‘சார், டி எஸ் பி ஆபீசிலருந்து மெசேஜ் வந்திருக்கு சார்’ ரத்தினம் சொல்லிக்கொண்டே வந்து நின்றார்.
‘என்ன மெசேஜ்’ இக்பால்
‘கூடுதல் போலீஸ் படை அனுப்ப முடியாதாம்’ ரத்தினம் சொல்ல இக்பாலின் முகம் சுருங்கியது. ‘என்ன காரணாமாம்’ இக்பால் சற்று எரிச்சலுடன் கேட்டான்.
‘திடீருன்னு எதுவும் ஏற்பாடு செய்ய முடியாது, எஸ்.பி. டூருல இருக்காருன்னு சொல்றாங்க.
‘என்னய்யா... இந்த சால்சாப்பு, அவசரத்துக்குத்தான போலீஸ்’ எழுந்து நின்றான் இக்பால்.
‘சார்.. நான் ஒன்னு சொல்லட்டுமா’ ரத்தினம் இழுத்தார். இக்பால் அவரை ஏரிட்டுப் பார்த்தான்.
‘எப்பவும் இந்த ஊருல எந்த திருவிழா நடந்தாலும் ஒன்னு சப் இன்ஸ்பெக்டர் லீவுல போயிடுவார் இல்லன்னா, நமக்கென்னன்னு தண்ணியடிச்சுட்டு எங்காவது யாருக்கும் தெரியாம தூங்க போயிடுவார்...’ இழுத்தார் ரத்தினம்.
‘இப்ப என்ன, என்ன தண்ணியடிச்சுட்டு தூங்க சொல்றியா’
‘சார்... பழக்கம் இல்லன்னா.. லீவு போட்டிடுங்க’
‘போன வருஷம் இரண்டு பேர் செத்திருக்காணுங்க, இந்த வருஷமும் நாலு பேரும் சாவுணுமா?’ இக்பால் சொல்லி முடிக்குமுன் ஏகாம்பரம் வந்து நின்றார்.
‘சார்.. நம்பளால சமாளிக்கமுடியலன்னா ஒதுங்கிக்கிறதுதான் நல்லது’ ஏகாம்பரமும் ரத்தினத்துடன் சேர்ந்துக் கொண்டார்.
‘அப்புறம் எதுக்குய்யா நம்பள்லாம் போலீஸ், ஒரு போலீஸ் ஸ்டேஷன்’
‘சார் முன்னாலயே ரிக்கஸ்ட் அனுப்பியிருக்கணும்’ ரத்தினம் கேட்டு வைக்க, இக்பால் அமைதியானான். நம்பதான் தப்பு பண்ணிட்டோம் என்ற உணர்வு தோன்றியது. பிடிக்காத காரணத்துணால கவனமில்லாம இருந்துவிட்டோம் என்று நினைத்தவன், சரி என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.
‘ரூம் கதவ சாத்திட்டு வந்து ரெண்டுபேரும் உட்காருங்க’ என்று சொல்ல, ஏகாம்பரமும் ரத்தினமும் கேள்விக்குரியுடன் வந்து அமர்ந்தனர். இக்பால் சொல்ல சொல்ல இருவர் முகத்திலும் ஈயாடவில்லை. ‘ஏன் இந்த மனுஷன் இப்படி கவலைப்பட்டு திட்டம் போடறான். எவன் அடிச்சுக்கிட்டு செத்தா நமக்கென்ன, செத்துப்போன ரிப்போர்ட் எழுதி கேசை முடிச்சுட்டு போக வேண்டியதுதான’ என்று இருவருமே ஒரு சேர நினைத்தனர். தான் சொல்வதை வெறும் சுரத்தை இல்லாமல் முகம் வெளிரிப்போய் கேட்டுக் கொண்டிருக்கும் இருவரையும் பார்த்தபடி பேசியவனின் மனதில், வேறு வழியில்லை, இருக்கின்ற ஆட்களை வைத்து முடிந்தவரை பிரச்சனை இல்லாமல் சமாளிக்க வேண்டும் என்று தனது திட்டத்தை சொல்லி முடித்தான்.
