இரண்டு நடுத்தர வயது ஆண்கள், ஒரு பெண் மற்றும் மூன்று பிள்ளைகளுமாக திடுதிடுவென்று போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்தனர். தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு 'அய்யய்யோ... அய்யா... இன்ஸ்பெக்டர் சார்...' என்ற கூச்சலிட்ட கூட்டத்தை பார்த்த இக்பாலுவிற்கு, கபடி போட்டியில் ஏதேனும் தகராறோ என்று பயப்பட ஆரம்பித்தான்.
'ஏய் நிறுத்து... நிறுத்துடா... ஏன்டா பொண்டாட்டி செத்துபோன மாதிரி கத்துற' அதட்டினான் கந்தசாமி.
'ஏன்யா... அப்படி சொல்றீங்க... கருகங்கல்லாட்டம் பக்கத்துல நிக்குறன்ல' அழுவதை நிறுத்திவிட்டு கந்தசாமியைப் பார்த்துக் கேட்டாள்.
'அது சரி... சாவுன்னவுடன சத்தமெல்லாம் நின்னு போச்சு' சற்று விலகியிருந்த முந்தானையில் அவளின் மார்பகத்தைப் தேடியபடி பதில் சொன்னான் கந்தசாமி.
'அய்யா... நீங்கதான் காப்பத்தனும்' இக்பாலைப் பார்த்து வந்த கூட்டம் அத்தனையும் கையெடுத்து கும்பிட்டார்கள்.
ரைட்டர் ரத்தினம் வேகமாக வந்தார். வருமானம் வந்துவிட்டது என்று அவரின் மனம் லேசாக விசிலடிக்க ஆரம்பித்தது. 'என்னய்யா ... என்ன விஷயம்' ரத்தினம் கேட்டார்.
'அய்யா... என் மாட்டை மொட்டையன் பிடிச்சுக்கிட்டு போயிட்டான்' இக்பால் ரைட்டரையும், கந்தசாமியையும் பார்த்தான். இதுக்கா நான் எம். எஸ். சி படித்துவிட்டு இன்ஸ்பெக்டர் ஆனேன் என்று அவனின் முகம் கேட்காமல் கேட்டது.
'இதுக்கா... இப்படி கொலை விழுந்தமாதிரி கூச்சல் போட்ட' ரைட்டர் கேட்டு வைத்தார்.
'ஏதோ மனுஷன பிடிச்சுக்கிட்டு போனமாதிரி இப்படி கத்துற' கந்தசாமி.
'அய்யா... மனுஷன் போன கவலைப் பட்டிருக்க மாட்டேன்...'
'அடப்பாவி...' ரத்தினம் ஆச்சர்யமானர்.
'ஆமாங்கய்யா... மனுஷன விக்க முடியாதுய்யா... மாட்ட வித்த காசு கிடைக்கும். மொட்டையன் என் மாட்ட விக்கறதுக்காக பிடிச்சுக்கிட்டு போறான்யா..' அழுது வைத்தான் வந்தவன். ரொம்ப விவரமாத்தான் இருக்கிறானுங்க என்று நினைத்தபடி நாற்காலியின் பின்னால் சாய்ந்தான் இக்பால்.
'அய்யா... இரண்டு போலீஸை அனுப்பி.. மொட்டையனுக்கிட்டெயிருந்து... என் மாட்டை காப்பத்துங்க..' மிகவும் குழைந்தபடி கேட்டான் அழுக்கு வேட்டியுடன் நின்ற கிரமத்துவாசி. நல்ல போலீஸ் வேலைட இது... மாட்டை பிடிக்கற்துக்கல்லாம் போலீஸ் வேணும்... இத தீர்த்து வைக்க ஒரு இன்ஸ்பெக்டர். இரு கைகளையும் பின்னி தாடையில் வைத்தபடி நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்ஸ்பெக்டரின் முகத்தில் தெரிந்த எரிச்சலை புரிந்து கொண்ட ரத்தினம்
'அய்யா... இத நான் பார்த்துக்கறேன்' என்று வந்த கூட்டத்தை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். இன்னைக்கு ஒரு இருநூறு ரூபாய் தேரிடுச்சி என்று நினைத்தபடி ரத்தினம் சற்று குஷியாக நகர, பங்கு போடாம விடமாட்டேன் என்று கந்தசாமியும் பின்னால் போனான்.
