Sunday, 17 March 2013

எங்க வீட்டு போலீஸ் – 4


‘சார், டி எஸ் பி ஆபீசிலருந்து மெசேஜ் வந்திருக்கு சார்’ ரத்தினம் சொல்லிக்கொண்டே வந்து நின்றார்.

‘என்ன மெசேஜ்’ இக்பால்

‘கூடுதல் போலீஸ் படை அனுப்ப முடியாதாம்’ ரத்தினம் சொல்ல இக்பாலின் முகம் சுருங்கியது. ‘என்ன காரணாமாம்’ இக்பால் சற்று எரிச்சலுடன் கேட்டான்.

‘திடீருன்னு எதுவும் ஏற்பாடு செய்ய முடியாது, எஸ்.பி. டூருல இருக்காருன்னு சொல்றாங்க.

‘என்னய்யா... இந்த சால்சாப்பு, அவசரத்துக்குத்தான போலீஸ்’ எழுந்து நின்றான் இக்பால்.

‘சார்.. நான் ஒன்னு சொல்லட்டுமா’ ரத்தினம் இழுத்தார். இக்பால் அவரை ஏரிட்டுப் பார்த்தான்.

‘எப்பவும் இந்த ஊருல எந்த திருவிழா நடந்தாலும் ஒன்னு சப் இன்ஸ்பெக்டர் லீவுல போயிடுவார் இல்லன்னா, நமக்கென்னன்னு தண்ணியடிச்சுட்டு எங்காவது யாருக்கும் தெரியாம தூங்க போயிடுவார்...’ இழுத்தார் ரத்தினம்.

‘இப்ப என்ன, என்ன தண்ணியடிச்சுட்டு தூங்க சொல்றியா’

‘சார்... பழக்கம் இல்லன்னா.. லீவு போட்டிடுங்க’

‘போன வருஷம் இரண்டு பேர் செத்திருக்காணுங்க, இந்த வருஷமும் நாலு பேரும் சாவுணுமா?’ இக்பால் சொல்லி முடிக்குமுன் ஏகாம்பரம் வந்து நின்றார்.

‘சார்.. நம்பளால சமாளிக்கமுடியலன்னா ஒதுங்கிக்கிறதுதான் நல்லது’ ஏகாம்பரமும் ரத்தினத்துடன் சேர்ந்துக் கொண்டார்.

‘அப்புறம் எதுக்குய்யா நம்பள்லாம் போலீஸ், ஒரு போலீஸ் ஸ்டேஷன்’

‘சார் முன்னாலயே ரிக்கஸ்ட் அனுப்பியிருக்கணும்’ ரத்தினம் கேட்டு வைக்க, இக்பால் அமைதியானான். நம்பதான் தப்பு பண்ணிட்டோம் என்ற உணர்வு தோன்றியது.  பிடிக்காத காரணத்துணால கவனமில்லாம இருந்துவிட்டோம் என்று நினைத்தவன், சரி என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

‘ரூம் கதவ சாத்திட்டு வந்து ரெண்டுபேரும் உட்காருங்க’ என்று சொல்ல, ஏகாம்பரமும் ரத்தினமும் கேள்விக்குரியுடன் வந்து அமர்ந்தனர்.  இக்பால் சொல்ல சொல்ல இருவர் முகத்திலும் ஈயாடவில்லை.  ‘ஏன் இந்த மனுஷன் இப்படி கவலைப்பட்டு திட்டம் போடறான். எவன் அடிச்சுக்கிட்டு செத்தா நமக்கென்ன, செத்துப்போன ரிப்போர்ட் எழுதி கேசை முடிச்சுட்டு போக வேண்டியதுதான’ என்று இருவருமே ஒரு சேர நினைத்தனர்.  தான் சொல்வதை வெறும் சுரத்தை இல்லாமல் முகம் வெளிரிப்போய் கேட்டுக் கொண்டிருக்கும் இருவரையும் பார்த்தபடி பேசியவனின் மனதில், வேறு வழியில்லை, இருக்கின்ற ஆட்களை வைத்து முடிந்தவரை பிரச்சனை இல்லாமல் சமாளிக்க வேண்டும் என்று தனது திட்டத்தை சொல்லி முடித்தான்.

இளம் வயசு என்று நினைத்தபடி இரண்டு போலீஸ் முதியவர்களும் எழுந்து நின்று சல்யூட் அடித்தனர்.

மதிய உணவை வீட்டிற்கு வரச்சொல்லி முடித்துவிட்டு போலீஸ் உடைக்கு மாறினான்.  பீரோவில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அதன் உள்ளே உள்ள ரவைகளை சரிபார்த்து இடுப்பு பட்டையில் செருகிக் கொண்டபடி வெளியே வந்தான்.

சந்தானம் ஜீப்பை நகர்த்த ‘இன்னும் ரெண்டு மணி நேரத்துல சுத்தி இருக்குற எட்டு கிராமத்தையும் ஒரு ரவுண்டு வந்துடனும்’ என்று ஆணையிட சந்தானம் தலையாட்ட பின்னால் அமர்ந்திருந்த நான்கு போலீஸ் கான்ஸ்டபிள்களும் ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தனர்.  போட்டி நடக்கும் இடத்திற்கு நான்கு கான்ஸ்டபிள்களை குண்டில்லாத துப்பாக்கிகளுடன் அனுப்பி வைத்து ஊரில் கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தி பொதுமக்களை பீதி கொள்ளும்படி செய்தான்.

‘இது என்ன ஊர்’ ஜீப்பில் பயணித்தபடி கேட்டான். கரடு முரடாக கப்பிக் கற்களுடன் இருந்தது பாதை.

‘சார் இது கத்தியூர்’ சந்தானம் பதிலளித்தான்.

‘இந்த ஊர்ல எவன் பெரிய ரவுடி’ இக்பால் கேட்டான்.

‘காளிதாசன் சார்’ சந்தானம்.

‘ரவுடிதான் ஊர் தலைவனா’ இக்பால்

‘ஆமாம்’ சந்தானம்

‘அவனுக்கு அடுத்தது யார்’ இக்பால்

‘காளிதாசனோட மச்சினன் ராமலிங்கம் சார்’ இக்பால்

வீட்டுவாசலில் போலீஸ் ஜீப் வந்து நிற்பதைப் பார்த்த ராமலிங்கத்தின் மனைவி பதறியடித்தபடி வந்து நின்றாள்.

இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் தலை முதல் கால்வரை தடபுடவென ஆடிக்கொண்டு நின்றாள்.  இது நாள்வரை அவ்வப்போது ஏதாவது ஒன்றிரண்டு போலீஸ்காரர்கள் மப்டியில் வந்து போவதுதான் வழக்கம், இன்றைக்கு என்ன நேர்ந்தது என்று புரியாமல் வேர்த்து விறுவிறுத்து நின்றாள்.

‘ஒன் புருஷன் எங்க’ ஜீப்பினுள் அமர்ந்தபடியே கேட்டான்.

‘வயலுக்கு தண்ணி பாச்ச போயிருக்கார்’ மெண்டு விழுங்கி சொன்னாள்.

‘தண்ணி பாச்சவ, இல்ல தண்ணி அடிக்கவா?’ அதட்டலாக கேட்டான்.

‘இல்லங்கய்யா..’

‘ஒன் புருஷன உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லு, இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க இருக்கனும், வரல... ஒரு வாரத்துக்கு சப் ஜெயில்லதான் கஞ்சி குடிக்கனும்னு சொல்லு, எடுய்ய ஜீப்ப’ தெருவெல்லாம் கேட்கும்படி மிரட்டிவிட்டு நகர்ந்தான்.

