ஸ்டேஷன் வாசலில் வந்து நின்ற
இக்பால் ஏதோ அசம்பாவிதத்தை எதிர்பார்ப்பதுபோல் நிலை கொள்ளாமல் தவித்தான். ‘அய்யா’ என்றவாறு
கந்தசாமி தண்ணீருடன் வந்து நின்றான். ‘அய்யா டீ சொல்லட்டுமா’ என்று கேட்ட கந்தசாமியை பார்த்த இக்பாலின் மனம்
கபடி மைதானத்தையே சுற்றி வந்தது.
‘கான்ஸ்டபிள், ஏட்டுக்கு மெசேஜ் அனுப்பு... யாரும் கிரவுண்டவிட்டு போக
வேண்டம்னு சொல்லு, இன்னும் கொஞ்ச நேரத்துல் இன்ஸ்பெக்டர் வருவார்னு சொல்லு’ என்று
சொல்லிவிட்டு கன்ரொல் அறைக்குச் சென்றான். வழக்கம் போல் ரத்தினம் அரைத்தூக்கத்தில்
இருந்தார்.
‘ரத்தினம், எஸ்பி ஆபிசுக்கு கனெக்ட் பண்ணுய்யா’ என்றவாறு
அவரது அருகில் அமர்ந்தான். செல்போன் மூலமாக டி எஸ் பியை தொடர்பு கொள்ள
டயல் செய்தான். மறு முனையிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
‘அய்யா... எஸ் பி ஆபிஸ் கண்ரோல் ரூம்..’. என்றவாறு ரிசீவரை கையில் கொடுத்தான்.
ரத்தினத்திற்கு ஏன் இந்த
மனிதர் இவ்வளவு கவலைப்படுகிறார் என்று ஆதங்கப்பட்டார். அடிச்சிட்டுகிட்டு
சாவறவன் சாவட்டுமே. மனுஷனா இருந்தா கவலைப்படலாம். காட்டுமிராண்டி
கூட்டத்துக்கு ஏன் இவ்வளவு கவனம் எடுத்துக்கனும் என்றவாறு இக்பால் கண்ரோல்
ரூமிற்கு கூடுதல் படை வேண்டும் என்று முறையிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்துக்
கொண்டிருந்தார்.
திடுதிடுவென்று பூட்ஸ் கால்
சத்தம் எல்லோரையும் திடுக்கிட வைக்க கான்ஸ்டபில் சந்தானம் மூச்சிரைக்க வந்து
நின்றான்.
‘அய்யா... தியேட்டர்ல் நெருப்பு புடிச்சுகிடுச்சு...
கிரவுண்டுல ஆளுக்காளு வெட்டிக்கிராணுங்க...’ என்று அதிர்ந்தபடி வந்து நின்றான்.
நல்ல விஷயங்களைவிட கெட்ட
விஷயங்கள்தான் எதிர்பார்த்தபடியே நடக்கிறது. ஒரு நிமிடம் அமைதியாக நின்று
யோசித்தவன் கடகடவென்று செயல்பட ஆரம்பித்தான்.
‘கந்தசாமி, எல்லா கான்ஸ்டபிலும் கிரவுண்டுக்கு உடனே வர
ஏற்பாடு செய். ஏட்டய்யாவும் எட்டு கான்ஸ்டபிலும் கிரவுண்டுல எவன் நின்னாலும்
அடிச்சு விரட்டுங்க. ஒரு பய கிரவுண்டுல நிக்கக்கூடாது. எவனா
இருந்தாலும் தராதரம் பார்க்காம அடிச்சு விரட்டுனும். நாலு
கான்ஸ்டபிலுங்கல தியேட்டருக்கு அனுப்பி ஆளுங்களுக்கு ஏதும் சேதமில்லாம வெளியேத்த
ஏற்பாடு பண்ணுங்க. தியேட்டருல உதவி பண்ற பொதுமக்கள மட்டும்
அனுமதிங்க, மத்த எல்லாரையும் வெளியேத்த முயற்சி பண்ணுங்க. ரத்தினம், ஃபயர் சர்வீசுக்கு இன்பார்ம்
பண்ணுங்க’ என்று
சத்தமிட்டவாறு, கப் போர்டை திறந்து கைத்துப்பாக்கி ரவைகளை நிரப்பிக் கொண்டு
மீதமுள்ளவைகளை பேண்ட் பாக்கெட்டில் திணித்தவாறு சுற்றிப் பார்த்தான்.