இக்பாலுக்கு மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. தவறான இடத்தில் வந்துவிட்டோம் என்ற எண்ணம் மனதின் சுவர்களில் முட்டி மோதி வெளியில் போக வழியில்லாமல் அதற்குள்ளேயெ மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மனைவி அருகில் இல்லாதது ஒரு பெரும் வெறுமையாகத் தெரிந்தது. குழம்பியிருக்கும் தனது மனதை யாரிடம் பேசுவது என்று புரியாமல் மேலும் மேலும் குழம்பிக் கொண்டிருந்தான். கம்பியூரை பிடிக்கவில்லை என்பது சல்மாவிற்கு தெரிந்தாலும், அவளிடம் அதிகம் புலம்பினால் அவள் வராமல் போய்விடுவாளோ என்ற பயம் வேறு. இங்கிருக்கும் வசதிகள் போதாது என்பது ஒருபுறம் இருந்தாலும், வீட்டிலெயே அடைந்து கிடக்கும் வாழ்க்கை நிச்சயமாக அவளுக்கு பிடிக்காது. மிஞ்சி மிஞ்சி போனால் தியெட்டரில் படம் பார்க்கலாம், வேறு ஒரு மண்ணங்கட்டியும் இல்லை.. எழுந்து ஸ்டேசஷன் வாசலில் வந்து நின்றான். வெற்றிலையை வாயில் குதப்பிக் கொண்டிருந்த சென்ட்ரி போலீஸ் கருப்புசாமி வாசலில் வந்து நிற்கும் இன்ஸ்பெக்டரை கவனிக்காமல் 'ஹகர்ர்ர்... புச்ச்ச்ச' என்று ஸ்டேஷன் சுவற்றில் துப்பிவைத்தான்.
'அறிவிருக்காய உனக்கு' எரிச்சலுடன் நின்றுகொண்டிருந்த இக்பால் போட்ட சத்தத்தில் கையில் இருந்த 15 கிலோ பழங்காலத் துப்பாக்கியை பொத்தென்று தரையில் போட்டுவிட்டு சல்யூட் அடித்தான் கான்ஸ்டபில் கருப்புசாமி. 'அய்யா... நான் கவனிக்கல'.
'கவனிச்சிருந்தா... என் தலையில துப்புவியா..' கம்பியூரின் மேல் இருந்த கோபத்தை கருப்புசாமியுடன் கத்தினான். 'போலீசுனா..பொது மக்களுக்கு உதாரணமா இருக்கனும், முதல்ல உங்கள திருத்தனும்...போய் பக்கட்டுல தண்ணி எடுத்துட்டு வந்து, சுவத்துல துப்பன கரைய கழுவு'
'இதோ செய்யறேன்யா' என்று கருப்புசாமி நகர...'இந்த துப்பாக்கிய யாரு உங்க தாத்தாவ எடுத்துட்டு போவாரு' இக்பால் போட்ட சத்தத்தில்... கையில் இரண்டு டீயுடன் அப்போதுதான் உள்ளே நுழைந்த அழுக்கு வேட்டி, தயங்கி நின்றான். 'யாருக்குய்ய இது' அழுக்கு வேட்டியைப் பார்த்து அதட்டினான்.
ரைட்டருக்கும் கந்தசாமிக்கும் வாங்கி வந்த டீயை கையில் பிடித்தபடி உள்ளே போவதா வேண்டாமா.. என்று யோசித்துக் கொண்டிருந்த அழுக்கு வேட்டியை முறைத்துப் பார்த்த இக்பால்...'ஏன் நிக்குற...' என்று கத்தவும், திடுதிடுவென வேகமாக உள்ளே ஓடினான் அழுக்கு வேட்டி.