கிட்டதட்ட எட்டு ஊரையும் ஒரு சுற்று முடித்துவிட்டு எல்லா கிரமங்களிலும் செயற்கையான பீதியை உருவாக்கிவிட்டான் இக்பால்.  கபடிப் போட்டியின் இறுதி ஆட்டத்தைவிட இக்பாலின் இந்த செயல்தான் எல்லா மக்களிடமும் பேச்சாக இருந்தது.  அவரவர்களுக்கு தெரிந்த கதையை கண்ணும் காதும் வைத்து ஒலி பரப்பு செய்துகொண்டிருந்தார்கள். இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றிருந்த கொலையூர் மற்றும் ஈட்டியூர் அணி ஊர் மக்கள் எல்லோரும் மீசையை முறுக்கிக் கொண்டு இன்றைக்கு ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் என்று வீர முழக்கம் செய்தவர்கள் மத்தியில் எதற்காக இன்ஸ்பெக்டர் இப்படி ஊர் ஊராக சுற்றி இரண்டாம் மட்ட தலைவர்கள் எல்லோரையும் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அணி வகுக்க வைத்துவிட்டான் என்று புரியாமல் இருந்தனர்.

இக்பால் சுற்று முடித்து வரவும், காவல் நிலையத்தின் வெளியில் நல்ல கூட்டமும் கூடிவிட்டது.  பக்கத்தில் இருந்த முருகன் டீக்கடைக்கு நல்ல வருமானம்.  டீயும் வடையும் விற்று மாளவில்லை.  புண்ணியவான், இப்படி வாரத்துக்கு ஒரு தடவ, ரவுண்ட் வந்தா நமக்கும் நல்ல வியாபாரம் ஆகும், ஓசியில டீக்குடிச்சுக்குட்டு இருக்குற போலீஸ் தொப்பைங்க மத்தியில வருமானம் இல்லாம என்னவோ விதியென்று இருந்த முருகனுக்கு இன்றைக்கு நல்ல மகிழ்ச்சி.

ஜீப்பைவிட்டு இறங்கிய இக்பால் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தன்.  ஊருக்கு ரெண்டு பயலுங்க வந்தா பத்தாதுன்னு, ஊரே கூடி வந்திருக்கு என்று நினைத்தவனாய் எல்லோரையும் நின்று முறைத்துப் பார்த்தான்.

அறைக்குள் நுழைந்தவன் ‘யோவ் ரத்தினம்’ என்று சத்தமிட வேகமாக வந்து நின்றார். ‘ஒவ்வொருத்தனா வரச்சொல்லு, கதவ சாத்திட்டு போ’ என்று சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தான்.

ஒவ்வொரு ஊர் அடங்காபிடாரிகளும் பவ்யமாக வந்து நிற்க, உள்ளே என்ன பேசினான் என்று வெளியெ யாருக்கும் தெரியவில்லை.  ஆனால் வெளியெ வந்தவர்கள் அனைவரும் வியர்த்துப் போய் வந்தது, உள்ளெ என்னவோ முக்கியமாக நடந்திருக்கிறது என்பது மட்டும் தெரிந்திருக்க, வெளியெ வந்தவர்கள் சத்தமில்லாமல் தத்தம் கூட்டத்துடன் கலைந்து சென்று கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவராக தனியாக அழைத்து அவர்கள் கபடிப் போட்டியில் கலவரம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக செய்தி வந்துள்ளதாகவும், அப்படி ஏதாவது நடந்தால் முட்டிக்கு முட்டி தட்டுவது மட்டுமல்லாமல் மண் கொட்டரையில் கஞ்சிக் குடிக்க அனுப்பிவிடுவேன் என்ற செய்தியை போலீசுக்கே உரிய பாணியில் அடிக்காத குறையாக அவரவர்கள் தலையில் ஏற்றி அனுப்பி வைத்தான்.  வெளியில் வந்த எட்டு ஊர் ரவுடிகளும் எவன் நம்மள போட்டுக் குடுத்தான் என்று தனக்குள்ளே வினவியபடி கபடிப் போட்டியில் மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர்.  கையில் துப்பாக்கியுடன் அங்கங்கே கதை பேசிக் கொண்டிருந்த போலிசுகளைப் பார்த்ததும் ‘விஷயம் கொஞ்சம் விறுவிறுப்பாகத்தான் இருக்கு’ என்பதை உணர்ந்தனர்.  நாட்டன்மை நல்லமுத்துவிற்கு விஷயம் புரியவில்லை என்றாலும் என்னவோ இன்ஸ்பெக்டர் அவரிடம் மட்டும் இந்த போலீஸ் பாதுகாப்பை முன்கூட்டியே ஆலோசனை செய்ததுபோல் விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.

மைதானத்தின் அருகில் இருந்த விநாயக டூரிங் டாக்கிஸ் பல வண்ணக் காகிதக் கொடிகளிலும், வாழைமரம், மாவிலை, தென்னங்குருத்து தோரணங்களினால் ரஜினி காந்தின் மூன்று முகம் படத்தின் முதல் நாள் கலை கட்டிக் கொண்டிருந்தது.  ரஜினி ரசிகர்கள் எல்லொரும் அவரவர்களுக்கு வந்த ஸ்டையில் உடையணிந்து மைதானத்தை சுற்றி வந்துக் கொண்டிருந்தனர்.

கொலையூர், ஈட்டியூர் அணி வீரர்களும் அவர்களது ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் எதிரிகள் போல் பார்ப்பதும், கேலி செய்வதும், முறைப்பதுமாக இருந்தனர்.  ஈட்டியூர் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்திருப்பது அவர்களுக்கு பெரும் சாதனையாகத் தெரிந்தாலும், கொலையூர் அணி முதல் முறையாக இறுதி ஆட்டத்திற்கு வந்திருப்பது அவர்களுக்கு மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்திவிட்டது.  கொலையூர் கோடாரி செல்லப்பனும், ஈட்டியூர் இளங்கோவும் நீண்ட கால எதிரிகள்.  முதன் முதலாக இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவது பெரும் மானப்பிரச்சனையாகிவிட்டது.  கொலையூர் அணி எவ்வித தோல்வியும் அடையாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பது கோடாரி செல்லப்பனுக்கு என்னவோ இரண்டு சாரயக்கடையை ஏலத்தில் எடுத்து வெற்றிப் பெற்றது போல் மோட்டர் சைக்கிளில் பவனி வந்துக் கொண்டிருந்தான்.  இரண்டு அணிகளும் தத்தமது ஊர் மானத்தை காப்பாற்றியாக வேண்டும் என்று முனைப்புடன் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தனர்.    

ஈட்டியூர் மூன்றவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருப்பதால், ஊர் முழுவதும் கிடா வெட்டி விருந்து படைக்க திட்டமிட்ட ஈட்டியூர் இளங்கோ அக்கம் பக்கத்தில் மேய்ந்துக் கொண்டிருந்த பத்து கிடாக்களை கடத்தி கொண்டு வந்து பட்டரையில் அடைத்து விட்டான்.  அதில் நான்கைந்து ஆடுகள் கத்தியூர்காரர்களுக்கு சொந்தமாக இருக்க அந்த ஊர் மக்கள் காலையிலெயே போலீஸ் ஸ்டேஷனில் முற்றுகையிட ஏட்டு ஏகாம்பரம் இன்ஸ்பெக்டர் காதில் இப்போது சொல்ல வேண்டாம் என்று தடுத்து வைத்தார்.  ஏற்கனவெ ஆடு மாடு பிரச்சனையை தீர்க்கவா இன்ஸ்பெக்டர் ஆனோம் என்று எரிச்சலுடன் இருக்கும் அவரிடம் சொன்னால், மனுஷன் இன்னும் டென்ஷன் ஆயிடுவார் என்று அடக்கி வைத்திருந்தார். போட்டி முடிந்தபின் இளங்கோவிடம் பேசி ஏதாவது ஒரு தொகையை வாங்கி சொந்தக்காரர்களிடம் கொடுத்துவிடலாம் என்று கத்தியூர் ஆட்களை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டார்.

