வானத்தில் ஓர் வெள்ளிக் கீற்றின் வரவைக் கண்ட சேவல் வெளிச்சத்தின் வரவை உலகிற்கு பறை சாற்றியது. கதிரவனின் வரவை மகிழ்வுடன் வரவேற்கிறதா அல்லது மனிதர்களே உறங்கியது போதும், உங்கள் கடமைகளை செய்ய எழுந்திரியுங்கள் என்கிறதா என்று தெரியவில்லை. ஒரு சேவலில் தொடங்கி, அங்கங்கே இன்னும் சில சேவல்களும் சேர்ந்து கூவிக் கொண்டிருந்தன. முற்றத்தின் நடுவில் இயற்கை காற்றில் உறங்கிக் கொண்டிருந்த இக்பால் சேவலின் கூவலில் விழித்துக் கொண்டான். சூரியக் கிரணங்கள் இன்னும் மண்ணில் விழவில்லை என்பதை வெளிச்சத்திற்கு விடைசொல்லிக் கொண்டிருந்த அதிகாலை இருட்டு வெளிக்காட்டியது.
எழுந்தவன் மனதில் இன்று கபடிப் போட்டியின் கடைசி நாள் என்பது சொல்லாமல் கொள்ளாமல் உடனடியாக ஊடுருரிவிக் கொண்டது. கபடிப் போட்டியின் கடைசி நாளை நினைக்கையில் மனதில் என்னவோ ஒரு படபடப்பு தோன்றியது. எழுந்தவுடனேயெ மனம் பீதிக்குள்ளகியது. ஏதோ அடிதடிப் பிரச்சனைகள் உருவாகும் என்று மனம் லேசாக தடுமாறியது. பிடிக்காத விஷயங்கள் மனதில் புகுந்துக் கொண்டால அவைகள் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் போகிறது. அதிலும், மனம் சமநிலையில் இல்லை என்றால் கேட்கவே வேண்டாம். வேண்டாத கற்பனைகள், அதன் மூலம் உருவாகும் சிந்தனைத் தடுமாற்றங்கள், அதைத் தொடர்ந்து எல்லாமே பிரச்சனைகளாகவும், சிக்கல்களாகவும் மனதை மொய்த்துக் கொள்வதும், எல்லாவற்றையும் அதீதமாக உருவாக்கி மொத்தத்தில் இருக்கும் நிம்மதிகளையெல்லாம் கெடுத்துவிடுகிறது. மனதை கட்டுபடுத்த வேண்டும் என்று மனதிலிருந்தே இன்னுமொரு குரல் ஒலித்தது. எழுந்து அமர்ந்த இக்பாலுவிற்கு இறைவனை தொழவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. முஸ்லீமாக இருந்தாலும் ஐவேளை தொழுகைகளை முறைப்படி செய்வதில்லை. மனம் விரும்பியபோது செய்வதுடன் இறைவனுக்கும் தனக்கும் உள்ள உறவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. இத்தனைக்கும் சல்மா எல்லா தொழுகைகளையும் முறைப்படி அதற்குரிய நேரத்தில் செய்து விடுவாள். அதை நினைத்து அவ்வப்போது வெட்கப்பட்டாலும், தொழுகையை மனம் நாடுவது மிகவும் குறைவாகவே இருந்தது.
எழுந்து கைகால்களை கழுவி ஒலு செய்துவிட்டு காலை நேரத்து தொழுகையை செய்தான். இறைவணக்கத்தை முடித்து எழுந்த இக்பால் சற்று மனம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக நினைத்தான். அதிகாலை இறைவணக்கத்தில் ஏதோ ஓர் சிறப்பு இருக்கிறது. இரவிலிருந்த்து பகல் பிரிகின்ற இயற்கை மாற்றத்தினால் ஏதோ ஒருசில வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன அதனால்தான் அதிகாலை எப்போதும் மனதிற்கு அமைதியை தருகின்றது, அதிலும் காலை வணகக்கத்தை செய்யும்போது மகிழ்வாகத்தான் இருக்கின்றது. டி.எஸ்.பி விருதாச்சலத்திடம் பேசி கூடுதல் போலீஸ் பந்தோபஸ்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்தவனாய், உடல் பயிற்சி செய்யத் தயாரானான். வயல்வெளியில் வேலைக்குச் செல்லும் உழைப்பாளிகளின் நடைச் சத்தமும், கூடவே ஓட்டி செல்லும் காளை மாடுகளும், அதன் சலங்கை சத்தங்களும் உலகம் சுறுசுறுப்படைந்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தியது.