‘அய்யா... என்ன வேணும’ என்றவாறு, ரத்தினம் முன்னால் வந்தார். ‘ஹெல்மெட்’ என்றவனை
பரிதாபமாகப் பார்த்தார்.
இல்லை என்பதை புரிந்துக்
கொண்ட இக்பால் ‘ரத்தினம்.. கன்ட்ரோல் ரூமோட தொடர்புலயே இருந்துக்கிட்டு
இருங்க. என்னோட போன்கால் அல்லது வயர்லெஸ் மெசேஜ் எப்பவும் வந்துகிட்டே இருக்கும்
என்றவாறு திடுதிடுவென்று வெளியேற, சந்தானம் ஜீப்பை ஸ்டார்ட் செய்து ரெடியாக
வைத்திருந்தான்.
கபடி மைதானம் களோபரமாகத்தான்
இருந்தது. ஜீப்பை விட்டு வெளியே வந்தவன் தியேட்டரின்
நிலையப் பார்க்க மனம் இன்னும் களோபரமானது. கிரவுண்டில் நடக்கும் அடிதடியைவிட தியேட்டரின்
நெருப்பு அவனை தடுமாற வைத்தது. நெருப்பு வானத்தைத் தொடுமளவிற்கு
கொளுந்துவிட்டு எரிந்தது. அஸ்பெஸ்டல் ஷீட் நிதானமாக எரிந்தது. காற்று
அதிகமாக இல்லாததால் நெருப்பு மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருந்தது. பெண்கள்
பிள்ளைகளின் அழுகுரல் எங்கு பார்த்தாலும் திகிலடைய வைத்தது. நிறைய
பேர் மரணமடைந்திருந்திருக்கலாம் என்ற பயம் அவனை நிலைகுலைய வைத்தது.
ஏட்டு வேகமாக வந்து
நின்றார். அவரின் காதருகில் கட்டளையை பிறப்பித்துவிட்டு, கைத்துப்பாக்கியை எடுத்து
வானத்தை நோக்கி சுட்டான். துப்பாக்கி சத்தம் அடிதடியில் இருந்தவர்களை
நிதானத்திற்கு கொண்டு வந்தது. ஏகாம்பரம் மற்றும் கான்ஸ்டபில்கள் கூட்டத்தை நோக்கி
கைத்தடியுடன் பாய்ந்தார்கள். கண்ணில் பட்ட எல்லோரையும் சகட்டு மேனிக்கு
அடிக்க, கூட்டம் எங்கெல்லாம் வழி கிடைத்ததொ அங்கெல்லாம் சிதறி
ஓடியது. இக்பால், மீண்டும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட...
ஒரு வழியாக கிரவுண்டில் இருந்த கூட்டம் உயிரைக் கையில் பிடித்தபடி ஓடியது.
இக்பால் தியேட்டரை நோக்கி
ஓடினான். பொது மக்கள் கையில் கிடைத்த பாத்திரங்களைக் கொண்டு தண்ணீரையும், மணலையும் வாரி இறைத்தனர். நெருப்பு
தகதகவெனெ எரிந்துக் கொண்டிருந்தது. தியேட்டர் நிர்வாகி இக்பாலிடம் அழுதவண்ணம் நடந்தவைகளை
சொல்ல...
‘உள்ள எத்தன பேர் மாட்டிருக்காங்கண்ணு தெரியுமா...’ என்ற கேள்விக்கு ‘தெரியலய்யா...’ என்று
பதறியவரிடம் கேட்டு ஒன்னும் ஆகப்போவதில்லை என்பதை உணர்ந்தவன், கையில் பெரிய மூங்கில் தடி
ஒன்றை எடுத்தபடி நெருப்பை நோக்கி நடந்தான். கந்தசாமி இக்பாலை மறித்து வேண்டாம் என்று
முறையிட, இக்பால் அவனைத் தள்ளிவிட்டு நடந்தான். மற்ற
கான்ஸ்டபில்களும், கையில் மூங்கில் தடிகளுடன் பின்னால் சென்றனர். மூங்கில்
தடியைக் கொண்டு முடிந்தவரை, எரிந்து விழும் கூரையை விலக்கிவிட்டவாறு உள்ளே
நுழைவதற்கு வழி ஏற்பாடு செய்தனர். இளைஞர்கள் சிலரும் இக்பாலும் சேர்ந்து போக...