தாரை தம்பட்டம் முழங்க கோடாரி செல்லப்பன் பெரிய கூட்டத்துடன் வந்து சேர்ந்தான்.  ஈட்டியூர் இளங்கோ ஏற்கனவே மைதானத்தில் இருக்க, இரண்டு தலைவர்களும் தத்தமது அணி வீரர்களுக்கு வீர வசனம் பேசி உற்சாகம் கொடுக்க ஆரம்பித்தனர்.  மேடையில் மற்ற ஊர் தலைவர்கள் எல்லாம் வெள்ளை வேட்டி துண்டு சகிதமாய் அமர்ந்திருக்க, நடுவில் வள்ளியூர் வடிவுக்கரசி மட்டும் பட்டத்து ராணி போல் அமர்ந்திருந்தாள்.  இக்பால் வராதது அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.  இக்பால் வந்தால், அவனும், ஊர் நாட்டன்மையும், இன்னும் ஏதாவது பெரிய தலைகள் ஒன்றிரண்டு மட்டும் மேடையில் இருப்பார்கள்.  நல்லமுத்து மட்டும் எரிச்சலுடன் உட்கார்ந்த்திருந்தார்.  ஒலி பெருக்கியில் சினிமா பாடல்கள் மைதானத்தையே கிழித்துக் கொண்டிருக்க, சின்னஞ்சிறுசுகள், பாவாடை தாவணி சிட்டுகள், அவர்களின் பின்னால் சிகெரட்டும் கையுமாக உலாவரும் இளைஞர் பட்டாளம், இந்தக் கூட்டத்தைப் பார்த்து இதயம் அடித்துக் கொள்ளும் பெற்றோர்கள் என்று மைதானம் களைக் கட்டியது.  நான்கு மணிக்கே போட்டியை தொடங்கச்சொல்லி இன்ஸ்பெக்டர் உத்தரவு, ஆனால் ஈட்டியூர் இளங்கோவும், கொடாரி செல்லப்பாவும் இன்னும் தனது பிரசங்கத்தை முடிக்கவில்லையே என்று நல்லமுத்துவிற்கு வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்துக் கொண்டிருந்தது.

பெட்டி ஐஸ், ஜவ்வு மிட்டாய், சுண்டக் கடலை, இளநீர், சர்பத் ஸ்டால், அல்வா, காரப் பூந்தி என்று மைதானம் முழுவதும் அங்கங்கே வியாபரம் சுறுசுறுப்பாக நடந்துக் கொண்டிருந்தது.  சீக்கிரம் போட்டிய நடத்தி தொலைங்கடா என்று சினிமாக் கொட்டகை முதலாளி புரஜக்டர் அறையில் நின்று கொண்டு பொருமிக் கொண்டிருந்தார்.

லத்தியும் கையுமாக ஏழெட்டு போலிசுகளுடன் ஏட்டு ஏகாம்பரம் வந்து சேர, நல்லமுத்து போட்டியை ஆரம்பிங்கய்யா என்று சத்தம் போட ஆரம்பித்தார்.
கம்பியூர் உயர் நிலைப் பள்ளியின் விளையாட்டு வாத்தியார் பாலு விசிலடிக்க இரண்டு அணிகளும் பதமாக தண்ணீர் தெளித்து குளிர்விக்கப்பட்ட மணல் அரங்கில் பலத்த கரகோஷத்துடனுன் பிரவேசித்தனர்.  அணி வீரர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி ஒலி பெருக்கியில் அறிமுகப்படுத்த, விளையாட்டு வீரர்களின் மனதில் சூடு பிடிக்க ஆரம்பித்தது.  போட்டி வர்ணனையாளர்கள் தங்களது பணியைத் தொடங்க, சூடம் ஏற்றி, ஆராதனை செய்து போட்டியைத் தொடங்கும் ஆனை பிறப்பித்தார் உள்ளூர் பூசாரி.
போட்டி விறுவிறுப்பாகவே தொடங்கியது.  இரண்டு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் இளைத்தவர்கள் இல்லை என்பது போல் எதிரணி களங்களில் நன்றாகவே வீடு கட்டி வலம் வந்தார்கள்.  புள்ளிகள் பெரும்பாலும் சமமாகவே முன்னெற பார்வையாளர்கள் எல்லோரும் உலகையே மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  இளங்கோவும் செல்லப்பனும் இரு பக்கத்திலும் நின்று கொண்டு மாறி மாறி கத்திக் கொண்டிருந்தனர்.  இரு அணிகளும் விடாப்பிடியாக எதிரணி வீரர்களை மடக்கிப் பிடித்து புள்ளிகளை குவித்துக் கொண்டிருந்தனர். முதல் சுற்றில் ஈட்டியூர் வெற்றி பெற, கொலையூர் பக்கத்தில் இறுக்கம் அதிகமானது.  செல்லப்பனும், இளங்கோவும் ஒருவரை ஒருவர் சண்டைக் கோழிப் போல் பார்க்க ‘என்னட முறைக்கிற’ என்ற சத்தம் எங்கிருந்தோ வர, திடீரென்று இருவரும் தோள் துண்டை கையில் எடுத்துக் கொண்டு ‘என்னடா சொன்ன’ என்பது போல் நெருங்க, அருகில் இருந்தவர்கள் இடையில் புகுந்து சலசலப்பை சமாளித்தனர்.

இரண்டாவது சுற்று முதல் சுற்றைவிட இன்னும் உக்கிரமடைந்தது.  ஈட்டியூர் வீரன் ஒருவனின் பனியன் கிழிய, மீண்டும் ஒரு சலசலப்பு உருவாகி கிட்டத்தட்ட அடித்துக் கொள்ளுமளவிற்கு வந்து நிற்க, ஏட்டு ஏகாம்பரம் தலையிட்டு சமாதானப்படுத்தி வைத்தார்.  இரண்டாவது சுற்றில் கொலையூர் வெற்றி பெற, நிலைமை இன்னும் இறுக்கமாகிப் போனது.  இரண்டு அணிகளும் தத்தமது வியூகத்தை விவாதிக்கும்போது தூரத்தில் ஒரு டிராக்டர் வந்து நின்றதை ஏகாம்பரம் கவனிக்கத் தவறவில்லை.  வந்து நின்றது என்னவோ காலி டிராக்டராக தெரிந்தாலும், ஏகாம்பரத்திற்கு சென்ற வருடத்து ஞாபகம் தலையில் ஏறியது.  ‘இந்த காட்டுமிராண்டி பசங்க திருந்த மாட்டாங்கட’ என்று நினைத்தவர், டிராக்டருக்குள் என்ன கொண்டு வந்திருப்பானுங்க, அது யாரொட டிராக்டர் என்று சிந்திக்க ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில் டிராக்டரை சுற்றி கூட்டம் கூட, சாரயப் புட்டிகள் பரிமாறப்பட்டது.  ஏகாம்பரத்திற்கு என்ன செய்வதென்று புரியவில்லை.  அடி தடி குத்து கொலை எல்லாம் சாரயத்துலதான் ஆரம்பிக்கும் என்று யோசித்தவர், ஒரு கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு இக்பாலுவிற்கு செய்தியை அனுப்பினார்.