இளம் வயசு என்று நினைத்தபடி இரண்டு போலீஸ் முதியவர்களும் எழுந்து நின்று சல்யூட் அடித்தனர்.
மதிய உணவை வீட்டிற்கு வரச்சொல்லி முடித்துவிட்டு போலீஸ் உடைக்கு மாறினான். பீரோவில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அதன் உள்ளே உள்ள ரவைகளை சரிபார்த்து இடுப்பு பட்டையில் செருகிக் கொண்டபடி வெளியே வந்தான்.
சந்தானம் ஜீப்பை நகர்த்த ‘இன்னும் ரெண்டு மணி நேரத்துல சுத்தி இருக்குற எட்டு கிராமத்தையும் ஒரு ரவுண்டு வந்துடனும்’ என்று ஆணையிட சந்தானம் தலையாட்ட பின்னால் அமர்ந்திருந்த நான்கு போலீஸ் கான்ஸ்டபிள்களும் ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தனர். போட்டி நடக்கும் இடத்திற்கு நான்கு கான்ஸ்டபிள்களை குண்டில்லாத துப்பாக்கிகளுடன் அனுப்பி வைத்து ஊரில் கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தி பொதுமக்களை பீதி கொள்ளும்படி செய்தான்.
‘இது என்ன ஊர்’ ஜீப்பில் பயணித்தபடி கேட்டான். கரடு முரடாக கப்பிக் கற்களுடன் இருந்தது பாதை.
‘சார் இது கத்தியூர்’ சந்தானம் பதிலளித்தான்.
‘இந்த ஊர்ல எவன் பெரிய ரவுடி’ இக்பால் கேட்டான்.
‘காளிதாசன் சார்’ சந்தானம்.
‘ரவுடிதான் ஊர் தலைவனா’ இக்பால்
‘ஆமாம்’ சந்தானம்
‘அவனுக்கு அடுத்தது யார்’ இக்பால்
‘காளிதாசனோட மச்சினன் ராமலிங்கம் சார்’ இக்பால்
வீட்டுவாசலில் போலீஸ் ஜீப் வந்து நிற்பதைப் பார்த்த ராமலிங்கத்தின் மனைவி பதறியடித்தபடி வந்து நின்றாள்.
இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் தலை முதல் கால்வரை தடபுடவென ஆடிக்கொண்டு நின்றாள். இது நாள்வரை அவ்வப்போது ஏதாவது ஒன்றிரண்டு போலீஸ்காரர்கள் மப்டியில் வந்து போவதுதான் வழக்கம், இன்றைக்கு என்ன நேர்ந்தது என்று புரியாமல் வேர்த்து விறுவிறுத்து நின்றாள்.
‘ஒன் புருஷன் எங்க’ ஜீப்பினுள் அமர்ந்தபடியே கேட்டான்.
‘வயலுக்கு தண்ணி பாச்ச போயிருக்கார்’ மெண்டு விழுங்கி சொன்னாள்.
‘தண்ணி பாச்சவ, இல்ல தண்ணி அடிக்கவா?’ அதட்டலாக கேட்டான்.
‘இல்லங்கய்யா..’
‘ஒன் புருஷன உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லு, இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க இருக்கனும், வரல... ஒரு வாரத்துக்கு சப் ஜெயில்லதான் கஞ்சி குடிக்கனும்னு சொல்லு, எடுய்ய ஜீப்ப’ தெருவெல்லாம் கேட்கும்படி மிரட்டிவிட்டு நகர்ந்தான்.