ஒருவழியாக, குறைவாக எரியும் பகுதியில் பாதையை உண்டாக்கி உள்ளே நுழைந்தனர். ஏறக்குறைய
ஒரு மணி நேரம் போராடி முடிந்தவரை உள்ளே சிக்கிக் கொண்டவர்களை பொது மக்கள்
உதவியுடன் இக்பாலும் அவனது போலீஸும் வெளியேற்றினர். நெருப்பில் எரிந்த உடல்களின் நாற்றம் கொஞ்சம்
கொஞ்சமாக வெளியேற, ‘அய்யய்யோ....யாரு பெத்த பிள்ளையோ... சுடுகாடு நாத்தம்
அடிக்குதே’ என்று
வயதான பெண்கள் ஒப்பாறி வைக்க ஆரம்பித்தனர்.
ஊர் நாட்டண்மை தனது
கூட்டத்துடன் மெதுவாக வந்து சேர்ந்தார். கொலையூரும் ஈட்டியூரும் மோதிக் கொள்ள
ஆரம்பித்தவுடன் தனது ஆதரவாளர்களுடன் ஓடி ஒளிந்தவர், மைதானம் காலியாகிவிட்டது என்றவுடன் வந்து
சேர்ந்தார். தனது ஆட்களை நெருப்பை அணைப்பதற்கு ஏவிக்
கொண்டிருந்தார். நான்கைந்து டிவி சேனல் வேன்கள் டிரான்ஸ்மிட்டர்
வசதியுடன் வந்து சேர்ந்தது. பத்திரிக்கை செய்தியாளர்களில் ஒரு சிலரும்
இரண்டு சக்கர வாகனங்களில் வந்து சேர, கம்பியூர் நிலவரம் தமிழ்நாடு முழுக்க ஒளிபரப்ப
தயாரானது. பத்திரிக்கைக்காரர்களும், டிவி செய்தியாளர்களும் யாரிடம் கேட்டால் விபரம்
கிடைக்கும் என்று இங்குமங்கும் அலைய, காவல் துறை உயர் அதிகாரியாக அவர்களுக்கு
அகப்பட்டது ஏட்டு ஏகாம்பரம் மட்டுமே. அவருக்கு தெரிந்ததில் பாதியை மறைத்து மீதியை
மெண்டு முழுங்கி சொல்லி வைத்தார். சொன்னால் மேலதிகாரிகள் குற்றம், சொல்லாவிட்டால் பத்திரிக்கையாளர்கள் குற்றம்
என்று குழம்பி என்ன சொல்கிறோம் என்பதைக் கூட சரியாக சொல்லமுடியவில்லை. இதுதான் சந்தர்ப்பம் என்று நல்லமுத்துவும் தன்
பங்கிற்கு சொல்லி வைக்க சேனல்களில் கம்பியூரின் கலவரம் தமிழ் நாடு முழுக்க
ஒளிபரப்பானது. வழக்கம் போல் இரண்டு மணி நேரம் கழித்து தீயணைப்புப் படை
வந்து சேர்ந்தது. மக்கள் கூட்டம் அலறியடித்து வழிவிட... தீயணைப்பு வாகனங்கள்
வேகவேகமாக பணியில் இறங்கினர். கூடவே, கூடுதல்
போலீஸ் படையுடன் டி எஸ் பி விருத்தாச்சலமும் வந்து சேர்ந்தார். வந்திறங்கிய போலீஸ் படை தனது பணியில் ஈடுபட
பொது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இடத்தை காலி செய்தனர்.
‘இன்ஸ்பெக்டர்... எங்கய்யா...’ என்று
கேட்டபடி ஹெல்மட்டை சரி செய்தபடி சுற்றும் முற்றும் பார்த்தார் விருத்தாச்சலம்.