மூன்றாவது சுற்று ஆரம்பமானது.  இரண்டு அணிகளும் பலமாக மோதிக் கொண்டனர். இரத்த காயங்கள் ஏற்படத் தொடங்கியது.  என்னதான் அனுபவம் இருந்தாலும் வாத்தியார் பாலு அசந்து போனார்.  திடீரென்று ஈட்டியூர் அணி டைம் அவுட் வாங்க, இரண்டு சாரயப் பாட்டில்கள் அணி வீரர்களுக்கு பாணமாக அளிக்கப்பட, வாத்தியார் பாலு பதட்டமடைய ஆரம்பித்தார்.  நல்லமுத்துவை அழைத்து விவரம் சொல்ல, அவர் இளங்கோவிடம் போய் ஏதோ பேச, இளங்கோ எதையோ பதிலுக்கொ சொல்லி வைக்க, நல்லமுத்து முகம் தொங்கி போய் வந்தார்.  விளையாட்டு வீரர்களுக்கு சாரயம் கொடுப்பதைப் பார்த்த செல்லப்பன், தன் பங்கிற்கு தானும் நாலு பாட்டில்களை தனது வீரர்களுக்கு வாங்கிக் கொடுத்தான்.  வாத்தியார் பாலு விசிலடித்து அசந்ததுதான் மிச்சம், டைம் அவுட் கிட்டத்தட்ட பெரிய இடைவேளை போல் ஆகிப் போனது.

போட்டி மீண்டும் தொடங்க, ஏகாம்பரம் லேசாக இடத்தை விட்டு நகர்ந்து சற்று தூரமாகி நின்றுக் கொண்டார்.  போலீஸ் கான்ஸ்டபிள்களும் கூட்டத்தை விட்டு தூரமாகவே போய் நின்றனர்.  எதிர்பார்த்தது போல், போட்டி கட்டுப்பாட்டை மீறிப்போக ஆரம்பித்தது.  போதையில் விளையாடும் வீரர்கள் அடாவடித்தனமாக விளையாட போட்டி விதிகள் எல்லாம் மீறப்பட ஆட்டம் முரட்டுத்தனமாக மாறியது.  பாலு இரண்டு அணியையும் அழைத்து போதையில் விளையாடுபவர்களை வெளியேற்ற பிரச்சனை இன்னும் அதிகமாகியது.  இக்பாலிடமிருந்து ஏதோ செய்திவர, ஏகாம்பரம் ஆடுகளத்தில் வந்து நின்றார்.  நல்லமுத்துவை அழைத்து விவரத்தைச் சொல்ல, நல்லமுத்து இரண்டு அணி வீரர்களையும் அழைத்து நிலைமையை விளக்க கொஞ்சம் சமாதானம் ஏற்பட்டது.  மீண்டும் விளையாட்டு துவங்க, மீண்டும் முரட்டுத்தனத்துடன் போட்டி நடக்க, மீண்டும் பிரச்சனை ஏற்பட அடிதடியில் வந்து நின்றது.  ஆடுகளம் அடிதடி களமாக மாறியது.  குய்யோ முய்யோ என்ற சத்தமும், வாய்க்கு வந்தபடி வந்த ஏசுதல்களும் தடார் மடார் என்ற அடிகளும் கூட்டத்தை இங்குமங்கும் சிதறி ஓட வைத்தது.

இக்பாலின் ஜீப் வேகமாக சத்தமிட்டு வந்து நின்றது.  ஜீப்பை விட்டு இறங்கியவன் கையில் லத்தியை சுழற்றியபடி முன்னேற கூட்டம் இரு மருங்கிலும் சிதறி வழிவிட, வேகமாக வந்தவன் ஒலி வாங்கியை கையில் வாங்கினான். இக்பாலைப் பார்த்த பார்வையாளர்கள் சற்று ஆசுவாசமடைந்து அங்கங்கே நின்றனர்.  அடித்துக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் விட்டு விலகி அவனைப் பார்க்க, இக்பால் பேச ஆரம்பித்தான்.

‘இரண்டு அணி வீரர்களும் ஆடுகளத்திற்கு வாருங்கள்’  இரண்டு அணி வீரர்களும் வந்து நிற்க ‘இதுல சாரயாம் குடிச்சவங்க, வெளிய வாங்க’ என்றான்.  இரண்டு அணியிலிருந்தும் அவர்கள் வெளியேற, ‘ஈட்டியூர் இளங்கோ, கோடாரி செல்லப்பன் இருவரும், ஆடுகளத்திலிருந்து மேடையில் சென்று அமருங்கள், போங்க’ என்று ஆணையிட்டான்.

இருவரும் தயங்கியபடி நகர இக்பால் மீண்டும் பேச ஆரம்பித்தான்.  ‘ஆட்டம் மீண்டும் தொடங்கலாம், யாரவது பிரச்சனை பண்ணுனீங்கன்ன.. பெரியவர் சின்னவர், தலைவர் தொண்டர்னு எதுவும் பாக்கமாட்டேன், என்னப்பத்தி உங்க யாருக்கும் தெரியாது.  ஒழுங்க விளையாடி யார் ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு பரிசு கொடுங்க, பாரட்டுங்க’ என்று சொல்லிவிட்டு கூட்டத்தைவிட்டு வெளியேற, போட்டி மீண்டும் தொடங்கியது.

போட்டி விறுவிறுப்பு இல்லாமல், கொஞ்சம் சொதப்பலாகவே இருக்க, இக்பால் ஜீப்பில் ஏறி அமர்ந்தபடி அங்கெயே இருந்தான்.  மேடையில் செல்லப்பனும் இளங்கோவும் ஒருவரை ஒருவர் தின்றுவிடுவது போல் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, ஒருவழியாக கொலையூர் மூன்றாவது சுற்றில் வெற்றி பெற, போட்டி முடிவுக்கு வந்தது.  கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டரை நோக்கியும், கடைத்தெருவை நோக்கியும் நகர, பரிசளிப்பு விழா நடைபெற தயாரானது.  இக்பாலும் ஜீப்புடன் நகர்ந்தான்.

பரிசளிப்பு விழா வழக்கம் போல் சுத்துபட்டு தலைவர்கள் எல்லோரையும் மேடையில் அழைத்து பேசுவதற்கு அழைத்துக் கொண்டிருந்தார் பெரிய பாண்டி. வெற்றி பெற்ற அணி வீரர்களும் அவர்களது ஆதரவாளர்களும் மேடையில் சூழ்ந்திருக்க, ஈட்டியூர் இளங்கோ மேடையை விட்டு இறங்கி டிராக்டரை நோக்கி நடந்தான்.  வானம் சிவந்து கொண்டிருக்க, இளங்கோவின் விழிகள் அதைவிட அதிகமாக சிவந்து விஷத்தை கக்கிக் கொண்டிருந்தது.  அவனது தலையை கரும்பாலையில் விட்டு நசுக்கியது போல் கோபத்தின் வெப்பத்தில் தகித்தான்.  அவமானம் அவனை உலுக்கி எடுத்தது.  அவனது கோபம் வெறியாக மாறி செல்லப்பனையும் தாண்டி இக்பாலின் மீது போய் நின்றது.  இவன் ஏன் வந்தான் என்ற கேள்வி அவனை இன்னும் போதையேற்ற, இன்றைக்கு ஒரு வழி பண்ணிவிட வேண்டும் என்று தனது ஆட்களை அழைத்தபடி நடந்தான். டிராக்டரில் பதுக்கியிருந்த வெட்டறிவாள், ஈட்டி, கத்தி, கடப்பாரை என்று எல்லாவற்றையும் ஆளுக்கொன்றாய் எடுக்க, பரிசளிப்பு விழா நிறைவுபெற்றது.  தியெட்டரிலிருந்து படம் தொடங்குவதற்கு முன்னதாக பக்தி பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. இருட்டு படலம் மைதானத்தை குடி கொள்ள, வெற்றி பெற்ற அணி வீரர்களுடன் செல்லப்பன் குதூகலித்துக் கொண்டிருந்தான்.  கொலையூர் ஆதரவாளர்கள் ஈட்டியூரை அக்கு வேறு ஆணி வேறாக அவர்களது தோல்வியை பிய்த்து இன்னும் அவர்களை அவமானப்படுத்த, இருட்டின் ஆதிக்கத்திற்காக டிராக்டரின் அருகில் கொலைவெறியுடன் நின்று கொண்டிருந்தனர் ஈட்டியூர் இளங்கோவும் அவர்களது கூட்டமும்.