கிட்டதட்ட எட்டு ஊரையும் ஒரு சுற்று முடித்துவிட்டு எல்லா கிரமங்களிலும் செயற்கையான பீதியை உருவாக்கிவிட்டான் இக்பால். கபடிப் போட்டியின் இறுதி ஆட்டத்தைவிட இக்பாலின் இந்த செயல்தான் எல்லா மக்களிடமும் பேச்சாக இருந்தது. அவரவர்களுக்கு தெரிந்த கதையை கண்ணும் காதும் வைத்து ஒலி பரப்பு செய்துகொண்டிருந்தார்கள். இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றிருந்த கொலையூர் மற்றும் ஈட்டியூர் அணி ஊர் மக்கள் எல்லோரும் மீசையை முறுக்கிக் கொண்டு இன்றைக்கு ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் என்று வீர முழக்கம் செய்தவர்கள் மத்தியில் எதற்காக இன்ஸ்பெக்டர் இப்படி ஊர் ஊராக சுற்றி இரண்டாம் மட்ட தலைவர்கள் எல்லோரையும் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அணி வகுக்க வைத்துவிட்டான் என்று புரியாமல் இருந்தனர்.
இக்பால் சுற்று முடித்து வரவும், காவல் நிலையத்தின் வெளியில் நல்ல கூட்டமும் கூடிவிட்டது. பக்கத்தில் இருந்த முருகன் டீக்கடைக்கு நல்ல வருமானம். டீயும் வடையும் விற்று மாளவில்லை. புண்ணியவான், இப்படி வாரத்துக்கு ஒரு தடவ, ரவுண்ட் வந்தா நமக்கும் நல்ல வியாபாரம் ஆகும், ஓசியில டீக்குடிச்சுக்குட்டு இருக்குற போலீஸ் தொப்பைங்க மத்தியில வருமானம் இல்லாம என்னவோ விதியென்று இருந்த முருகனுக்கு இன்றைக்கு நல்ல மகிழ்ச்சி.
ஜீப்பைவிட்டு இறங்கிய இக்பால் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தன். ஊருக்கு ரெண்டு பயலுங்க வந்தா பத்தாதுன்னு, ஊரே கூடி வந்திருக்கு என்று நினைத்தவனாய் எல்லோரையும் நின்று முறைத்துப் பார்த்தான்.
அறைக்குள் நுழைந்தவன் ‘யோவ் ரத்தினம்’ என்று சத்தமிட வேகமாக வந்து நின்றார். ‘ஒவ்வொருத்தனா வரச்சொல்லு, கதவ சாத்திட்டு போ’ என்று சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தான்.
ஒவ்வொரு ஊர் அடங்காபிடாரிகளும் பவ்யமாக வந்து நிற்க, உள்ளே என்ன பேசினான் என்று வெளியெ யாருக்கும் தெரியவில்லை. ஆனால் வெளியெ வந்தவர்கள் அனைவரும் வியர்த்துப் போய் வந்தது, உள்ளெ என்னவோ முக்கியமாக நடந்திருக்கிறது என்பது மட்டும் தெரிந்திருக்க, வெளியெ வந்தவர்கள் சத்தமில்லாமல் தத்தம் கூட்டத்துடன் கலைந்து சென்று கொண்டிருந்தனர்.
ஒவ்வொருவராக தனியாக அழைத்து அவர்கள் கபடிப் போட்டியில் கலவரம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக செய்தி வந்துள்ளதாகவும், அப்படி ஏதாவது நடந்தால் முட்டிக்கு முட்டி தட்டுவது மட்டுமல்லாமல் மண் கொட்டரையில் கஞ்சிக் குடிக்க அனுப்பிவிடுவேன் என்ற செய்தியை போலீசுக்கே உரிய பாணியில் அடிக்காத குறையாக அவரவர்கள் தலையில் ஏற்றி அனுப்பி வைத்தான். வெளியில் வந்த எட்டு ஊர் ரவுடிகளும் எவன் நம்மள போட்டுக் குடுத்தான் என்று தனக்குள்ளே வினவியபடி கபடிப் போட்டியில் மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர். கையில் துப்பாக்கியுடன் அங்கங்கே கதை பேசிக் கொண்டிருந்த போலிசுகளைப் பார்த்ததும் ‘விஷயம் கொஞ்சம் விறுவிறுப்பாகத்தான் இருக்கு’ என்பதை உணர்ந்தனர். நாட்டன்மை நல்லமுத்துவிற்கு விஷயம் புரியவில்லை என்றாலும் என்னவோ இன்ஸ்பெக்டர் அவரிடம் மட்டும் இந்த போலீஸ் பாதுகாப்பை முன்கூட்டியே ஆலோசனை செய்ததுபோல் விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.