கம்பியூர் கிராமத்து மக்களின் வாழ்க்கையை நினைத்துப் பார்த்தபடி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். பெரும்பாலான மக்கள் விவாசயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றார்கள். வாழ்க்கையில் பெரிதாக எந்த கனவுகளும் இருப்பதாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்வதில்லையோ என்னவோ. இருப்பதைக் கொண்டு வாழ்கிறார்கள். மகிழ்ச்சியாகத்தான் செல்கிறது அவர்களது வாழ்க்கை. பக்கத்து வீட்டு சிறுவர்கள் எழுந்துவிட்டார்கள் என்பது அவர்களின் கொல்லைப்புற நடமாட்டத்தின் மூலம் புரிந்தது. அந்த சிறுவர்களுடன் எப்போதாவது பேச வேண்டும் என்று தோன்றும், ஆனால், அவர்கள் அருகில் வருவதே இல்லை. போலீஸ்காரன், போகவேண்டாம் என்று பெற்றவர்கள் பயமுறுத்தி வைத்திருக்கிறார்களோ என்னவோ.
கதவு தட்டும் ஓசை கேட்க உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு வெளியில் வந்தான். வயதான ஒரு கிழவர் நின்று கொண்டிருந்தார். 'இன்ஸ்பெக்டர் சார், வணக்கம்' என்ற அவரது மரியாதையான வார்த்தைகள் அவரை உள்ளே வரச்சொன்னது. 'உள்ள வாங்க பெரியவரே' என்று அழைத்தான்.
மெதுவாக படியேறி மேலெ வந்தவர் 'உங்கள நான் தம்பின்னு கூப்பிடலாமா' என்றார். சிரித்துக் கொண்டு தலையசைத்தான் இக்பால். 'என்ன விஷயம்' அமைதியாக கேட்டான்.
'உங்களப்பத்தி எல்லாரும் நல்லா பேசுறாங்க, இந்த ஊரு மக்களுக்கு உங்கள பிடிச்சுருக்கு, அதான் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்' கிழவர் நிறுத்தினார். இக்பால் எதுவும் பேசாமல் புன்னகைத்தப்படி இருந்தான். 'தம்பி, என் பேரு ஜெயராமன். நான் தமிழ் வாத்தியாரா இருந்தேன். இப்ப ஓய்வடைஞ்சு பத்து வருஷம் ஆவுது' நிறுத்தினார்.
இக்பாலுவிற்கு, இப்போதுதான் ஒரு நல்ல மனிதரை இந்த ஊரில் சந்தித்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. 'தம்பி உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்'. அமைதியானார். இக்பாலின் மனம் லேசாக படபடக்க ஆரம்பித்தது. இந்த ஊர்ல இருக்குறவங்கல்லாம் ஏதோ திகில் படத்துல வர்ர மாதிரிதான் பேசுறாங்க.
‘தம்பி நீங்க படிச்சவர், உங்களுக்கு இந்த திருக்குறள் தெரியும்னு நினைக்கிறேன்’. நிறுத்தினார் தமிழ் வாத்தியார். இக்பால் தனது அறியாமையை மறைக்க சற்று சிரமப்பட்டான். பண்ணிரண்டாம் வகுப்பில் படித்ததெல்லாம் எங்கே ஞாபகம் இருக்கும். அவ்வப்போது அரசு பேருந்தில் எழுதியிருப்பதைப் பார்த்து படிதததை ஞாபகம் செய்துகொள்வதோடு சரி.
‘பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார் பொருத்தளும் வல்லது அமைச்சு’ நிறுத்திவிட்டு இக்பாலைப் பார்த்தார். இக்பால் மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தான். நல்லமுத்து வரலாறு கற்றுக் கொடுத்தார். ஜெயராமன் திருக்குறள் கற்றுத் தருகிறார். மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவர் மேலும் என்ன சொல்லப் போகிறார் என்பதை கேட்க ஆவலானான்.
