலும் விழ கந்தசாமி சிரித்தே விட்டான். இக்பாலும் லேசாக அசடு வழிந்து சிரித்து அனுப்பி வைத்தான்.

'அடுத்து.. நாம் ஆவலுடன் எதிர் பார்த்த கபடிப் போட்டியை தொடங்கி வைக்க இன்ஸ்பெக்டர் இக்பால் அவர்களை அழைக்கிறோம்'... விசில் சத்தம் வானைப் பிளந்தது.. இக்பால் மேடையைவிட்டு இறங்கி வந்தான்.  இரண்டு அணிகள் தயாராக இருக்க, இக்பால் இரு அணிகளிடமும் கைகுலுக்கிவிட்டு ஒத்தை ரூபாய் நாணயத்தை 'டாஸ்' செய்து போட்டியை துவக்கி வைத்தான்.

                                                              ****************

காவல் நிலையத்தில் வந்து அமர்ந்த இக்பாலுவிற்கு மனம் சற்று குறுகுறுவென்றே இருந்தது... இன்ஸ்பெக்டருக்கு விழுந்த மாலைகளை ஒவ்வொன்றாக சுவற்றின் எல்லா பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருக்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தேசியத் தலைவர்கள் படங்களில் அணிவித்துக் கொண்டிருந்தான் கான்ஸ்டபிள் கந்தசாமி.

'கான்ஸ்டபிள்.. என்னய்யா...ஊர் பேரெல்லாம் இப்படி குத்தும் கொலையுமாவே இருக்கு'

'பேர் மட்டும் இல்ல அய்யா... ஆளுங்களும் அப்படித்தான்' இக்பால் நெற்றி சுருங்கியது. 'அடிச்சிக்க ஆரம்பிச்சுட்டா... இவனுங்கள அடக்க முடியாது... மாமன் மச்சான் சொந்த பந்தம் எதுவும் பாக்காம அடிச்சுக்கிட்டு சாவானுங்க' இக்பால் முகத்தை அழுத்தமாக தேய்த்தான். திடீரென மனம் படபடக்க ஆரம்பித்தது... கபடி போட்டியை வச்சு ஏதாவது கசமுசா பண்ணூவனுங்களொ..

'குத்தூர் குள்ளமணி போனவருஷம்தான் மூணு வருஷம் முடிஞ்சு வெளியெ வந்தான்'. கந்தசாமி தொடர்ந்தான்.  'வெட்டூர் வேலுவோட தம்பிய வெட்டிபுட்டு உள்ள போனான்.  என்னைக்கு வெட்டூர் வேலு குள்ளமணிய வெட்டப் போறானோ தெரியல. கொலையூர் கோடாரிக்கும் வள்ளியூர் வடிவுக்கும் கொஞ்சம் அப்படி இப்படின்னு பேச்சு.  இது ஈட்டியூர் இளங்கோவுக்கு பிடிக்கலன்னு கேள்வி, என்னைக்கு இவனுங்க குத்திக்கப் போறாங்கன்னு தெரியல...' கந்தசாமியையே பார்த்துக் கொண்டிருந்த இக்பால் மனதில் ஒரு நீண்ட கால் விடுப்பு எப்படி போடுவது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

'ரைட்டர கூப்பிடுயா' இக்பால் சொல்ல கந்தசாமி அடுத்த அறையை நோக்கி நடந்தான். 'கரமுரா' என்று கத்திக் கொண்டிருந்த வொயர்ல்ஸ் ரேடியோ அருகில் குரட்டை விட்டுக் கொண்டிருந்தார் ரைட்டர் ரத்தினம். 'இந்த கிழட்டு பயலுக்கு எப்படித்தான் இந்த சத்தத்திலயும் தூங்க முடியுதோ' என்று முனகிக் கொண்டே 'அண்ணே... அண்ணே.. அய்யா கூப்பிடரார்' என்றான்.  அவர் எழுவதாக இல்லை... 'எங்கய்யா ரத்தினம்.. தலையில தண்ணிய மொண்டு ஊத்துயா..' என்ற இக்பாலின் அலறலைக் கேட்டு வெடுக்கென எழுந்து ஓடி வந்தார் ரத்தினம்.