மைதானத்தின் அருகில் இருந்த விநாயக டூரிங் டாக்கிஸ் பல வண்ணக் காகிதக் கொடிகளிலும், வாழைமரம், மாவிலை, தென்னங்குருத்து தோரணங்களினால் ரஜினி காந்தின் மூன்று முகம் படத்தின் முதல் நாள் கலை கட்டிக் கொண்டிருந்தது. ரஜினி ரசிகர்கள் எல்லொரும் அவரவர்களுக்கு வந்த ஸ்டையில் உடையணிந்து மைதானத்தை சுற்றி வந்துக் கொண்டிருந்தனர்.
கொலையூர், ஈட்டியூர் அணி வீரர்களும் அவர்களது ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் எதிரிகள் போல் பார்ப்பதும், கேலி செய்வதும், முறைப்பதுமாக இருந்தனர். ஈட்டியூர் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்திருப்பது அவர்களுக்கு பெரும் சாதனையாகத் தெரிந்தாலும், கொலையூர் அணி முதல் முறையாக இறுதி ஆட்டத்திற்கு வந்திருப்பது அவர்களுக்கு மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்திவிட்டது. கொலையூர் கோடாரி செல்லப்பனும், ஈட்டியூர் இளங்கோவும் நீண்ட கால எதிரிகள். முதன் முதலாக இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவது பெரும் மானப்பிரச்சனையாகிவிட்டது. கொலையூர் அணி எவ்வித தோல்வியும் அடையாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பது கோடாரி செல்லப்பனுக்கு என்னவோ இரண்டு சாரயக்கடையை ஏலத்தில் எடுத்து வெற்றிப் பெற்றது போல் மோட்டர் சைக்கிளில் பவனி வந்துக் கொண்டிருந்தான். இரண்டு அணிகளும் தத்தமது ஊர் மானத்தை காப்பாற்றியாக வேண்டும் என்று முனைப்புடன் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தனர்.
ஈட்டியூர் மூன்றவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருப்பதால், ஊர் முழுவதும் கிடா வெட்டி விருந்து படைக்க திட்டமிட்ட ஈட்டியூர் இளங்கோ அக்கம் பக்கத்தில் மேய்ந்துக் கொண்டிருந்த பத்து கிடாக்களை கடத்தி கொண்டு வந்து பட்டரையில் அடைத்து விட்டான். அதில் நான்கைந்து ஆடுகள் கத்தியூர்காரர்களுக்கு சொந்தமாக இருக்க அந்த ஊர் மக்கள் காலையிலெயே போலீஸ் ஸ்டேஷனில் முற்றுகையிட ஏட்டு ஏகாம்பரம் இன்ஸ்பெக்டர் காதில் இப்போது சொல்ல வேண்டாம் என்று தடுத்து வைத்தார். ஏற்கனவெ ஆடு மாடு பிரச்சனையை தீர்க்கவா இன்ஸ்பெக்டர் ஆனோம் என்று எரிச்சலுடன் இருக்கும் அவரிடம் சொன்னால், மனுஷன் இன்னும் டென்ஷன் ஆயிடுவார் என்று அடக்கி வைத்திருந்தார். போட்டி முடிந்தபின் இளங்கோவிடம் பேசி ஏதாவது ஒரு தொகையை வாங்கி சொந்தக்காரர்களிடம் கொடுத்துவிடலாம் என்று கத்தியூர் ஆட்களை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டார்.