‘தம்பி’ தமிழ் வாத்தியார் தொடர்ந்தார் ‘பகைவர்களுக்கு துணையானவர்களை பிரித்தலும், தம்மிடம் உள்ளவர்களை காத்தலும், பிரிந்தவரை மீண்டும் சேர்த்தக் கொள்கின்ற வல்லமை கொண்டவன்தான் அமைச்சன்’ திருக்குறளின் தெளிவுரையைச் சொல்ல, இக்பால் நெற்றி சுருங்கியது. இந்த மனிதர் சாதரண விஷயத்தைச் சொல்லவில்லை. சூசகமாக கம்பியூரின் சூட்சமத்தை சொல்கின்றார் என்பது புரிய வந்தது. பிரச்சனை என்னவென்றால் நான் இந்த ஊருக்கு போலீஸ் அதிகாரியாக இருக்க தகுதி உள்ளவனா?
‘தம்பி நீங்க நல்லவரு’ யோசித்தவனின் மனதை தன் பக்கம் திருப்பினார் தமிழ் வாத்தியார். ‘ஆனா நல்லவனா இருந்தா மட்டும் வெற்றி கிடைக்காது.. வல்லவனாகவும் இருக்க வேண்டும். நான் புறப்படுறேன் தம்பி’ என்றவாறு எழுந்தார்.
‘அய்யா, உங்களுக்கு குடிக்கிறதுக்கு நான் ஒன்றும் தரலயெ’ என்றவனின் முகத்தைப் பார்த்து புன்முறுவல் செய்த ஜெயராமன் ‘பரவாயில்ல தம்பி’ என்றவாறு படியிறங்கினார். வீட்டின் கடைசிப் படியில் நின்றவர் சற்று நிதானித்து திரும்பினார். ‘தம்பி உங்கள மாதிரி ஒரு நல்ல அதிகாரி இந்த ஊருக்கு கிடைச்சது இந்த ஊரோட புண்ணியம், ஆனால் உங்களுக்கு நிறைய சிரமம். இந்த ஊருல நல்ல மனிதர்கள் நிறைய இருக்காங்க, உங்களுக்கு எல்ல உதவியும் அவங்க செய்வாங்க’ என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் நடந்தார். அவர் போவதை பார்த்துக் கொண்டிருந்த இக்பால்,
இந்த ஊர் விசித்திரமாக இருக்கிறதா அல்லது எனக்கு அப்படி தெரிகிறதா என்று யோசித்தவன் திருக்குறளுக்கான தெளிவுரையை ஆராயத் தலைப்பட்டான்.
மொபைல் ரீங்காரமிட்டது. ‘அப்துல் காதர்’ என்ற பெயர் தெரிய..காலையிலேயெ மாமா போன் செய்கிறாரே என்று நினைத்தபடி எடுத்தான்.
‘சலாம் அலைக்கும்’ அப்துல் காதர் மறு முனையில் பேசினார்.
‘அலைக்கும் வஸ்ஸலாம்’ பதில் சொன்னான்.
‘இக்பால்... ஃபிரியாத்தான இருக்க’
‘சொல்லுங்க மாமா’
‘உன் டிரான்ஸ்பர் விஷயமா பேசிட்டேன். இரண்டு சாய்ஸ் இருக்கு. ஒன்னு அறந்தாங்கி, இன்னொன்னு மயிலாடுதுறை. உனக்கு எதுன்னு சொல்லு, அங்க போஸ்டிங் வாங்கிடலாம்’ இக்பாலின் மனம் இப்போதுதான் மலரத் தொடங்கியது. ‘அப்பாடா...’ என்று ஒரு நிம்மதி மூச்சு வந்தது. கம்பியூரை விட்டு போவதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது என்று மனம் விசிலடிக்கத் தொடங்கியது.
‘என்னப்பா... சத்தமே இல்ல’ மாமனார் மறு முனையில் பேசினார்.