‘தியேட்டர் உள்ள இருக்காங்கய்யா...’ என்ற
ஏகாம்பரத்தின் பதிலைக் கேட்ட விருத்தாச்சல்த்தின் மனம் குற்ற உணர்வுடன் அலை
மோதியது. கடந்த இரண்டு நாட்களாக இக்பால் கூடுதல் படை
கேட்டு முறையிட்ட அனைத்தையும் அலட்சியப் படுத்தியதின் பலனை நேரடியாகப் பார்த்த
விருத்தாச்சலம், தன்னுடன் வந்த போலீஸ் ஆட்களையும், தீயனைப்பு படையினரையும்
பார்த்து கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்.
டிவி சேனல்களும், பத்திரிக்கையாளர்களும்
டிஎஸ்பியை சுற்றி கேள்வி மேல் கேள்வி கேட்க, மனிதர் அவர்களுக்கு பதில் சொல்வதா அல்லது
நிலைமையை சமாளிப்பதா என்று தெரியாமல் அலை மோதிக் கொண்டிருந்தார். சிலவற்றுக்கு
ஆமாம் என்று, சில் கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்ல முடியாது என்று அரை
மணி நேரத்தை அதிலேயே கழித்தார்.
தியேட்டருக்குள் ஒன்றிரண்டு
போலீஸ் மட்டும் சில இளஞர்களுடன் உள்ளே நுழைந்த இக்பால் தியேட்டரின் மறுபக்கத்தில், வயல் வழியாக கொஞ்சம்
பெண்களையும், மற்றும் இயலாதவர்களையும் வெளியேற்றிவிட்டு தீயணைப்பு
படையினருக்காக காத்திருந்தான். சீருடை அங்கங்கே நெருப்பில் எரிந்து, கை, கால் முகம் எல்லாம்
தீச்சுட்டுடன் அலங்கோலமாய் நின்றான். அவனை சுற்றி சில் இளைஞர்களும் ரத்தம் மற்றும்
தீக்காயங்களுடன் நின்று கொண்டிருந்தனர், காற்று முழுவதும் கருகிய உடல்களின்
தீநாற்றங்கள் பரவியிருந்ததால் மூக்கை கர்ச்சிப்பால் மூடியபடி இக்பால்
நின்றிருந்தான். அவ்வப்போது மொபைல் மூலம் காவல் நிலையத்திற்கும், ஏட்டு ஏகாம்பரத்திற்கும், அப்போதுதான் வந்திறங்கிய
டிஎஸ்பியுடனுடன் பேசி நிலைமையை விவரித்தும் வெளிநிலைமையையும் அறிந்துக் கொண்டான்
இக்பால். தீயணைப்பு படையினர் சுறுசுறுப்பாக வேலையில்
இறங்க இக்பாலும் இளைஞர்களும் வெளியேறினர்.
108 ஆம்புலன்சுகளும்
வந்துசேர காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் நடந்து கொண்டிருந்தது. இருக்கின்ற
வெளிச்சத்தில் எல்லோரையும் பார்த்து கொண்டு டிஎஸ்பி இருக்கும் இடத்தை நோக்கி
நடந்தான். எங்கு பார்த்தாலும் அழுகை குரல்களும், கூக்குரல்களும் மனதை
பிசைந்தெடுத்தது. அங்கங்கே டிவி சேனல்களின் செய்தியாளர்கள் கேமரா சகிதமாக யார்
யாரிடமெல்லாம் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தபடியே நடந்தான். இது
நாள் வரை இப்படி ஒரு மோசமான நிலையை அவன் பார்த்ததில்லை.
சல்மாவிடமிருந்து
கிட்டத்தட்ட ஒரு முப்பது மிஸ் கால்கள், இப்போது மீண்டும் ஒன்று வர, அதை அடக்கிவிட்டு அவளுக்கும்
மாமவிற்கும் தான் நன்றாக இருப்பதாக ஒரு SMS அனுப்பிவிட்டு
டிஎஸ்பியிடம் வந்து சேர்ந்தான்.
‘Casulaty நிறைய இருக்குமா’ டிஎஸ்பி
சற்று அச்சத்துடன்தான் கேட்டார்.