வானம் இரவை வரவேற்க தயாரானது. சாலையில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஜீப்பை எடுத்துக் கொண்டு சும்மாவது ஊரை சுத்தலாம் என்றால் இருப்பதே இரண்டு கடைத்தெரு, அதைவிட ஊரே நம்மை கவனிக்கும். நகரமாக இருந்தால் ஒரு போலீஸ் அதிகாரியின் மேல் இவ்வளவு கவனம் வராது. அவரவர்க்கு அவரவர் வேலை, ஆனால் கம்பியூர் மற்று சுற்றுவட்டார மக்களுக்கு இன்ஸ்பெக்டர் ஒரு முக்கியஸ்தன். எங்கு போனாலும், என்ன செய்தாலும் பரபரப்பான செய்தி. அதற்காகவே பெரும்பாலும் ஸ்டேஷன் விட்டால் வீடு என்று தேவையில்லாமல் எங்கும் வெளியில் செல்வதில்லை. நல்ல நண்பர்கள் என்பது போலீஸ் அதிகாரிகளுக்கு எப்போதும் ஒரு எட்டாத விஷயம். எங்கு சென்றாலும் அதிக பட்சம் மூன்று வருட வாழ்க்கை. அதிலும் போலீஸ் உத்தியோகத்தில் நண்பர்களை தேர்ந்தெடுப்பதென்பது அத்தனை சுலபமல்ல. பேசாமல் திரும்பி தன் அறைக்குச் சென்றான் இக்பால்.
*********************
'கந்தசாமி இன்ஸ்பெக்டர கவனிச்சியா' ரத்தினம்
'வந்ததுலேருந்து அவர நான்தான் கவனிச்சுக்கிறேன். காலையில டிபன் வாங்குறதிலேருந்து ராத்திரிக்கு சாப்பாடு கொடுக்குறவரை... எல்லாத்தையும் நான் செய்யுறேன்'. கந்தசாமி பதிலளித்தான்.
ரத்தினம் எழுதுவதை நிறுத்திவிட்டு கந்தசாமியின் முகத்தைப் பார்த்தார். பார்வையின் அர்த்தம் புரிந்த கந்தசாமி தொடர்ந்தான்.
'பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன் ரைட்டர் சார், ஆளு அட்டகாசமாத்தான் இருக்கார்'
'அத கேட்கலயா..ஏன்யா எப்பப் பார்த்தாலும் கோபமாவே இருக்கார்' ரத்தினம்
'சின்ன வயசு, பொண்டாட்டி வேற ஊருல.. ரெண்டு வாரத்துக்கு ஒருமுறைதான் சொந்த ஊருக்கு போயிட்டு வர்ரார். முன்னூறு கிலோமீட்டர் பிராயணம்...அனுபவிக்க வேண்டிய வயசுல இப்படி கிராமத்துல தூக்கி போட்டனுங்க' கந்தசாமி
'பனிஷ்மெண்ட் ட்ரேன்ஸ்பர்னு நினைக்கிறேன்' மாட்டுடைய கலரை எழுதிக் கொண்டே பேசினார் ரத்தினம்.
'எனக்கென்னமோ அப்படி தெரியல் ரைட்டர் சார்..புரமோஷன்றதுனால ஒத்துக்கிட்டார் போலத் தெரியுது...தெரியாத்தனமா இங்க வந்து மாட்டிக்கிட்டார்னு நினைக்கிறேன்'
'இருக்கும்.. இருக்கும்...' ரைட்டர் நிமிர்ந்துப் பார்க்க, அழுக்கு வேட்டி இருவரின் பேச்சையும் சுவாரசியமாக ரசித்துக் கொண்டிருந்தான்.