‘மாமா.. நாளைக்கு சொல்றேன், டயமிருக்குல்ல’
‘சொல்லலாம், சல்மாக்கிட்ட நான் இதுவரைக்கும் சொல்லல்ல.. நீயெ பேசிக்க’
‘சரி மாமா.. ஒன்னும் செலவு ஆகலியெ’
‘கண்டிப்பா இல்ல, நாளைக்கு போன் செய்’ என்று சொல்லிவிட்டு போன் அட்ங்கியது.
சல்மாவிடம் இனிமேல்தான் சொல்ல வேண்டும். அவளுக்குத் தெரிய வேண்டாம் என்று மாமாவிடம் மட்டும் பேசி வைத்திருந்தான். தெருவாசலில் வந்து நின்றான். எதிர் வீட்டுச் சுவற்றில் ‘மூன்று முகம்’ திரைப்பட போஸ்டர் ஒட்டியிருந்தது. ‘அவள் ஒரு தொடர்கதை’ முடிந்து இன்றிலிருந்து ரஜினியின் மூன்று முகம். கபடிப் போட்டியின் கடைசிநாள் என்பதால் ரஜினியின் படத்தை வெளியிட்டிருந்தது கம்பியூரின் டூரிங் தியேட்டர். ரஜினி போலீஸ் யூனிபார்மில் கம்பீரமாய் நின்று கொண்டிருந்தார். இக்பாலுவிற்கு சிரிப்பு வந்தது. நடிகர்களைப் பார்த்து போலீஸ் அதிகாரிகள் நடக்கிறார்களா அல்லது போலீஸ் அதிகாரிகளை மனதில் வைத்துக் கொண்டு நடிகர்கள் நடிக்கிறார்களா?
தெருவில் பம்பரம் விளையாட வந்த பக்கத்து வீட்டு சிறுவர்கள் இக்பாலைப் பார்த்ததும் வேகமாக வீட்டுக்குள் ஓட எத்தனிக்க ‘டேய்... நில்லு’ என்று சத்தமிட்டான். ஓட நினைத்தவர்கள் பயந்து நிற்க ‘இங்க... வாங்கடா’ என்று அழைத்தான். இக்பாலின் குரல் கேட்டு சிறுவர்களின் தாய் மெதுவாக எட்டிப் பார்த்தாள்.
‘என்னடா படிக்கிறீங்க’ கேட்டான். ஒருவன் இன்னொருவனைப் பார்த்துக் கொண்டு எந்த பதிலும் சொல்லாமல் நிற்க...’சொல்லு சுரேஷ்’ என்ற அவளின் தாயின் சத்தம் கேட்டது.
‘நாலாவது படிக்கிறோம்’ என்று ஒரு சேர சொன்னார்கள்.
‘ரெண்டு பேரும் நாலாவதா’ கேட்டான்.
‘ஆமாம்’ என்று சொல்லிவிட்டு திடுதிடுவென உள்ளே ஓடினார்கள்.
‘ரெண்டு பேரும் ரெட்டைக் குழந்தங்க... சார்’ என்றவாறு சிறுவர்களின் தாய் சற்று வெளியில் வந்தாள்.
‘நல்லா படிக்க வைங்க’ என்று சொல்லிவிட்டு இக்பால் உள்ளே சென்றான்.
சில்லென்ற கிணற்று நீரை தலையில் கொட்டி உடம்பில் ஒளிந்திருந்த வெப்பத்தை வெளியேற்றினான் இக்பால். கிணற்று நீர் இன்றைக்குத்தான் குளிர்ச்சியாகத் தெரிந்தது. இதுநாள்வரை கிணற்றுக் குளியலை வேண்டா விருப்பாக செய்தவன் இன்றைக்கு மிகவும் ரசித்துக் குளித்தான். கிணற்றில் நீர் இரைத்துக் குளிப்பதும் ஒருவிதமான உடல் பயிற்சிதான், அதிலும் நிலத்தடி நீருக்கு இருக்கும் புத்துணர்ச்சி, முனிசிபாலிட்டி நீரைவிட அதிகம்தான்.