‘அப்படித்தான் நினைக்கிறேன். நிறைய பெண்களும் பிள்ளைங்களும்
அடிப்பட்டிருக்காங்க’ சொல்லிவிட்டு ஆம்புலன்சுகள் பக்கம் பார்த்தான். ‘medical units பத்தாது
சார்... இன்னும் ஒரு நாலு யூனிட்டாவது வேணும், பலமா காயப்பட்டவங்கள ரொம்ப நேரம் காக்க வைக்க
முடியாது’
விருத்தாச்சலம் மொபைல் மூலம்
தொடர்புகொள்ளவும், ஏகாம்பரம் வந்து சல்யூட் அடித்தார். கூடவே கந்தசாமி இரண்டு
டீயும், பன்னும் கொண்டுவந்து கொடுக்க, இக்பாலும் டிஎஸ்பியும் ஆளுக்கொன்றை வாங்கிக்
கொண்டனர்.
‘என்ன ஏகாம்பரம்...’ என்றவாறு பார்த்த இக்பாலை புரிந்துக் கொண்டவராக
‘அய்யா.. நாலைஞ்சு கொலையாவது நடந்திருக்குமோன்னு
சந்தேகப்படுறேன். ஆனா இதுவரைக்கும் ஸ்டேஷனுக்கு எந்த கம்பளயண்டும் வரல’ ஏகாம்பரம்.
‘அத அப்படியே விடுய்யா... நாளைக்கு பாத்துக்கலாம்’ என்று
டிஎஸ்பி ஆனையிட...’இக்பால், முதல்ல நீங்க காயத்துக்கு மருந்து போடுங்க’ என்றவரிடம்,
‘சார் நான் ஸ்டேஷன் போறேன்’ என்று
வணக்கத்தை வைத்தான்.
எந்த பதிலும் சொல்லாமல்
டிஎஸ்பி மௌனமாக இருக்க, மௌனமெ சம்மதமாக எடுத்துக் கொண்டு இக்பால் ஜீப்பை நோக்கி
நடந்தான். அவன் செல்வதையே பார்த்து கொண்டிருந்த டிஎஸ்பி
அருகில் கம்பியூருக்கு அடுத்து உள்ள மருதநாயக்கம்பட்டி இன்ஸ்பெக்டர் விநாயகம்
பக்கம் திரும்பினார். எதற்கும் தேவைப்படும் என்று விருத்தாச்சலம் அவரையும்
வரச்சொல்லி இருந்தார்.
‘என்னய்யா பண்ணலாம்’ டிஎஸ்பி கேட்டு வைத்தார். ‘அவன் போறத பார்த்தியா... ஒரு
மேலதிகாரி நிக்கறேன், அவன் ஸ்டேஷனுக்கு போறேன்னு சொல்றான்’
‘கோவத்துல இருக்கார் சார்.., சின்ன வயசு அப்படித்தான்’ விநாயகம்.
‘பிரச்சனை சீப் மினிஸ்டர் வரை போயிடுச்சு, எஸ்பி வேர அடிக்கடி போன்
போட்டு கொடையராரு, டிபார்ட்மென்ட் ஆக்ஷன் என்னன்னு கேட்டு மண்டைய காச்சுரார், என்ன பண்ணலாம், மீடியா வேற கண்ட கண்ட
கதையெல்லாம் கற்பனை பண்ணி நம்பகிட்டேயிருந்து வாயை கிளறுராங்க’ டிஎஸ்பி
விநாயகம், புகைந்து கொண்டிருக்கும்
தீயேட்டரை பார்த்தபடி ‘ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணுங்க சார், எல்லாத்தையும் அவர் தலை மேல
போட்டு இப்போதைக்கு முடிச்சுடலாம். அப்புறம் எங்காவது டிரான்ஸ்பர் வாங்கி கொடுத்து
இக்பாலை சரி செஞ்சுக்கலாம்’
‘அப்படி ஒன்னும் ஈசி இல்ல’ இறுக்கமான முகத்துடன் சொன்னார் விருத்தாச்சலம். ‘இவனோட மாமா டிபுடி கலெக்டர், இவனோட அப்பா ரிட்டையர்டு DRO, அங்கங்க ஆளுங்க வச்சுருக்கானுங்க’
‘அப்புறம் ஏன் சார் இந்த பாடவதி புடிச்ச ஊருக்கு வந்து
சார்ஜ் எடுக்கனும். நீங்க ஏன் தயங்குறீங்க, நீங்க சொன்னா எஸ்பி கையெழுத்து போடமாட்டாரா
என்ன’
‘நீ சொல்றதுதான் சரியா தெரியுது, வா ஸ்டேஷனுக்கு போகலாம்’ என்றவரிடம்
‘உடனே போகாதீங்க.. கொஞ்சம் நேரம் ஆகட்டும், இள ரத்தம் கொஞ்சம்
பக்குவமாத்தான் அனுப்பி வைக்கனும்’ விநாயகம் சிரித்தபடி டிஎஸ்பியை தடுத்து ‘கொஞ்சம் உட்காருங்க’ என்று
சொல்லி அருகில் இருந்த போலீசுடன் ‘யோவ் ஒரு சேர் ஒன்னு எடுத்துட்டு வாய்யா’ சத்தமிட்டார்.