'ஏய்... என்ன பாக்குற, எவ்வளவு வச்சுருக்க'... அறை வாசலைப் பார்த்தபடி கேட்டார் ரத்தினம். எழவு, கந்தசாமி வேற பக்கத்துல...
'அய்யா... மாடு...' இழுத்தான் அழுக்கு வேட்டி
'ஆமா.. மாடு என்ன விலைக்கு போவும்' கந்தசாமி
'மூவாயிரம் வரைக்கும் போவும்' அழுக்கு வேட்டி ஆர்வமாக சொன்னான்.
'சரி முன்னூறு ரெடி பண்ணு' ரத்தினம் சற்று சத்தத்தைக் குறைத்தே பேசினார்.
திருதிருவென விழித்தான் அழுக்கு வேட்டி. 'ஏன்யா.. மாட்டையே முழுங்குனதுமாறி முழிக்கிற' ரத்தினம்.
'இப்போ அவ்வளவு இல்லை... மாடு கிடைச்சவுடன...'
ஏற இறங்கப் பார்க்கும் ரைட்டரையும் கந்தசாமியையும் பார்த்த அழுக்கு வேட்டி...'ஏய்... பொன்னாத்தா...' என்று அழைக்க, அவன் மனைவி உள்ளே வந்தாள். அவளின் காதில் ரகசியமாக 'அந்தப் பணத்தை எடு'... என்று சொல்ல, அவள் ஜாக்கெட்டினுள் கைவிட்டு பணத்தை எடுத்தாள். கந்தசாமியின் கண்கள் அவளின் முந்தானையில் முட்டி நின்றது.
'செருப்பு பிஞ்சு போயிடும்'... திடீரென வநத சத்தம் கந்தசாமியின் கண்களை வேகமாக அகற்ற வைத்தது. சத்தத்திற்கு சொந்தக்காரர் ஏட்டு ஏகாம்பரம். யாரோ ஒருவனை துண்டால் பின்னங்கைகளில் கட்டி இழுத்துக் கொண்டு உள்ளே வந்தார்.
வேக வேகமாக பொன்னாத்தாவும் அழுக்கு வேட்டியும் பணத்தை கை மாற்றிக் கொள்ள 'போய் வெளிய நில்லு... நான் வர்ரேன்' என்று அவர்களை வெளியெற்றினார் ரத்தினம். கையூட்டு வாங்குவது யாருக்கும் தெரியக் கூடாது என்றல்ல, எத்தனை பேருக்குத்தான் பங்கு வைப்பது என்ற சுயநலத்தில்தான்.
பின்னங்கைகளை கட்டி இழுத்து வந்த இளைஞனின் முதுகில் ஓங்கி அறைந்தார் ஏட்டு... 'அய்யோ அடிக்காதிங்கய்யா...' என்று கத்தியபடி திடுதிடுவென உள்ளே ஓடினான். ஏட்டு ஏகாம்பரம் நேராக இன்ஸ்பெக்டரின் அறைக்குள் நுழைந்து விபரத்தைச் சொல்ல, இக்பால் எழுந்து வெளியே வந்தான்.
'எந்த ஊர்ட நீ' இன்ஸ்பெக்டர் என்ற சுரத்தில்லாமல் கேட்டான் இக்பால்
'அய்யா... நான் கொலையூர்’ என்றான் இளைஞன்
'உங்க ஊர்ல எத்தனை கொலை நடக்கும்' இக்பால்
ஒன்றும் புரியாமல் பார்த்தான் இளைஞன். ஓங்கி ஒரு அறைவிட்டார் ஏட்டு..'அய்யா கேட்கறாங்கல்ல'. சத்தம் போடுவதற்கு பயந்தவனாய் கன்னத்தை பிடித்துக் கொண்டு நின்றான்.
'பேரைப்பாரு... கொலையூர்..வீரப் பரம்பரைங்க...'ஜட்டியோட லாக்கப்புல தூக்கிப்போடு' என்று சொல்லிவிட்டு 'எங்கய்யா ரைட்டர்' என்று சத்தமிட்டான்.