'ஊரே ஜே ஜேன்னு இருக்கு உனக்கு எப்படியா தூக்கம் வருது... வீட்டுல தூங்காம என்னய்ய பண்ணுவீங்க, நீங்கலாம் டூட்டிக்கு வர்ரது என்ன தூங்கறதுக்கா...' எரிச்சலுடன் கத்தினான் இக்பால்

'மன்னிச்சிடுங்கய்யா...' ஒருமுறை ரத்தினத்தை மேலும் கீழும் பார்த்தவன்' கடந்த மூணு வருஷத்து ஃபைல் எல்லாத்தையும் எடுத்துகிட்டு வாய்யா...'

'ஏட்டு எங்கய்யா...'

'கபடி போட்டி பார்த்துக்கிட்டு இருப்பார்யா..' கந்தசாமி பதிலளித்தான்.

'கான்ஸ்டபிள் முருகனை அனுப்பி கூப்பிட்டு வரச்சொல்லுயா' என்று கத்திவிட்டு மனதிற்குள் தாறுமாறாக ஓடும் எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்தான்.  சற்று அமைதியாக இருந்த இக்பால் தனது மொபைலை எடுத்து கந்தசாமி எடுத்த புகைப்படத்தை தேட ஆரம்பித்தான்.

'கான்ஸ்டபிள்.... எங்கய்யா.. ஒரு போட்டோவையும் காணோம், எடுத்தியா...இல்லியா' என்றவாறு மொபைலில் தேடித் தேடிப் பார்த்தான். கந்தசாமியும் இக்பால் பின்னால் நின்று குனிந்தவனாய் பார்த்தான்.  இக்பால் பின்னால் நிமிர்ந்துப் பார்க்க கந்தசாமியின் முகத்தில் மோதிக் கொண்டான்.  இக்பாலின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது... 'ஏன்யா.. உனக்கிட்ட மொபைலை கொடுத்தனே என்ன பண்ணின'

'அய்யா... ' தலையை சொரிந்தான்... 'நான் என்னென்னமோ பட்டனல்லம் அமுக்கிப் பார்த்தேன்... ஒன்னும் சரியா வரல'  தலையை சொரிந்துக் கொண்டான் கந்தசாமி.

'அய்யோ... அய்யோ' தலையில் அடித்துக் கொண்டான். 'என்ன கருமம்டா இது... ஏன்யா... எப்படியா... அங்கங்க கிராமங்களெல்லாம் சிட்டிய தூக்கி சாப்பிடற அளவுக்கு முன்னேறிக்கிட்டு இருக்கு.. ஏன்யா நீங்கள்ளாம் ஏதாவது சத்தியம் பண்ணிட்டு வந்திருக்கீங்களா, அநியாயத்துக்கு இப்படி கிராமத்தனத்தோட இருக்கீங்களே..' கந்தசாமி நெளிந்து வளைந்து நகர்ந்தான்.

இக்பால் யோசிக்க ஆரம்பித்தான். கம்பியூர் பார்க்கறதுக்குதான் அமைதியா தெரியுது... இதுல என்னமோ ஆழமான விஷயங்கள் இருக்கு.  வேலைப் பாக்குற போலீஸ் காரர்களெல்லாம் நடிக்கிறானுங்க, இவனுங்க எவனும் கிறுக்கணுங்க கிடையாது. ஒன்று என்னன்னு கண்டுபிடிச்சு எதையாவது செய்யனும், இல்லன்னா.. மாமனாரோட செல்வாக்க வச்சு வேற எங்காவது மாற்றல் வாங்கிட்டு போயிடனும். முதல்ல ஃபைல பார்ப்போம், எதாவது கிடைக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கவும்... திபுதிபுவென்று நான்கைந்து பேர் போலீஸ் ஸ்டேஷன் வாயிலில் 'அய்யய்யோ... அய்யா... இன்ஸ்பெக்டர் சார்..என்று கத்திக் கொண்டு வரவும் சரியாக இருந்தது.

(தொடரும்)

No comments:

Post a Comment