=====================
‘யோவ் ரத்தினம்’ என்று சத்தமிட்டபடி ஸ்டேஷன் உள்ளே நுழைந்தான்.
வேகமாக வந்தவரிடம், ‘கன்ரோல்
ரூம் ரெக்கார்ட் எதுவும் என்னோட அனுமதியில்லாம யாருக்கிட்டயும் காட்டக்கூடாது, அது டிஎஸ்பியா இருந்தாலும்
சரி’ என்று
கத்திவிட்டு நாற்காலியில் சென்று அமர்ந்தான்.
சந்தானம் ஒரு நர்சுடன் உள்ளே
வேகமாக வந்தான்.
‘அய்யா முதல்ல காயத்துக்கு மருந்து போடுங்க’ சந்தானம்
சொல்ல, நர்ஸ் இக்பாலை நெருங்கி தனது வேலையை ஆரம்பித்தாள்.
‘நல்லமுத்துவ உடனே ஸ்டேஷனுக்கு கூட்டிக்கிட்டு வாய்ய’ என்று
கட்டளையிட மற்றொரு கான்ஸ்டபிள் மளமளவென்று இறங்கி ஓடினான்.
‘ரத்தினம், நல்லமுத்து வந்தவுடன கிரவுண்டுல என்ன நடந்ததுன்னு
ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கிடுங்க’ மொபைல் சத்தமிட்டது. எடுத்தவுடன்
மறு முனையில் ஒரே அழுகை, சல்மாவால் பேசக்கூட முடியவில்லை.
‘சல்மா, நான் நல்லா இருக்கேன்’ இவன்
சொல்வதை கேட்க அவள் தயாரக இல்லை. ‘அழாத, சொல்றேன்ல’ என்றவனிடம் அவள் கேட்பதாக இல்லை.
‘மூணு மணி நேரமா... கால் பண்ணிகிட்டு இருக்கேன், டிவியில பத்து நிமிஷத்து ஒருமுறை கலவரத்தைப்
பத்தி சொல்லிகிட்டு இருக்காங்க, யார் யாரோல்லாம் டிவியில வர்ராங்க, பேசுறாங்க, உங்க ஏட்டு ஏகாம்பரம் கூட
பெசுறார், நீங்க எங்க போனீங்க, உங்களுக்கு என்ன ஆச்சுன்று சொல்றதுக்கு
ஒருத்தரும் இல்ல’ பாதி
அழுகையும் மீதி பேச்சுமாக அவள் பேசி வைத்தாள்.
‘சாரி, சாரி சல்மா... நிலைமை அப்படி, நான் உனக்கு விளக்கமா பிறகு பேசுறேன்’
‘நான் உடனே அங்க வர்ரேன்’ என்றவளிடம்
அவரசமாக ‘ஒன்னும் ஆகல, நான் நல்லாதான் இருக்கேன், இந்த ராத்திரியில முண்ணூறு
கிலோ மீட்டர் நீ தனியா வரமுடியாது. நீ நிம்மதியா இரு, கொஞ்சம் முக்கியமான
வேலையிருக்கு, முடிச்சுட்டு நான் கால் பண்றேன், நீ இங்க வரவேணாம், என்ன புரியுதா’ சொல்லிவிட்டு அவளின் பதிலை எதிர்ப்பார்க்காமல் மொபைலை மேசை
மீது வைத்தான்.