தாரை தம்பட்டம் முழங்க கோடாரி செல்லப்பன் பெரிய கூட்டத்துடன் வந்து சேர்ந்தான். ஈட்டியூர் இளங்கோ ஏற்கனவே மைதானத்தில் இருக்க, இரண்டு தலைவர்களும் தத்தமது அணி வீரர்களுக்கு வீர வசனம் பேசி உற்சாகம் கொடுக்க ஆரம்பித்தனர். மேடையில் மற்ற ஊர் தலைவர்கள் எல்லாம் வெள்ளை வேட்டி துண்டு சகிதமாய் அமர்ந்திருக்க, நடுவில் வள்ளியூர் வடிவுக்கரசி மட்டும் பட்டத்து ராணி போல் அமர்ந்திருந்தாள். இக்பால் வராதது அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இக்பால் வந்தால், அவனும், ஊர் நாட்டன்மையும், இன்னும் ஏதாவது பெரிய தலைகள் ஒன்றிரண்டு மட்டும் மேடையில் இருப்பார்கள். நல்லமுத்து மட்டும் எரிச்சலுடன் உட்கார்ந்த்திருந்தார். ஒலி பெருக்கியில் சினிமா பாடல்கள் மைதானத்தையே கிழித்துக் கொண்டிருக்க, சின்னஞ்சிறுசுகள், பாவாடை தாவணி சிட்டுகள், அவர்களின் பின்னால் சிகெரட்டும் கையுமாக உலாவரும் இளைஞர் பட்டாளம், இந்தக் கூட்டத்தைப் பார்த்து இதயம் அடித்துக் கொள்ளும் பெற்றோர்கள் என்று மைதானம் களைக் கட்டியது. நான்கு மணிக்கே போட்டியை தொடங்கச்சொல்லி இன்ஸ்பெக்டர் உத்தரவு, ஆனால் ஈட்டியூர் இளங்கோவும், கொடாரி செல்லப்பாவும் இன்னும் தனது பிரசங்கத்தை முடிக்கவில்லையே என்று நல்லமுத்துவிற்கு வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்துக் கொண்டிருந்தது.
பெட்டி ஐஸ், ஜவ்வு மிட்டாய், சுண்டக் கடலை, இளநீர், சர்பத் ஸ்டால், அல்வா, காரப் பூந்தி என்று மைதானம் முழுவதும் அங்கங்கே வியாபரம் சுறுசுறுப்பாக நடந்துக் கொண்டிருந்தது. சீக்கிரம் போட்டிய நடத்தி தொலைங்கடா என்று சினிமாக் கொட்டகை முதலாளி புரஜக்டர் அறையில் நின்று கொண்டு பொருமிக் கொண்டிருந்தார்.
லத்தியும் கையுமாக ஏழெட்டு போலிசுகளுடன் ஏட்டு ஏகாம்பரம் வந்து சேர, நல்லமுத்து போட்டியை ஆரம்பிங்கய்யா என்று சத்தம் போட ஆரம்பித்தார்.
கம்பியூர் உயர் நிலைப் பள்ளியின் விளையாட்டு வாத்தியார் பாலு விசிலடிக்க இரண்டு அணிகளும் பதமாக தண்ணீர் தெளித்து குளிர்விக்கப்பட்ட மணல் அரங்கில் பலத்த கரகோஷத்துடனுன் பிரவேசித்தனர். அணி வீரர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி ஒலி பெருக்கியில் அறிமுகப்படுத்த, விளையாட்டு வீரர்களின் மனதில் சூடு பிடிக்க ஆரம்பித்தது. போட்டி வர்ணனையாளர்கள் தங்களது பணியைத் தொடங்க, சூடம் ஏற்றி, ஆராதனை செய்து போட்டியைத் தொடங்கும் ஆனை பிறப்பித்தார் உள்ளூர் பூசாரி.