'போடா...உள்ள' என்று முதுகில் ஒன்று வைத்து உள்ளே இழுத்துச் சென்றான் கான்ஸ்டபிள் கருப்புசாமி.
ரத்தினம் வந்து நின்றார். 'ரத்தினம், இன்னும் அரை மணிக்குள்ள கடந்த மூணு வருஷத்து ஏசிஆர் ஃபைலு, டயரி, எஃப்.ஐ.ஆர் காப்பி எல்லாம் என் டேபிளுக்கு வரணும். ஏகாம்பரம்... உள்ள வாய்ய..' என்று அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான் இக்பால்.
சல்யூட் வைத்த ரத்தினம், ஒன்றும் புரியாமல் ரெக்கார்டு அறையை நோக்கி நடந்தார்.
************************
வீட்டு முற்றத்தில் பாயையும், தலகானினையும் போட்டு வானத்தைப் பார்த்தபடி படுத்துக் கொண்டிருந்தான் இக்பால். ஓட்டு வீட்டின் முற்றமும், குளிர்ச்சியாய் காட்சி தரும் நிலாவும் இக்பாலுவிற்கு சுவைக்கவில்லை. வெறுமனே வானத்தைப் பார்த்தபடி மல்லாக்க கிடந்தான். கூடத்தில் எரியும் மஞ்சள் மின்விளக்குக்கூட சுரத்தில்லாமல் எரிந்துக் கொண்டிருந்தது. வீட்டில் அங்கங்கே இரவுப் பூச்சிகள் கண்ட கண்ட சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தன. வயல் வெளிகளில் தவளைகள் கோரசாக சேர்ந்து அவைகளுக்கே உரிய பாடல்களை அலுப்பில்லாமல் பாடிக் கொண்டிருந்தன.
வானத்தின் இருளைவிட மனதின் இருள் மூட்டம் சற்று பாரமாகவே இருந்தது. கண்களுக்கு எல்லாமே மங்கலாகவே தெரிந்தது. மனதை இருள் ஆட்கொள்ளும்போது சுற்றுப்புறமும் இருளாகவே மாறிவிடுகிறது. என்னதான் வெளிச்சம் தெரிந்தாலும், தன்னைச்சுற்றி கண்களுக்குத் தெரியாத ஒரு திரை முற்றுகையிட்டது போல் மனம் உடல் இரண்டும் செயலிழந்து முற்றுகையிடப்பட்ட திரைக்குள் இல்லாத ஓர் புகலிடத்தை தேடியது.
சில நேரங்களில் சில விஷயங்கள் புரிவதே இல்லை. புரிய முயற்சித்தாலும் தெளிவு கிடைப்பதில்லை. தெளிவைத் தேடி ஓடும்போதெல்லாம் கூடவே குழப்பமும் விடமாட்டேன் என்று ஓடிவருகின்றது. சில நேரங்களில் குழப்பம் தெளிவைவிட வேகமாகவே நம்மை ஓட்டிக் கொள்கின்றது. தான் ஏன் இங்கே மாற்றம் செய்யப்பட்டோம் என்பது முற்றிலுமாகவே புரியவில்லை. இதுவரை சர்வீசில் சர்ச்சைக்கிடமாக எந்த அரசியல்வாதியையும் அடித்து லாக்கப்பில் வைத்ததில்லை. சட்டம் ஒழுங்கு சம்பந்தபட்ட இலாக்காவில் பணியாற்றியதால் அவ்வப்போது ரவுடிகளுக்கு பரிந்துரை செய்து அரசியல் மட்டும் அதிகாரிகளின் தொல்லை வந்ததுண்டு, ஆனால் அதற்காக சினிமாவில் வரும் போலீஸ் போல் வசனமெல்லாம் பேசி நியாயத்தைப் பாதுகாக்கும் உத்தமனாக நடந்துக் கொண்டதில்லை. முடிந்தவரை சாதுரியமாகப் பேசி தனக்கு ஏதும் தொந்தரவு வராமல் பணியாற்றி வந்தவன் இதை ஒரு பனிஷ்மெண்ட் மாற்றமாக அவனால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