குப்பென்று வேர்த்துக்
கொட்டியது அவனுக்கு. சல்மாவை அவன் அழுது பார்த்ததில்லை, அவளின் அழுகைக் குரல் தலையை
விட்டு நீங்காமல் குடைந்துக் கொண்டேயிருந்தது. தலை முழுவதும் தாறு மாறாக என்னென்னவோ ஓடிக்
கொண்டிருந்தது, மக்களின் அழுகுரல், கூக்குரல், அடிப்பட்டவர்களின் அழுகை, சின்னஞ்சிறு பிள்ளைகளின் ஒலம், வலியாலும் தீப்புண்ணலும்
அழும் அவர்களின் சத்தம், ஆம்புலன்சுகளின் அலறல், தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார வேண்டும்
போல் இருந்தது.
சிறுது நேரம் கண்களை மூடி
நின்றவன், நீண்ட சுவாசத்தை ஒன்றிரண்டு விட்டு சமநிலைக்கு வர
முயற்சித்தான். ‘அமைதி அமைதி’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். ‘விடக்கூடாது, இதுக்கு காரணமான எவனும்
தப்பிக்கக் கூடாது’ பற்களை
கடித்தபடி நின்றான்.
காயங்களுக்கு மருந்தும், பிளாஸ்திரியும் போட்டுவிட்டு
நர்ஸ் நகரவும், விருத்தாச்சலம் விநாயகத்துடன் வந்து சேர்ந்தார்.
‘நூத்துக்கு மேல காயப்பட்டிருக்காங்க, பத்து பேரு ரொம்ப சீரியஸ்’ என்றவாறு
ஏகாம்பரம் அருகில் வந்து நின்றார். அவரவர்கள் ஆளுக்கொரு இருக்கையில் அமர, இக்பால் மெதுவாக தனது
இருக்கையில் அமர்ந்தான்.
‘பிள்ளைங்க எத்தனை பேரு’ இக்பால்
‘பாதிப் பேரு பிள்ளங்கதான் சார்’ ஏகாம்பரம்.
‘இறந்து போனது’ இக்பால்
‘இது வரைக்கும் மொத்தம் பதினைஞ்சு’ ஏகாம்பரம்
‘பிள்ளைங்க யாரையும் போஸ்ட்மார்டம் செய்ய வேணாம்’ அவங்க
அவங்க பெத்தவங்ககிட்ட உடனே ஒப்படைச்சுடுங்க’ இக்பால்.
ஏகாம்பரத்தின் முகத்தையே
பார்த்தவனிடம் ‘இக்பால்’ என்றழைத்த விருத்தாச்சலத்தின் பக்கம் பார்வையை
திருப்பினான்.
‘காயம் நிறைய பட்டிருக்கும்போல இருக்கு, நீங்க வீட்டுக்கு போய்
ரெஸ்ட் எடுங்க இக்பால்’ சொல்லி முடித்த டிஎஸ்பியின் கண்களை தீர்க்கமாக ஊடுருவினான்.
சற்று மருண்டவராக இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார் விநாயகம்.
‘வேலையில்ல, வீட்டுக்கு போன்னு சொல்றீங்களா’ இக்பாலின்
இப்படி ஒரு நேரடி பதிலை விருத்தாச்சலம் எதிர் பார்க்கவில்லை.
‘இல்ல இக்பால், பிரச்சனை ரொம்ப சீரியச இருக்கு, நீங்க சரியா கையாளன்னு எஸ்பி
ஆபிசுலேர்ந்து instruction வந்திருக்கு.
‘மூணு மணி நேரத்துக்குல்ல எஸ்பி ஆபிசுல முடிவே
பண்ணிட்டாங்களா, யாரு சார் இங்கேருந்து ரிப்போர்ட் அனுப்பினது, மீடியாவா இல்ல நீங்களா’
‘இக்பால், don’t be silly, this is your jurisdiction, இப்படி ஒரு சம்பவத்தை தடுக்க என்ன நடவடிக்கை
எடுத்தீங்க’
‘இப்ப விசாரனை நடத்த வந்திருக்கீங்களா, இல்ல பிரச்சனையை சமாளிக்க
வந்திருக்கீங்களா’ இக்பால்.