போட்டி விறுவிறுப்பாகவே தொடங்கியது. இரண்டு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் இளைத்தவர்கள் இல்லை என்பது போல் எதிரணி களங்களில் நன்றாகவே வீடு கட்டி வலம் வந்தார்கள். புள்ளிகள் பெரும்பாலும் சமமாகவே முன்னெற பார்வையாளர்கள் எல்லோரும் உலகையே மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இளங்கோவும் செல்லப்பனும் இரு பக்கத்திலும் நின்று கொண்டு மாறி மாறி கத்திக் கொண்டிருந்தனர். இரு அணிகளும் விடாப்பிடியாக எதிரணி வீரர்களை மடக்கிப் பிடித்து புள்ளிகளை குவித்துக் கொண்டிருந்தனர். முதல் சுற்றில் ஈட்டியூர் வெற்றி பெற, கொலையூர் பக்கத்தில் இறுக்கம் அதிகமானது. செல்லப்பனும், இளங்கோவும் ஒருவரை ஒருவர் சண்டைக் கோழிப் போல் பார்க்க ‘என்னட முறைக்கிற’ என்ற சத்தம் எங்கிருந்தோ வர, திடீரென்று இருவரும் தோள் துண்டை கையில் எடுத்துக் கொண்டு ‘என்னடா சொன்ன’ என்பது போல் நெருங்க, அருகில் இருந்தவர்கள் இடையில் புகுந்து சலசலப்பை சமாளித்தனர்.
இரண்டாவது சுற்று முதல் சுற்றைவிட இன்னும் உக்கிரமடைந்தது. ஈட்டியூர் வீரன் ஒருவனின் பனியன் கிழிய, மீண்டும் ஒரு சலசலப்பு உருவாகி கிட்டத்தட்ட அடித்துக் கொள்ளுமளவிற்கு வந்து நிற்க, ஏட்டு ஏகாம்பரம் தலையிட்டு சமாதானப்படுத்தி வைத்தார். இரண்டாவது சுற்றில் கொலையூர் வெற்றி பெற, நிலைமை இன்னும் இறுக்கமாகிப் போனது. இரண்டு அணிகளும் தத்தமது வியூகத்தை விவாதிக்கும்போது தூரத்தில் ஒரு டிராக்டர் வந்து நின்றதை ஏகாம்பரம் கவனிக்கத் தவறவில்லை. வந்து நின்றது என்னவோ காலி டிராக்டராக தெரிந்தாலும், ஏகாம்பரத்திற்கு சென்ற வருடத்து ஞாபகம் தலையில் ஏறியது. ‘இந்த காட்டுமிராண்டி பசங்க திருந்த மாட்டாங்கட’ என்று நினைத்தவர், டிராக்டருக்குள் என்ன கொண்டு வந்திருப்பானுங்க, அது யாரொட டிராக்டர் என்று சிந்திக்க ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் டிராக்டரை சுற்றி கூட்டம் கூட, சாரயப் புட்டிகள் பரிமாறப்பட்டது. ஏகாம்பரத்திற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அடி தடி குத்து கொலை எல்லாம் சாரயத்துலதான் ஆரம்பிக்கும் என்று யோசித்தவர், ஒரு கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு இக்பாலுவிற்கு செய்தியை அனுப்பினார்.