(தொடரும்)

Friday, 8 March 2013

எங்க வீட்டு போலீஸ் - 3


வானத்தில் ஓர் வெள்ளிக் கீற்றின் வரவைக் கண்ட சேவல் வெளிச்சத்தின் வரவை உலகிற்கு பறை சாற்றியது.  கதிரவனின் வரவை மகிழ்வுடன் வரவேற்கிறதா அல்லது மனிதர்களே உறங்கியது போதும், உங்கள் கடமைகளை செய்ய எழுந்திரியுங்கள் என்கிறதா என்று தெரியவில்லை.  ஒரு சேவலில் தொடங்கி, அங்கங்கே இன்னும் சில சேவல்களும் சேர்ந்து கூவிக் கொண்டிருந்தன. முற்றத்தின் நடுவில் இயற்கை காற்றில் உறங்கிக் கொண்டிருந்த இக்பால் சேவலின் கூவலில் விழித்துக் கொண்டான்.  சூரியக் கிரணங்கள் இன்னும் மண்ணில் விழவில்லை என்பதை வெளிச்சத்திற்கு விடைசொல்லிக் கொண்டிருந்த அதிகாலை இருட்டு வெளிக்காட்டியது.

எழுந்தவன் மனதில் இன்று கபடிப் போட்டியின் கடைசி நாள் என்பது சொல்லாமல் கொள்ளாமல் உடனடியாக ஊடுருரிவிக் கொண்டது. கபடிப் போட்டியின் கடைசி நாளை நினைக்கையில் மனதில் என்னவோ ஒரு படபடப்பு தோன்றியது.  எழுந்தவுடனேயெ மனம் பீதிக்குள்ளகியது. ஏதோ அடிதடிப் பிரச்சனைகள் உருவாகும் என்று மனம் லேசாக தடுமாறியது. பிடிக்காத விஷயங்கள் மனதில் புகுந்துக் கொண்டால அவைகள் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் போகிறது.  அதிலும், மனம் சமநிலையில் இல்லை என்றால் கேட்கவே வேண்டாம். வேண்டாத கற்பனைகள், அதன் மூலம் உருவாகும் சிந்தனைத் தடுமாற்றங்கள், அதைத் தொடர்ந்து எல்லாமே பிரச்சனைகளாகவும், சிக்கல்களாகவும் மனதை மொய்த்துக் கொள்வதும், எல்லாவற்றையும் அதீதமாக உருவாக்கி மொத்தத்தில் இருக்கும் நிம்மதிகளையெல்லாம் கெடுத்துவிடுகிறது.  மனதை கட்டுபடுத்த வேண்டும் என்று மனதிலிருந்தே இன்னுமொரு குரல் ஒலித்தது.  எழுந்து அமர்ந்த இக்பாலுவிற்கு இறைவனை தொழவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.  முஸ்லீமாக இருந்தாலும் ஐவேளை தொழுகைகளை முறைப்படி செய்வதில்லை.  மனம் விரும்பியபோது செய்வதுடன் இறைவனுக்கும் தனக்கும் உள்ள உறவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.  இத்தனைக்கும் சல்மா எல்லா தொழுகைகளையும் முறைப்படி அதற்குரிய நேரத்தில் செய்து விடுவாள்.  அதை நினைத்து அவ்வப்போது வெட்கப்பட்டாலும், தொழுகையை மனம் நாடுவது மிகவும் குறைவாகவே இருந்தது.

எழுந்து கைகால்களை கழுவி ஒலு செய்துவிட்டு காலை நேரத்து தொழுகையை செய்தான். இறைவணக்கத்தை முடித்து எழுந்த இக்பால் சற்று மனம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக நினைத்தான். அதிகாலை இறைவணக்கத்தில் ஏதோ ஓர் சிறப்பு இருக்கிறது.  இரவிலிருந்த்து பகல் பிரிகின்ற இயற்கை மாற்றத்தினால் ஏதோ ஒருசில வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன அதனால்தான் அதிகாலை எப்போதும் மனதிற்கு அமைதியை தருகின்றது, அதிலும் காலை வணகக்கத்தை செய்யும்போது மகிழ்வாகத்தான் இருக்கின்றது.  டி.எஸ்.பி விருதாச்சலத்திடம் பேசி கூடுதல் போலீஸ் பந்தோபஸ்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்தவனாய், உடல் பயிற்சி செய்யத் தயாரானான். வயல்வெளியில் வேலைக்குச் செல்லும் உழைப்பாளிகளின் நடைச் சத்தமும், கூடவே ஓட்டி செல்லும் காளை மாடுகளும், அதன் சலங்கை சத்தங்களும் உலகம் சுறுசுறுப்படைந்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தியது.

கம்பியூர் கிராமத்து மக்களின் வாழ்க்கையை நினைத்துப் பார்த்தபடி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான்.  பெரும்பாலான மக்கள் விவாசயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றார்கள்.  வாழ்க்கையில் பெரிதாக எந்த கனவுகளும் இருப்பதாக தெரியவில்லை.  அப்படியே இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்வதில்லையோ என்னவோ. இருப்பதைக் கொண்டு வாழ்கிறார்கள்.  மகிழ்ச்சியாகத்தான் செல்கிறது அவர்களது வாழ்க்கை.  பக்கத்து வீட்டு சிறுவர்கள் எழுந்துவிட்டார்கள் என்பது அவர்களின் கொல்லைப்புற நடமாட்டத்தின் மூலம் புரிந்தது.  அந்த சிறுவர்களுடன் எப்போதாவது பேச வேண்டும் என்று தோன்றும், ஆனால், அவர்கள் அருகில் வருவதே இல்லை.  போலீஸ்காரன், போகவேண்டாம் என்று பெற்றவர்கள் பயமுறுத்தி வைத்திருக்கிறார்களோ என்னவோ.

கதவு தட்டும் ஓசை கேட்க உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு வெளியில் வந்தான்.  வயதான ஒரு கிழவர் நின்று கொண்டிருந்தார்.  'இன்ஸ்பெக்டர் சார், வணக்கம்' என்ற அவரது மரியாதையான வார்த்தைகள் அவரை உள்ளே வரச்சொன்னது. 'உள்ள வாங்க பெரியவரே' என்று அழைத்தான்.