வாசலில் ஜீப் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இன்றைக்கு என்னவோ யூனிபார்ம் போட மனம் நாடவில்லை. கால்சட்டையும், அரைக்கை சட்டையும் அணிந்தவன் போலீஸ் டிரைவர் சந்தானம் வாங்கி வந்த காலை இட்டலி கேரியரைத் திறந்து வழக்கம்போல் சாப்பிட ஆரம்பித்தான். சல்மா இருந்தால் விதவிதமான காலை உணவு கிடைக்கும். அவள் சமையலில் கெட்டிக்காரி. என்னதான் அவளிடம் கோபம் கொண்டு திட்டினாலும், கணவணுக்கு விதவிதமாக சமைத்துத் தருவதை மட்டும் ஒரு போதும் நிறுத்தியதில்லை. மனைவி அருகில் இல்லாத போதுதான் அவளின் மகத்துவம் புரிகிறது.
வாசலில் வந்து நின்றவன் ஜீப்பைச் சுற்றி அதை தொட்டும் தடவியும் ரசித்துக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டு சிறுவர்களைப் பார்த்தான். ஒருவனின் பெயர் சுரேஷ் என்றால் இன்னொருவனின் பெயர் ரமேஷாகத்தான் இருக்கும்.
இரட்டையர்கள் என்றால் பொதுவாக இப்படித்தான் பெயர் வைப்பார்கள் என்று நினைத்தவன் ‘ரமேஷ்’ என்று அழைக்க இரட்டையர்கள் இருவரும் வெடுக்கென திரும்பி நின்றார்கள். சிரித்தபடி ஜீப்பை நோக்கி இக்பால் நடக்க சிறுவர்கள் இருவரும் மெதுவாக தன் வீட்டுத் திண்ணையில் ஏறி நின்றனர்.
போலீஸ் ஜீப் இக்பாலை சுமந்துக் கொண்டு மெதுவாக நகர்ந்தது.
ஏட்டு ஏகாம்பரம் இன்ஸ்பெக்டர் நாற்காலியில் உட்கார்ந்து சிகரெட் ஊதிக் கொண்டிருந்தார். ஏகாம்பரத்திற்கு அவ்வப்போது இன்ஸ்பெகடர், சப் இன்ஸ்பெக்டர் நாற்காலிகளில் அமர்ந்துப் பார்ப்பதில் ஒரு அலாதியாக சந்தோஷம். பக்கத்தில் கான்ஸ்டபிள் கந்தசாமி நின்று கொண்டு ஏகாம்பரத்தின் கற்பனையில் தானும் சேர்ந்துகொண்டு என்றைக்காவது சப் இன்ஸ்பெக்டர் ஆகவேண்டும் என்று தானும் மிதக்க ஆரம்பித்தான். வாசலில் வந்து நின்ற இக்பாலை இருவருமே கவனிக்கவில்லை. சற்று நேரம் நின்று இருவரையும் பார்த்த இக்பால் மெதுவாக உள்ளே வர கந்தசாமி வேகமாக சல்யயூட் அடிக்க ஏகாம்பரம் சிகரெட்டை அருகில் போட்டுவிட்டு எழுந்து தானும் சல்யூட் அடித்தார்.
'என்னய்யா இது' இக்பால் கேட்டபடி எதிரில் நின்றான்.
'இல்ல சார் வரப்போற புரமோஷனுக்கு சும்மா உட்கார்ந்து பீல் பண்ணி பார்த்தேன்' ஏட்டு சீரியசாகவே பதில் சொன்னார்
'எப்ப வரப்போவுது?'
'அஞ்சு வருஷத்துல எப்படியும் வந்துடும் சார்' ஆர்வமாக சொன்னார் ஏகாம்பரம்
'இன்னும் அஞ்சு வருஷத்துல.. ஊம்... அதுக்கு இப்பவே' இக்பாலின் கேள்வி ஏகாம்பரத்தை நிதானிக்க வைத்தது.
'ஆமாம் சார்...' ஏகாம்பரத்திற்கு வார்த்தை இழுக்க ஆரம்பித்தது.