மூன்றாவது சுற்று ஆரம்பமானது. இரண்டு அணிகளும் பலமாக மோதிக் கொண்டனர். இரத்த காயங்கள் ஏற்படத் தொடங்கியது. என்னதான் அனுபவம் இருந்தாலும் வாத்தியார் பாலு அசந்து போனார். திடீரென்று ஈட்டியூர் அணி டைம் அவுட் வாங்க, இரண்டு சாரயப் பாட்டில்கள் அணி வீரர்களுக்கு பாணமாக அளிக்கப்பட, வாத்தியார் பாலு பதட்டமடைய ஆரம்பித்தார். நல்லமுத்துவை அழைத்து விவரம் சொல்ல, அவர் இளங்கோவிடம் போய் ஏதோ பேச, இளங்கோ எதையோ பதிலுக்கொ சொல்லி வைக்க, நல்லமுத்து முகம் தொங்கி போய் வந்தார். விளையாட்டு வீரர்களுக்கு சாரயம் கொடுப்பதைப் பார்த்த செல்லப்பன், தன் பங்கிற்கு தானும் நாலு பாட்டில்களை தனது வீரர்களுக்கு வாங்கிக் கொடுத்தான். வாத்தியார் பாலு விசிலடித்து அசந்ததுதான் மிச்சம், டைம் அவுட் கிட்டத்தட்ட பெரிய இடைவேளை போல் ஆகிப் போனது.
போட்டி மீண்டும் தொடங்க, ஏகாம்பரம் லேசாக இடத்தை விட்டு நகர்ந்து சற்று தூரமாகி நின்றுக் கொண்டார். போலீஸ் கான்ஸ்டபிள்களும் கூட்டத்தை விட்டு தூரமாகவே போய் நின்றனர். எதிர்பார்த்தது போல், போட்டி கட்டுப்பாட்டை மீறிப்போக ஆரம்பித்தது. போதையில் விளையாடும் வீரர்கள் அடாவடித்தனமாக விளையாட போட்டி விதிகள் எல்லாம் மீறப்பட ஆட்டம் முரட்டுத்தனமாக மாறியது. பாலு இரண்டு அணியையும் அழைத்து போதையில் விளையாடுபவர்களை வெளியேற்ற பிரச்சனை இன்னும் அதிகமாகியது. இக்பாலிடமிருந்து ஏதோ செய்திவர, ஏகாம்பரம் ஆடுகளத்தில் வந்து நின்றார். நல்லமுத்துவை அழைத்து விவரத்தைச் சொல்ல, நல்லமுத்து இரண்டு அணி வீரர்களையும் அழைத்து நிலைமையை விளக்க கொஞ்சம் சமாதானம் ஏற்பட்டது. மீண்டும் விளையாட்டு துவங்க, மீண்டும் முரட்டுத்தனத்துடன் போட்டி நடக்க, மீண்டும் பிரச்சனை ஏற்பட அடிதடியில் வந்து நின்றது. ஆடுகளம் அடிதடி களமாக மாறியது. குய்யோ முய்யோ என்ற சத்தமும், வாய்க்கு வந்தபடி வந்த ஏசுதல்களும் தடார் மடார் என்ற அடிகளும் கூட்டத்தை இங்குமங்கும் சிதறி ஓட வைத்தது.
இக்பாலின் ஜீப் வேகமாக சத்தமிட்டு வந்து நின்றது. ஜீப்பை விட்டு இறங்கியவன் கையில் லத்தியை சுழற்றியபடி முன்னேற கூட்டம் இரு மருங்கிலும் சிதறி வழிவிட, வேகமாக வந்தவன் ஒலி வாங்கியை கையில் வாங்கினான். இக்பாலைப் பார்த்த பார்வையாளர்கள் சற்று ஆசுவாசமடைந்து அங்கங்கே நின்றனர். அடித்துக் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் விட்டு விலகி அவனைப் பார்க்க, இக்பால் பேச ஆரம்பித்தான்.
‘இரண்டு அணி வீரர்களும் ஆடுகளத்திற்கு வாருங்கள்’ இரண்டு அணி வீரர்களும் வந்து நிற்க ‘இதுல சாரயாம் குடிச்சவங்க, வெளிய வாங்க’ என்றான். இரண்டு அணியிலிருந்தும் அவர்கள் வெளியேற, ‘ஈட்டியூர் இளங்கோ, கோடாரி செல்லப்பன் இருவரும், ஆடுகளத்திலிருந்து மேடையில் சென்று அமருங்கள், போங்க’ என்று ஆணையிட்டான்.