ஓரளவு வசதியாக வாழ்ந்தவன், தாய்மாமன் அப்துல் காதரின் மகளை மனைவியாக மணந்து கொண்டான். அப்துல் காதர் தற்போது திருவண்ணமலையில் உதவி கலெக்டராக பணியாற்றி வருகிறார். சிறுவயதிலிருந்தே போலீசாக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தவன், லஞ்சம் கிஞ்சம் எதுவும் கொடுக்காமல் சப் இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்று ஆறு வருடம் முடிந்துவிட்டது. தனது பணியில் இதுநாள்வரை யாரிடமும் எதற்காகவும் லஞ்சம், பரிசுகள் என்று எதுவும் பெற்றுக் கொண்டதில்லை. தனது பணியின் தகுதிக்கு மீறி யாருக்கும் எதற்காகவும் அநாவசியமாக உதவி செய்கிறேன் என்று எந்த இழுக்கையும் ஏற்படுத்திக் கொண்டதில்லை. பிறர் பயப்படும் அளவிற்கு அடாவடி செய்யயும் போலீசும் இல்லை அதே நேரத்தில் தன்னை தாழ்த்திக் கொண்டதும் இல்லை.
குடும்பத்தில் பெரும்பாலும் எல்லோரும் அரசு வேலையில் அதிலும் ஓரளவு உயர்ந்த பதவியில் இருந்ததால், அரசாங்கத்தின் நெளிவு சுளிவுகளெல்லாம் தெரிந்து வைத்திருந்தான். இங்கு மாற்றலாகி வரும்போது வழக்கம்போல் தனது மேலதிகாரியை சந்தித்து அவர்களிடமிருந்து அறிவுரைகளையும் அல்லது சில ரகசிய விஷயங்களையும் புரிந்துக் கொண்டு பணியேற்க வருவது வழக்கமானதுதான் என்றாலும், இப்படி ஒரு காட்டுமிராண்டி இடத்திற்கு வருவோம் என்று கனவிலும் நினைத்ததில்லை. பதவி உயர்வு கிடைத்த மனக் கிளர்ச்சியில் பதவியேற்க வரும் ஊரைப் பற்றி சரியாக விசாரிக்காமலும் தன்னை தயார் செய்து கொள்ளாமலும் வந்த முட்டாள்தனத்தை நினைத்து தனக்குள்ளே அவமானப்பட்டுக் கொண்டான். இந்த முட்டாள்தனத்தை சல்மாவிடமும் சொல்ல முடியாது. திருமணம் முடிந்து நான்கு வருடம்தான் ஆகிறது, மூன்று வயதில் ஒரு மகன். மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டிய வயதில் இப்படி முன்னூறு கிலோ மீட்டர் தொலைவில் குத்தூருக்கும், கத்தியூருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டதை நினைத்து மனம் புலம்ப்பத் தொடங்கிவிட்டது.
மொபைல் சத்தம் சிந்தனையை கலைக்க அருகில் கிடந்த நோக்கியாவை நோக்கினான். சல்மாதான் அடிக்கிறாள். இரவு தூங்குவதற்கு முன்னால் ஒரு அரை மணி நேரம் அவளுடன் பேசினால்தான் ஓரளவாவது நிம்மதியாக தூங்க முடிகிறது.