'எப்படியும் உனக்கு கண்டிப்பா சாவு வரத்தான் போகுது... இப்பவே ஒரு சவப் பெட்டியில படுத்து பாக்கறியா'
'சாரி சார், இனிமே செய்யமாட்டேன்' பதிர்ந்து பதிலளித்தார் ஏட்டு
'போய் குடிக்கிறதுக்கு தண்ணீ எடுத்துட்டு வா' அப்பன் எப்ப சாவுவான் திண்ணை எப்ப காலியாகும்னு அலையறானுங்க, மனதிற்குள் நினைத்தவனாய் நாற்காலியை நோக்கி நடந்தான்.
ஏட்டு கந்தசாமியைப் பார்த்து 'ஏன்யா நிக்கிற.. சீக்கிரம் போய் எடுத்துட்டு வாய்யா!' என்று சத்தமிட்டார்.
'ஏட்டு உன்னதான் சொன்னேன்... ஏன் நீ செய்ய மாட்டியா..' இக்பால் எரிச்சலாகவே கேட்டான். ஏகாம்பரத்திற்கு அவமானமாய் தோன்றியது. ஏட்டு கந்தசாமியை முறைத்தபடி நகர்ந்தார்.
இக்பால் நாற்காலியை நோக்கி நகர கந்தசாமியும் நகர இக்பாலுக்கு வழி போதவில்லை. கந்தசாமி மறு பக்கம் நகர்ந்தான். இக்பாலும் கநதசாமியும் மாற்றி மாற்றி நகர, இக்பாலுவிற்கு இது என்னடா காலையிலேயெ காமெடி என்று நினைத்தவனாய்.
'கான்ஸ்டபிள்... நகர்ந்து தொலையேன்யா!' என்று சத்தமிட்டான்.
கந்தசாமி 'நகர்ந்துதான் சார் இருக்கிறேன்' என்று சொல்ல 'நீ நகர்ந்துதான் இருக்கிற, உன் தொப்பையும் நக்ர்ந்துய்யா' என்று இக்பால் சத்தமிட கந்தசாமி நகர்ந்து வழி விட்டான்.
ஏட்டு தண்ணீர் கிளாசை கொடுத்துவிட்டு அமைதியாக நின்றார்.
இக்பால் கந்தசாமியை அழைத்தான் 'கான்ஸ்டபிள் வாய்யா இங்கே'
'சார்'
'எத்தனை வருஷமா சர்வீசுல இருக்கிற'
'பத்து வருஷமா சார்' கந்தசாமி பதில் சொன்னான்.
'பத்து வருஷத்திலேயே இவ்வளவு பெரிய தொப்பையா உனக்கு'
'அது குடும்ப பாரம்பரியம் சார்' சிரித்தபடி சொன்னான் கந்தசாமி
'எது, பிச்சைக்காரன்கிட்ட ல்ஞ்சம் வாங்குறதா'
'சார் அது... அவன் பிளாட்பார்ம்ல உட்கார்ந்துகிட்டு...பொற வர்ர பொண்ணுங்கள சைட் அடிச்சிக்கிட்டு இருந்தான்'
'அதும் பத்து ரூபா .. வெட்கமாயில்ல'
'இனிமே அதிகமா வாங்குறன் சார்' அவன் எதார்த்தமாக சொல்கிறானா அல்லது வேண்டுமென்றே சொன்னான என்று இக்பாலுவிற்கு புரிந்துக் கொள்ளமுடியவில்லை.
'நான் சென்ஸ்... எனக்கிட்டயே அடுத்த தடவ நிறைய வாங்குறேன்று சொல்ற, லஞ்சம் வாங்குறது தப்புன்னு தெரியாதா? அந்த மூலையில போய் ஒரு ஐம்பது சிட் அப் செய், போலீசுல சேர்ந்தப்ப எக்ஸசைஸ் செஞ்சது... வச்சுக்கிறேன் உங்களுக்கெல்லாம்' ஊரைவிட்டு போறதுக்குள்ள இந்த போலீஸ் குப்பைங்கள் முடிஞ்ச அளவிற்கு பெருக்கிவிட்டுத்தான் போகவேண்டும் என்று முடிவுக்கு வந்தான்.