இருவரும் தயங்கியபடி நகர இக்பால் மீண்டும் பேச ஆரம்பித்தான். ‘ஆட்டம் மீண்டும் தொடங்கலாம், யாரவது பிரச்சனை பண்ணுனீங்கன்ன.. பெரியவர் சின்னவர், தலைவர் தொண்டர்னு எதுவும் பாக்கமாட்டேன், என்னப்பத்தி உங்க யாருக்கும் தெரியாது. ஒழுங்க விளையாடி யார் ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு பரிசு கொடுங்க, பாரட்டுங்க’ என்று சொல்லிவிட்டு கூட்டத்தைவிட்டு வெளியேற, போட்டி மீண்டும் தொடங்கியது.
போட்டி விறுவிறுப்பு இல்லாமல், கொஞ்சம் சொதப்பலாகவே இருக்க, இக்பால் ஜீப்பில் ஏறி அமர்ந்தபடி அங்கெயே இருந்தான். மேடையில் செல்லப்பனும் இளங்கோவும் ஒருவரை ஒருவர் தின்றுவிடுவது போல் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, ஒருவழியாக கொலையூர் மூன்றாவது சுற்றில் வெற்றி பெற, போட்டி முடிவுக்கு வந்தது. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டரை நோக்கியும், கடைத்தெருவை நோக்கியும் நகர, பரிசளிப்பு விழா நடைபெற தயாரானது. இக்பாலும் ஜீப்புடன் நகர்ந்தான்.
பரிசளிப்பு விழா வழக்கம் போல் சுத்துபட்டு தலைவர்கள் எல்லோரையும் மேடையில் அழைத்து பேசுவதற்கு அழைத்துக் கொண்டிருந்தார் பெரிய பாண்டி. வெற்றி பெற்ற அணி வீரர்களும் அவர்களது ஆதரவாளர்களும் மேடையில் சூழ்ந்திருக்க, ஈட்டியூர் இளங்கோ மேடையை விட்டு இறங்கி டிராக்டரை நோக்கி நடந்தான். வானம் சிவந்து கொண்டிருக்க, இளங்கோவின் விழிகள் அதைவிட அதிகமாக சிவந்து விஷத்தை கக்கிக் கொண்டிருந்தது. அவனது தலையை கரும்பாலையில் விட்டு நசுக்கியது போல் கோபத்தின் வெப்பத்தில் தகித்தான். அவமானம் அவனை உலுக்கி எடுத்தது. அவனது கோபம் வெறியாக மாறி செல்லப்பனையும் தாண்டி இக்பாலின் மீது போய் நின்றது. இவன் ஏன் வந்தான் என்ற கேள்வி அவனை இன்னும் போதையேற்ற, இன்றைக்கு ஒரு வழி பண்ணிவிட வேண்டும் என்று தனது ஆட்களை அழைத்தபடி நடந்தான். டிராக்டரில் பதுக்கியிருந்த வெட்டறிவாள், ஈட்டி, கத்தி, கடப்பாரை என்று எல்லாவற்றையும் ஆளுக்கொன்றாய் எடுக்க, பரிசளிப்பு விழா நிறைவுபெற்றது. தியெட்டரிலிருந்து படம் தொடங்குவதற்கு முன்னதாக பக்தி பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. இருட்டு படலம் மைதானத்தை குடி கொள்ள, வெற்றி பெற்ற அணி வீரர்களுடன் செல்லப்பன் குதூகலித்துக் கொண்டிருந்தான். கொலையூர் ஆதரவாளர்கள் ஈட்டியூரை அக்கு வேறு ஆணி வேறாக அவர்களது தோல்வியை பிய்த்து இன்னும் அவர்களை அவமானப்படுத்த, இருட்டின் ஆதிக்கத்திற்காக டிராக்டரின் அருகில் கொலைவெறியுடன் நின்று கொண்டிருந்தனர் ஈட்டியூர் இளங்கோவும் அவர்களது கூட்டமும்.
(தொடரும்)
No comments:
Post a Comment