எதை எதையோ பேசினான். கம்பியூரின் நடுவில் ஓடும் ஆற்று நீர் முதல், சாலையின் இரு மருங்கிலும் இருக்கும் கடலைக்காடு, கரும்புத் தோட்டம், இந்த காலத்திலும் ஜாக்கெட் போடாமல் சுற்றிவரும் கிராமத்துப் பெண்கள். புடவை முந்தானையில் உடலை மறைத்து வாழும் கிராமத்து பேரிளம் பெண்கள் தனது பேரிளம் கணவர்களுக்கு பழைய சோறு சுமந்து செல்லும் பாசம், அது இது என்று தனது வேலையத் தவிர்த்து எல்லாவற்றையும் பேசி வைத்தான். அவளும் எப்போது அழைத்து போகக் போகிறீர்கள் என்று வார்த்தைக்கு வார்த்தை கேட்டு வைத்தாலும், இன்னும் ஒரு மாதம் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். கணவனின் உற்சாகம் குறைந்திருப்பதை நன்றாக உணர்ந்தாலும், கம்பியூரின் நிலைமை சரியாகப் புரியாததால் அவளும் அவன் சொல்வதை ஏற்றுக் கொண்டு காத்திருந்தாள்.
கதவு தட்டும் சத்தம் கேட்க, கைபேசியை அடக்கிவிட்டு கதவை நெருங்கினான். யார் என்று கேட்பதற்குள், 'அய்யா.. நான் கான்ஸ்டபிள் செல்வம்' என்ற குரல் வந்தது. கதவைத் திறந்து உள்ளே வரச் சொன்னான்.
கான்ஸ்டபிள் செல்வம் உளவுத்துறை சம்பந்தப்பட்ட வேலைகளை கவனிப்பதால் அவனுக்கு ஊர் முழுவதும் உலாவுவதுதான் வேலை.. இளநிலை பட்டதாரி. பெரும்பாலும் சீருடை அணிவதில்லை. ஊரைச்சுற்றி செய்திகளை சேகரித்து இன்ஸ்பெக்டரிடம் அறிக்கை அளிப்பதுதான் வேலை. சில நேரங்களில் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை வாய் மொழியாக தெரிவிப்பது வழக்கம். அதை பெரும்பாலும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்துக் கொள்வதை இக்பால் விரும்புவதில்லை.
அவன் இப்போது கொண்டுவந்த அதிகாரப்பூர்வமற்ற செய்தி இக்பாலை மேலும் குழப்பியது. அதிகாரப்பூர்வமற்ற செய்திகளின் முக்கியத்துவம் போலீஸ்காரர்களுக்கு மட்டுமே புரியும்.
'அய்யா.. இப்போதைக்கு ஒன்னும் பெரிசா எந்த நடவடிக்கையும் தேவையில்லை' என்றான் செல்வம்.
அவன் சொல்வதை காதில் வாங்கிய இக்பால் கொல்லைப் புறத்தில் காற்றில் உரசிக் கொண்டிருக்கும் தென்னங்கீற்றின் சத்ததை கேட்டும் பார்த்தும் கொண்டிருந்தான். வெளிச்சத்திற்கு இரண்டே கண்கள், ஆனால் இருளுக்கு ஆயிரம் கண்கள். இருளில் இயற்கை வேண்டுமானால் இளைப்பாரலாம். இருளில் மனிதர்கள் உறங்கலாம். ஆனால், மனிதர்களை ஈர்க்கும் தீங்குகள் இருளில்தான் பிரகாசிக்கின்றன.
'சரி செல்வம்... நீ போகலாம்' என்று அவனை அனுப்பிவிட்டு, கபடிப் போட்டி முடிவுற்றவுடன் ஒரு வாரத்திற்கு ஊருக்கு சென்றுவந்தால்தான் சரியான முடிவெடுக்க முடியும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். கம்பியூரின் நலத்தைப் பற்றியெல்லாம் இக்பாலுவிற்கு பெரிதாக எந்த அக்கறையும் இல்லை. அவனது சிந்தனை முழுவதும் தன்னைப் பற்றி மட்டுமே சுற்றி வந்தது. தூரத்தில் நாய்களின் ஊலைக்குரல் மனிதர்களுக்குத் தெரியாத பல நடமாட்டங்களை தனக்குத் தெரிந்த மொழியில் கத்தி அறிவித்துக் கொண்டிருந்தன.
(தொடரும்)