இக்பாலின் சிட்அப் பனிஷ்மெண்டைக் கேட்டு கந்தசாமி ஆடிப்போய் விட்டான். இவர் என்ன விளையாட்டுக்கு சொல்றார அல்லது உண்மையிலேயெ சிட் அப் செய்ய சொல்றாரா என்று குழம்பி போய் நின்றான். ஏகாம்பரத்திற்கு வாய்விட்டு சிர்க்க வேண்டும் போல் இருந்தது.
‘யோவ் ஏகாம்பரம், இன்னைக்கு என்னய்யா தேதி’
‘இருபத்தஞ்சு சார், மாசக்கடைசி, அத நினைச்சாலே பயமாயிருக்கு.. சம்பளத்தை மட்டும் நம்பி குடும்பத்தை ஓட்ட முடியல’. ஏகாம்பரம் புலம்பினான்.
‘டிஎஸ்பி காலையில பேசினார்... ஏன்யா உன் ஏரியாவுல எல்லாரும் நல்ல மனுஷங்களா.. ஒரு கேஸ்கூட பதியலன்னார்’.. இக்பால்
‘அதான் சார்.. என் பொன்டாட்டியும் அதான் கேட்குறா... மச்சினிச்சிக்கு வேற வலைகாப்பு வருது’ ஏகாம்பரம் வருத்தத்துடன் சொன்னான்.
‘யோவ் நான் போலீஸ் ஸ்டேஷன பத்தி பேசுறன், நீ உன் குடும்பத்தைப் பத்தி புலம்பற’ இக்பால்.
‘சாரி சார்... ஏதோ பணக்கஷ்டத்துல பேசிட்டன்’ ஏகாம்பரம் முடிக்க, கந்தசாமி எழுந்து வந்தான்.
‘என்னய்யா.. சிட்டப்ப முடிச்சுட்டிய’ இக்பால்
‘சார் நான் கணக்குல கரெக்டா இருப்பேன்.. ஐம்பது முடிச்சிடுச்சி’ கந்தசாமி.
சென்ட்ரி போலீஸ் வந்து சல்யூட் அடித்தான்.
என்ன என்பதுபோல் இக்பால் பார்க்க ‘சார்... உங்கள பாக்குறதுக்கு நாட்டாண்மை வந்துருக்கார்’
‘வரச்சொல்லு’ என்று சொல்லிவிட்டு அன்றைய நாளிதழை புரட்டினான்.
போலீஸ் டயரியில் அன்றையத் தேவைகளையும், கூடுதல் போலீஸ் கேட்டு அனுப்பிவைத்த கோரிக்கையையும் பதிவு செய்த ரைட்டர் ரத்தினம், இக்பாலின் கையெழுத்திற்காக அவரிடம் சமர்ப்பித்தார்.
நாட்டண்மை நல்லமுத்து வழக்கம்போல் தனது உடம்மையே தூக்க முடியாமல் வந்து எதிரில் அமர்ந்தார். கபடிப் போட்டியின் நிறைவுவிழாவை விவரித்தார். அமைதியாக கேட்டுக்கொண்டிருந்ததுபோல் வெளித் தோற்றத்தில் தெரிந்த்அ இக்பாலின் மனம் வேறு எங்கோ சுற்றிக் கொண்டிருந்தது.
‘இன்ஸ்பெக்டர் தம்பி, சாய்ந்தரம் நாலு மணிக்கு வந்து அழைச்சிக்கிட்டு போக வர்ரேன்’ என்றவரை உற்றுப் பார்த்த இக்பால் ‘இல்ல நாட்டண்மை, நான் வரல.. நீங்க வேற யாராவது ஊர்ப் பெரியவங்கள வச்சு பரிசுக் கொடுத்துக்குங்க’ என்று சொன்னான்.
‘ஏங்க சார்...’ நாட்டாண்மை அதிர்ந்துப் போய் கேட்டார்.
‘இல்ல, எனக்கு ஸ்டேஷன்ல வேலை இருக்கு’ என்று சொன்னவனை ஏகாம்பரம், ரைட்டர் ரத்தினம் இருவரும் வினோதமாய் பார்த்தனர்.
(தொடரும்)
No comments:
Post a Comment