மெதுவாக படியேறி மேலெ வந்தவர் 'உங்கள நான் தம்பின்னு கூப்பிடலாமா' என்றார்.  சிரித்துக் கொண்டு தலையசைத்தான் இக்பால். 'என்ன விஷயம்' அமைதியாக கேட்டான்.

'உங்களப்பத்தி எல்லாரும் நல்லா பேசுறாங்க, இந்த ஊரு மக்களுக்கு உங்கள பிடிச்சுருக்கு, அதான் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்' கிழவர் நிறுத்தினார்.  இக்பால் எதுவும் பேசாமல் புன்னகைத்தப்படி இருந்தான். 'தம்பி, என் பேரு ஜெயராமன்.  நான் தமிழ் வாத்தியாரா இருந்தேன்.  இப்ப ஓய்வடைஞ்சு பத்து வருஷம் ஆவுது' நிறுத்தினார்.

இக்பாலுவிற்கு, இப்போதுதான் ஒரு நல்ல மனிதரை இந்த ஊரில் சந்தித்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. 'தம்பி உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்'. அமைதியானார்.  இக்பாலின் மனம் லேசாக படபடக்க ஆரம்பித்தது.  இந்த ஊர்ல இருக்குறவங்கல்லாம் ஏதோ திகில் படத்துல வர்ர மாதிரிதான் பேசுறாங்க.

‘தம்பி நீங்க படிச்சவர், உங்களுக்கு இந்த திருக்குறள் தெரியும்னு நினைக்கிறேன்’. நிறுத்தினார் தமிழ் வாத்தியார். இக்பால் தனது அறியாமையை மறைக்க சற்று சிரமப்பட்டான்.  பண்ணிரண்டாம் வகுப்பில் படித்ததெல்லாம் எங்கே ஞாபகம் இருக்கும்.  அவ்வப்போது அரசு பேருந்தில் எழுதியிருப்பதைப் பார்த்து படிதததை ஞாபகம் செய்துகொள்வதோடு சரி.

‘பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார் பொருத்தளும் வல்லது அமைச்சு’ நிறுத்திவிட்டு இக்பாலைப் பார்த்தார்.  இக்பால் மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.  நல்லமுத்து வரலாறு கற்றுக் கொடுத்தார்.  ஜெயராமன் திருக்குறள் கற்றுத் தருகிறார். மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவர் மேலும் என்ன சொல்லப் போகிறார் என்பதை கேட்க ஆவலானான்.

‘தம்பி’ தமிழ் வாத்தியார் தொடர்ந்தார் ‘பகைவர்களுக்கு துணையானவர்களை பிரித்தலும், தம்மிடம் உள்ளவர்களை காத்தலும், பிரிந்தவரை மீண்டும் சேர்த்தக் கொள்கின்ற வல்லமை கொண்டவன்தான் அமைச்சன்’ திருக்குறளின் தெளிவுரையைச் சொல்ல, இக்பால் நெற்றி சுருங்கியது.  இந்த மனிதர் சாதரண விஷயத்தைச் சொல்லவில்லை.  சூசகமாக கம்பியூரின் சூட்சமத்தை சொல்கின்றார் என்பது புரிய வந்தது.  பிரச்சனை என்னவென்றால் நான் இந்த ஊருக்கு போலீஸ் அதிகாரியாக இருக்க தகுதி உள்ளவனா?

‘தம்பி நீங்க நல்லவரு’ யோசித்தவனின் மனதை தன் பக்கம் திருப்பினார் தமிழ் வாத்தியார். ‘ஆனா நல்லவனா இருந்தா மட்டும் வெற்றி கிடைக்காது.. வல்லவனாகவும் இருக்க வேண்டும்.  நான் புறப்படுறேன் தம்பி’ என்றவாறு எழுந்தார்.

‘அய்யா, உங்களுக்கு குடிக்கிறதுக்கு நான் ஒன்றும் தரலயெ’ என்றவனின் முகத்தைப் பார்த்து புன்முறுவல் செய்த ஜெயராமன் ‘பரவாயில்ல தம்பி’ என்றவாறு படியிறங்கினார்.  வீட்டின் கடைசிப் படியில் நின்றவர் சற்று நிதானித்து திரும்பினார். ‘தம்பி உங்கள மாதிரி ஒரு நல்ல அதிகாரி இந்த ஊருக்கு கிடைச்சது இந்த ஊரோட புண்ணியம், ஆனால் உங்களுக்கு நிறைய சிரமம்.  இந்த ஊருல நல்ல மனிதர்கள் நிறைய இருக்காங்க, உங்களுக்கு எல்ல உதவியும் அவங்க செய்வாங்க’ என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் நடந்தார்.  அவர் போவதை பார்த்துக் கொண்டிருந்த இக்பால்,

இந்த ஊர் விசித்திரமாக இருக்கிறதா அல்லது எனக்கு அப்படி தெரிகிறதா என்று யோசித்தவன் திருக்குறளுக்கான தெளிவுரையை ஆராயத் தலைப்பட்டான்.

மொபைல் ரீங்காரமிட்டது. ‘அப்துல் காதர்’ என்ற பெயர் தெரிய..காலையிலேயெ மாமா போன் செய்கிறாரே என்று நினைத்தபடி எடுத்தான்.

‘சலாம் அலைக்கும்’ அப்துல் காதர் மறு முனையில் பேசினார்.

‘அலைக்கும் வஸ்ஸலாம்’ பதில் சொன்னான்.

‘இக்பால்... ஃபிரியாத்தான இருக்க’

‘சொல்லுங்க மாமா’

‘உன் டிரான்ஸ்பர் விஷயமா பேசிட்டேன்.  இரண்டு சாய்ஸ் இருக்கு. ஒன்னு அறந்தாங்கி, இன்னொன்னு மயிலாடுதுறை.  உனக்கு எதுன்னு சொல்லு, அங்க போஸ்டிங் வாங்கிடலாம்’ இக்பாலின் மனம் இப்போதுதான் மலரத் தொடங்கியது.  ‘அப்பாடா...’ என்று ஒரு நிம்மதி மூச்சு வந்தது.  கம்பியூரை விட்டு போவதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது என்று மனம் விசிலடிக்கத் தொடங்கியது.

‘என்னப்பா... சத்தமே இல்ல’ மாமனார் மறு முனையில் பேசினார்.

‘மாமா.. நாளைக்கு சொல்றேன், டயமிருக்குல்ல’

‘சொல்லலாம், சல்மாக்கிட்ட நான் இதுவரைக்கும் சொல்லல்ல.. நீயெ பேசிக்க’

‘சரி மாமா.. ஒன்னும் செலவு ஆகலியெ’

‘கண்டிப்பா இல்ல, நாளைக்கு போன் செய்’ என்று சொல்லிவிட்டு போன் அட்ங்கியது.

சல்மாவிடம் இனிமேல்தான் சொல்ல வேண்டும்.  அவளுக்குத் தெரிய வேண்டாம் என்று மாமாவிடம் மட்டும் பேசி வைத்திருந்தான்.  தெருவாசலில் வந்து நின்றான்.  எதிர் வீட்டுச் சுவற்றில் ‘மூன்று முகம்’ திரைப்பட போஸ்டர் ஒட்டியிருந்தது.  ‘அவள் ஒரு தொடர்கதை’ முடிந்து இன்றிலிருந்து ரஜினியின் மூன்று முகம்.  கபடிப் போட்டியின் கடைசிநாள் என்பதால் ரஜினியின் படத்தை வெளியிட்டிருந்தது கம்பியூரின் டூரிங் தியேட்டர். ரஜினி போலீஸ் யூனிபார்மில் கம்பீரமாய் நின்று கொண்டிருந்தார்.  இக்பாலுவிற்கு சிரிப்பு வந்தது.  நடிகர்களைப் பார்த்து போலீஸ் அதிகாரிகள் நடக்கிறார்களா அல்லது போலீஸ் அதிகாரிகளை மனதில் வைத்துக் கொண்டு நடிகர்கள் நடிக்கிறார்களா?