‘ரெண்டும்தான்’ விருத்தாச்சலம். ‘கலவரத்துக்கும்
தியேட்டருக்கும் என்ன சம்பந்தம். இவ்வளவு பெரிய தியேட்டர் எப்படி கொஞ்ச
நேரத்துல் எரிஞ்சு சாம்பலாக முடியும்’
‘நீங்க என்ன சப்போர்ட் பண்ணீங்க’ எழுந்தான்
‘இரண்டு நாளா மெசெஜுக்கு மேல மெசெஜ், அடிஷனல் போர்ஸ் முடியாதுன்னு
நீங்கதான சொன்னீங்க, இப்ப எப்படி சார், இத்தனை போர்சும் உங்கக்கூட வந்தாங்க, உங்க அலட்சியம்தான் இதுக்கு காரணம்’
‘நான் சீனியர் ஆபிசர், நிதானமா பேசுங்க’ விருத்தாச்சலம்
கோபமாக பேச, ஏகாம்பரம் கதவை சாத்திவிட்டு வெளியேறினார்.
‘அதுக்காக உண்மைய பேசக் கூடாதா?’ உங்கள
காப்பாத்திக்க என்ன பலியாக்க நினைக்கிறீங்களா’ நேரடியாகவே
கேட்க, விநாயகம் குறுக்கிட்டார்.
‘இக்பால், உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது, ஒரு வாரத்துல எல்லாம்
சரியாயிடும், டிபார்ட்மெண்ட்ல இதல்லாம் சகஜம்’
‘உங்க பிரச்சனை சரியாயிடும்’, டிஎஸ்பியை பார்த்தபடி பதில்
சொன்னான். ‘ஏன் என் பிரச்சனைகூட சரியாயிடும், நீங்க செஞ்ச சஸ்பென்ஷன்
தப்புன்னு நான் என்குயரில புரூவ் பண்ணிட்டு நானும் பொயிடுவேன், இந்த ஊரு பிரச்சனை? அது அப்படியேதான் இருக்கும்’ இக்பாலின்
பார்வையை சந்திக்க முடியாமல் விருத்தாச்சலம் தத்தளித்தார்.
‘சார், நீங்க வந்ததிலேருந்து ஒரு குற்ற உணர்வோடத்தான் எனக்கிட்ட
பேசிக்கிட்டு இருக்கீங்க, நானும் உங்க மேல கோபமாத்தான் இருந்தேன், ஆனால் இது தீர்வு இல்ல’ என்றவாறு
இடுப்பில் கைவைத்தபடி நின்றான்.
விருத்தாச்சலத்திற்கு மனம்
நிலை கொள்ளாமல் தவித்தது. இக்பாலை சஸ்பெண்ட் செய்வதுதான் சரி என்று மனம்
சுற்றி சுற்றி அடித்துக் கொண்டிருந்தது. வெளியில் டிவி செய்தியாளர்கள் கூட்டம் அங்கு
நடக்கும் நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் ஒளி பரப்பிக் கொண்டிருந்தனர். எஸ்பிக்கு
என்ன பதில் சொல்வது. இவன் தலையை உருட்டவில்லை என்றால் என் தலை
உருளும். சஸ்பெண்ஷன் தப்புன்னு புரூவ் பண்ணி இக்பால் தன்னை காப்பாத்திக்க
எப்படியும் ஆறு மாசம் ஆயிடும். அத பிறகு பார்த்துக்கலாம், இப்போதைக்கு இவனை வீட்டுக்கு
அனுப்பினாதான் தான் நிம்மதியாக வீட்டுக்குப் போகமுடியும் என்று முடிவுக்கு வந்தவர்
சஸ்பென்ஷன் லட்டரை தயார் செய்ய செல் போனை கையில் எடுத்தார்.
‘என்ன சார், சஸ்பென்ஷன் லட்டரை ரெடி பண்ண புறப்பட்டுடீங்க
போல இருக்கு, விருத்தாச்சலம் சற்று தாமதித்து நின்றார். ‘நீங்க
உங்க வேலைய செய்ங்க, நான் என் வேலையை செய்யிறேன்’
(தொடரும்)
No comments:
Post a Comment