தெருவில் பம்பரம் விளையாட வந்த பக்கத்து வீட்டு சிறுவர்கள் இக்பாலைப் பார்த்ததும் வேகமாக வீட்டுக்குள் ஓட எத்தனிக்க ‘டேய்... நில்லு’ என்று சத்தமிட்டான்.  ஓட நினைத்தவர்கள் பயந்து நிற்க ‘இங்க... வாங்கடா’ என்று அழைத்தான். இக்பாலின் குரல் கேட்டு சிறுவர்களின் தாய் மெதுவாக எட்டிப் பார்த்தாள்.

‘என்னடா படிக்கிறீங்க’ கேட்டான்.  ஒருவன் இன்னொருவனைப் பார்த்துக் கொண்டு எந்த பதிலும் சொல்லாமல் நிற்க...’சொல்லு சுரேஷ்’ என்ற அவளின் தாயின் சத்தம் கேட்டது.

‘நாலாவது படிக்கிறோம்’ என்று ஒரு சேர சொன்னார்கள்.

‘ரெண்டு பேரும் நாலாவதா’ கேட்டான்.

‘ஆமாம்’ என்று சொல்லிவிட்டு திடுதிடுவென உள்ளே ஓடினார்கள்.

‘ரெண்டு பேரும் ரெட்டைக் குழந்தங்க... சார்’ என்றவாறு சிறுவர்களின் தாய் சற்று வெளியில் வந்தாள்.

‘நல்லா படிக்க வைங்க’ என்று சொல்லிவிட்டு இக்பால் உள்ளே சென்றான்.

சில்லென்ற கிணற்று நீரை தலையில் கொட்டி உடம்பில் ஒளிந்திருந்த வெப்பத்தை வெளியேற்றினான் இக்பால்.  கிணற்று நீர் இன்றைக்குத்தான் குளிர்ச்சியாகத் தெரிந்தது.  இதுநாள்வரை கிணற்றுக் குளியலை வேண்டா விருப்பாக செய்தவன் இன்றைக்கு மிகவும் ரசித்துக் குளித்தான்.  கிணற்றில் நீர் இரைத்துக் குளிப்பதும் ஒருவிதமான உடல் பயிற்சிதான், அதிலும் நிலத்தடி நீருக்கு இருக்கும் புத்துணர்ச்சி, முனிசிபாலிட்டி நீரைவிட அதிகம்தான்.

வாசலில் ஜீப் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.  இன்றைக்கு என்னவோ யூனிபார்ம் போட மனம் நாடவில்லை.  கால்சட்டையும், அரைக்கை சட்டையும் அணிந்தவன் போலீஸ் டிரைவர் சந்தானம் வாங்கி வந்த காலை இட்டலி கேரியரைத் திறந்து வழக்கம்போல் சாப்பிட ஆரம்பித்தான்.  சல்மா இருந்தால் விதவிதமான காலை உணவு கிடைக்கும்.  அவள் சமையலில் கெட்டிக்காரி.  என்னதான் அவளிடம் கோபம் கொண்டு திட்டினாலும், கணவணுக்கு விதவிதமாக சமைத்துத் தருவதை மட்டும் ஒரு போதும் நிறுத்தியதில்லை.  மனைவி அருகில் இல்லாத போதுதான் அவளின் மகத்துவம் புரிகிறது.

வாசலில் வந்து நின்றவன் ஜீப்பைச் சுற்றி அதை தொட்டும் தடவியும் ரசித்துக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டு சிறுவர்களைப் பார்த்தான். ஒருவனின் பெயர் சுரேஷ் என்றால் இன்னொருவனின் பெயர் ரமேஷாகத்தான் இருக்கும்.

இரட்டையர்கள் என்றால் பொதுவாக இப்படித்தான் பெயர் வைப்பார்கள் என்று நினைத்தவன் ‘ரமேஷ்’ என்று அழைக்க இரட்டையர்கள் இருவரும் வெடுக்கென திரும்பி நின்றார்கள்.  சிரித்தபடி ஜீப்பை நோக்கி இக்பால் நடக்க சிறுவர்கள் இருவரும் மெதுவாக தன் வீட்டுத் திண்ணையில் ஏறி நின்றனர்.

போலீஸ் ஜீப் இக்பாலை சுமந்துக் கொண்டு மெதுவாக நகர்ந்தது.

ஏட்டு ஏகாம்பரம் இன்ஸ்பெக்டர் நாற்காலியில் உட்கார்ந்து சிகரெட் ஊதிக் கொண்டிருந்தார். ஏகாம்பரத்திற்கு அவ்வப்போது இன்ஸ்பெகடர், சப் இன்ஸ்பெக்டர் நாற்காலிகளில் அமர்ந்துப் பார்ப்பதில் ஒரு அலாதியாக சந்தோஷம். பக்கத்தில் கான்ஸ்டபிள் கந்தசாமி நின்று கொண்டு ஏகாம்பரத்தின் கற்பனையில் தானும் சேர்ந்துகொண்டு என்றைக்காவது சப் இன்ஸ்பெக்டர் ஆகவேண்டும் என்று தானும் மிதக்க ஆரம்பித்தான். வாசலில் வந்து நின்ற இக்பாலை இருவருமே கவனிக்கவில்லை. சற்று நேரம் நின்று இருவரையும் பார்த்த இக்பால் மெதுவாக உள்ளே வர கந்தசாமி வேகமாக சல்யயூட் அடிக்க ஏகாம்பரம் சிகரெட்டை அருகில் போட்டுவிட்டு எழுந்து தானும் சல்யூட் அடித்தார்.

'என்னய்யா இது' இக்பால் கேட்டபடி எதிரில் நின்றான்.

'இல்ல சார் வரப்போற புரமோஷனுக்கு சும்மா உட்கார்ந்து பீல் பண்ணி பார்த்தேன்' ஏட்டு சீரியசாகவே பதில் சொன்னார்

'எப்ப வரப்போவுது?'

'அஞ்சு வருஷத்துல எப்படியும் வந்துடும் சார்' ஆர்வமாக சொன்னார் ஏகாம்பரம்

'இன்னும் அஞ்சு வருஷத்துல.. ஊம்... அதுக்கு இப்பவே' இக்பாலின் கேள்வி ஏகாம்பரத்தை நிதானிக்க வைத்தது.

'ஆமாம் சார்...' ஏகாம்பரத்திற்கு வார்த்தை இழுக்க ஆரம்பித்தது.

'எப்படியும் உனக்கு கண்டிப்பா சாவு வரத்தான் போகுது... இப்பவே ஒரு சவப் பெட்டியில படுத்து பாக்கறியா'

'சாரி சார், இனிமே செய்யமாட்டேன்' பதிர்ந்து பதிலளித்தார் ஏட்டு

'போய் குடிக்கிறதுக்கு தண்ணீ எடுத்துட்டு வா' அப்பன் எப்ப சாவுவான் திண்ணை எப்ப காலியாகும்னு அலையறானுங்க, மனதிற்குள் நினைத்தவனாய் நாற்காலியை நோக்கி நடந்தான்.

ஏட்டு கந்தசாமியைப் பார்த்து 'ஏன்யா நிக்கிற.. சீக்கிரம் போய் எடுத்துட்டு வாய்யா!' என்று சத்தமிட்டார்.

'ஏட்டு உன்னதான் சொன்னேன்... ஏன் நீ செய்ய மாட்டியா..' இக்பால் எரிச்சலாகவே கேட்டான். ஏகாம்பரத்திற்கு அவமானமாய் தோன்றியது. ஏட்டு கந்தசாமியை முறைத்தபடி நகர்ந்தார்.

இக்பால் நாற்காலியை நோக்கி நகர கந்தசாமியும் நகர இக்பாலுக்கு வழி போதவில்லை.  கந்தசாமி மறு பக்கம் நகர்ந்தான்.  இக்பாலும் கநதசாமியும் மாற்றி மாற்றி நகர, இக்பாலுவிற்கு இது என்னடா காலையிலேயெ காமெடி என்று நினைத்தவனாய்.

'கான்ஸ்டபிள்... நகர்ந்து தொலையேன்யா!' என்று சத்தமிட்டான்.

கந்தசாமி 'நகர்ந்துதான் சார் இருக்கிறேன்' என்று சொல்ல 'நீ நகர்ந்துதான் இருக்கிற, உன் தொப்பையும் நக்ர்ந்துய்யா' என்று இக்பால் சத்தமிட கந்தசாமி நகர்ந்து வழி விட்டான்.

ஏட்டு தண்ணீர் கிளாசை கொடுத்துவிட்டு அமைதியாக நின்றார்.

இக்பால் கந்தசாமியை அழைத்தான் 'கான்ஸ்டபிள் வாய்யா இங்கே'

'சார்'

'எத்தனை வருஷமா சர்வீசுல இருக்கிற'

'பத்து வருஷமா சார்' கந்தசாமி பதில் சொன்னான்.

'பத்து வருஷத்திலேயே இவ்வளவு பெரிய தொப்பையா உனக்கு'

'அது குடும்ப பாரம்பரியம் சார்' சிரித்தபடி சொன்னான் கந்தசாமி

'எது, பிச்சைக்காரன்கிட்ட ல்ஞ்சம் வாங்குறதா'

'சார் அது... அவன் பிளாட்பார்ம்ல உட்கார்ந்துகிட்டு...பொற வர்ர பொண்ணுங்கள சைட் அடிச்சிக்கிட்டு இருந்தான்'

'அதும் பத்து ரூபா .. வெட்கமாயில்ல'

'இனிமே அதிகமா வாங்குறன் சார்' அவன் எதார்த்தமாக சொல்கிறானா அல்லது வேண்டுமென்றே சொன்னான என்று இக்பாலுவிற்கு புரிந்துக் கொள்ளமுடியவில்லை.

'நான் சென்ஸ்... எனக்கிட்டயே அடுத்த தடவ நிறைய வாங்குறேன்று சொல்ற,  லஞ்சம் வாங்குறது தப்புன்னு தெரியாதா?  அந்த மூலையில போய் ஒரு ஐம்பது சிட் அப் செய், போலீசுல சேர்ந்தப்ப எக்ஸசைஸ் செஞ்சது... வச்சுக்கிறேன் உங்களுக்கெல்லாம்'   ஊரைவிட்டு போறதுக்குள்ள இந்த போலீஸ் குப்பைங்கள் முடிஞ்ச அளவிற்கு பெருக்கிவிட்டுத்தான் போகவேண்டும் என்று முடிவுக்கு வந்தான்.

இக்பாலின் சிட்அப் பனிஷ்மெண்டைக் கேட்டு கந்தசாமி ஆடிப்போய் விட்டான். இவர் என்ன விளையாட்டுக்கு சொல்றார அல்லது உண்மையிலேயெ சிட் அப் செய்ய சொல்றாரா என்று குழம்பி போய் நின்றான். ஏகாம்பரத்திற்கு வாய்விட்டு சிர்க்க வேண்டும் போல் இருந்தது.

‘யோவ் ஏகாம்பரம், இன்னைக்கு என்னய்யா தேதி’

‘இருபத்தஞ்சு சார், மாசக்கடைசி, அத நினைச்சாலே பயமாயிருக்கு.. சம்பளத்தை மட்டும் நம்பி குடும்பத்தை ஓட்ட முடியல’. ஏகாம்பரம் புலம்பினான்.

‘டிஎஸ்பி காலையில பேசினார்... ஏன்யா உன் ஏரியாவுல எல்லாரும் நல்ல மனுஷங்களா.. ஒரு கேஸ்கூட பதியலன்னார்’.. இக்பால்

‘அதான் சார்.. என் பொன்டாட்டியும் அதான் கேட்குறா... மச்சினிச்சிக்கு வேற வலைகாப்பு வருது’ ஏகாம்பரம் வருத்தத்துடன் சொன்னான்.

‘யோவ் நான் போலீஸ் ஸ்டேஷன பத்தி பேசுறன், நீ உன் குடும்பத்தைப் பத்தி புலம்பற’ இக்பால்.

‘சாரி சார்... ஏதோ பணக்கஷ்டத்துல பேசிட்டன்’ ஏகாம்பரம்  முடிக்க, கந்தசாமி எழுந்து வந்தான்.

‘என்னய்யா.. சிட்டப்ப முடிச்சுட்டிய’ இக்பால்

‘சார் நான் கணக்குல கரெக்டா இருப்பேன்.. ஐம்பது முடிச்சிடுச்சி’ கந்தசாமி.

சென்ட்ரி போலீஸ் வந்து சல்யூட் அடித்தான்.

என்ன என்பதுபோல் இக்பால் பார்க்க ‘சார்... உங்கள பாக்குறதுக்கு நாட்டாண்மை வந்துருக்கார்’

‘வரச்சொல்லு’ என்று சொல்லிவிட்டு அன்றைய நாளிதழை புரட்டினான்.

போலீஸ் டயரியில் அன்றையத் தேவைகளையும், கூடுதல் போலீஸ் கேட்டு அனுப்பிவைத்த கோரிக்கையையும் பதிவு செய்த ரைட்டர் ரத்தினம், இக்பாலின் கையெழுத்திற்காக அவரிடம் சமர்ப்பித்தார்.

நாட்டண்மை நல்லமுத்து வழக்கம்போல் தனது உடம்மையே தூக்க முடியாமல் வந்து எதிரில் அமர்ந்தார்.  கபடிப் போட்டியின் நிறைவுவிழாவை விவரித்தார்.  அமைதியாக கேட்டுக்கொண்டிருந்ததுபோல் வெளித் தோற்றத்தில் தெரிந்த்அ இக்பாலின் மனம் வேறு எங்கோ சுற்றிக் கொண்டிருந்தது.

‘இன்ஸ்பெக்டர் தம்பி, சாய்ந்தரம் நாலு மணிக்கு வந்து அழைச்சிக்கிட்டு போக வர்ரேன்’ என்றவரை உற்றுப் பார்த்த இக்பால் ‘இல்ல நாட்டண்மை, நான் வரல.. நீங்க வேற யாராவது ஊர்ப் பெரியவங்கள வச்சு பரிசுக் கொடுத்துக்குங்க’ என்று சொன்னான்.

‘ஏங்க சார்...’ நாட்டாண்மை அதிர்ந்துப் போய் கேட்டார்.
‘இல்ல, எனக்கு ஸ்டேஷன்ல வேலை இருக்கு’ என்று சொன்னவனை ஏகாம்பரம், ரைட்டர் ரத்தினம் இருவரும் வினோதமாய் பார்த்தனர்.

(தொடரும்)